சனி, 27 ஜூன், 2009

"தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடூரங்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுக்கும்"

அனைத்துலக சமூகங்களினதும் நிறுவனங்களினதும் சாட்சியங்களும் நிவாரணங்களும் மக்களைச் சென்றடையாது தடுப்பதை சர்வதேச சமூகம் அனுமதிப்பதற்கு, நிகழ்காலத்தில் சிறீலங்கா ஒரு சிறந்த உதாரணமாகும் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனிதாபிமானச் செயற்பாடுகளின் துணைச் செயலாளராகவும் அவசரகால நிவாரண நிதிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஜன் எகலாண்ட் (Jan Egeland), உலக அரசுகள் 2005இல் பிரமாணம் எடுத்துக்கொண்ட "பாதுகாப்பதற்கான கடமை" (R2P)யை நிறைவேற்றத் தவறியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 
இந்த முகாம்களுக்குள் பெண்கள் பெரும் கொடூரங்களை எதிர்நோக்குகின்றார்கள் எனக்கூறியுள்ள அவர், தனக்குப் பின் பொறுப்பேற்ற ஜோன் கோல்ம்ஸ் வவுனியா தடுப்பு முகாம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார்.

 
2005 செப்டெம்பரில் ஐ.நாவின் உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு தயாராகிக்கொண்டிருந்த வேளையில் கொபி அனான் "பரந்த சுதந்திரம்" என்ற பெயரில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்து உலகத் தலைவர்களால் பாராட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பதற்கான கடமையான (Responsibility To Protect - R2P) ஆனது உலகில் எங்கு நடக்கும் இனப்படுகொலைகளையும் இனச் சுத்திகரிப்புகளையும் எதிர்த்து மனிதாபிமானத்தையும் மனித உரிமைகளையும் நிலை நிறுத்துவோம் என உறுதியெடுக்கப்பட்டது.

 
இதுவே R சட்ட அமைவாகத் தோற்றம் கொண்டது.

 
சிறீலங்காத் தடுப்பு முகாம்களில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்கள் வெளிவருவதில்லை. ஏனெனில் எங்களுக்கு அங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. எமது சாட்சியங்கள் அங்கு ஏற்பட்டுவிடாது தடுக்கப்பட்டுள்ளது.

 
ஆனாலும், அங்கு நடக்கும் கொடூரங்கள் உண்மையானவை. இங்கு இழைக்கப்படும் அநீதிகளும் கொடுமைகளும் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுக்கும் என நான் நம்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
கடந்த வாரம் ஐ.நா. பணியாளர்கள் கூட நிழற்படக் கருவி, ஒளிப்படக் கருவிகளையோ கொண்டு செல்வது தடுக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் மற்றும் 17 மனித உரிமைப் பணியாளர்களின் விசாரணைகளை நிறுத்தியுள்ளமை தொடர்பாகவும் "இன்ன சிற்றி பிரஸ்" ஊடகவியலாளர் ஜோன் கோல்ம்சை வினவியபோது அதற்குரிய பதில்கள் எதனையும் அவர்கள் வைக்கவில்லை.

 
இது இவ்வாறிருக்க, இலங்கையில் மோதலில் சிக்குண்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புச்சபை வரலாற்றுத் தவறை இழைத்துவிட்டது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

 
இலங்கையின் தற்போதைய மனிதாபிமான, மனித உரிமை நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாக முயல்வதன் மூலம் கடந்த காலத்தில் தனது பாராமுகத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை இனியாவது சரி செய்வதற்கு பாதுகாப்புச் சபை முன்வரவேண்டும் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

 
முகாம்களில் உள்ள மக்களின் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் நடமாட்ட சுதந்திரம் என்பவற்றை ஐ.நா. பாதுகாப்புச் சபை, வலியுறுத்த வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் என்ற சந்தேக நபர்களின் அடிப்படை மனித உரிமைப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

 
ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தூதுவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகம், இரு தரப்பினதும் மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

 
இலங்கையில் மோதலில் சிக்குண்ட மக்களின் நிலை குறித்து பாதுகாப்புச் சபை காட்டிய அலட்சியம் பாரிய வரலாற்றுத் தவறாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

 
இரு தரப்பினரதும் மோசமான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு மத்தியில் இது இடம்பெற்றது. எனினும் பாதுகாப்புச்சபை இந்த விடயம் குறித்து ஆராயக்கூடத் தவறியது. உத்தியோகப்பற்றற்ற பேச்சுகள் என்ற அடிப்படையில் மாத்திரம் இலங்கை விவகாரத்தை அணுகியதன் மூலம் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுப்பதைப் பாதுகாப்புச்சபை தவிர்த்துக்கொண்டது.

 
பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஏழாவது அறிக்கை மோதலின் போதும் தற்போதும் பொதுமக்கள் அனுபவித்த, தொடர்ந்தும் அனுபவிக்கின்ற துயரங்களை வலியுறுத்தியது. மோதலில் ஈடுபட்ட இரு தரப்பும் மனித உயிர்கள் குறித்து வேண்டுமென்றே அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்ததன் மூலம் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியுள்ளன.

 
விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுடன் பொதுமக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறுவதைத் தடுத்து வந்தனர். சிறீலங்கா அரசும் மோசமான தவறுகளை இழைத்தது. இவை எவற்றையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறீலங்கா அரசு கூறுவதை மன்னிக்க முடியாது.

 
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை எனப் பாதுகாப்புச் சபைக்கு மறுப்புத் தெரிவித்த போதிலும் அரச படைகள் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் அதிகமாகவுள்ள பகுதிகள், வைத்தியசாலைகள் மீது இந்தத் தாக்குதலை மேற்கொண்டன. எனினும் தொடரும் மனிதாபிமான, மனித உரிமை நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய தேவை பாதுகாப்புச்சபைக்குள்ளது.

 
இதன்மூலம் தனது முந்தைய செயற்பாடின்மை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சிறிதளவுக்கு நிவர்த்தி செய்யலாம். சிறீலங்கா அரசாங்கம் நடத்தும் மூடப்பட்ட நலன்புரி முகாம்களில் 3 இலட்சம் தமிழ் மக்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 
முழுக் குடும்பங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் தொழிலுக்கோ அல்லது உறவினர்களுடன் செல்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: ஈழமுரசு (26.06.2009)
 


கருத்துகள் இல்லை: