புதன், 10 ஜூன், 2009

தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை விவாதங்கள் - ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன

நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வருகின்ற சூலை 12 2009 இல் திருச்சியில் நடத்தவிருக்கும் ”தமிழ்த் தேசியம்” சிறப்பு மாநாட்டிற்கான வரைவு அறிக்கை இது. தோழமை அமைப்புகள் மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் உணர்வாளர்கள் பங்குபெறவிருக்கும் இம்மாநாட்டில் இறுதி செய்யப்படவிருக்கும் இவ்வறிக்கையின் மீது விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றை tamizhdesiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், ‘தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 44/1, பசனை கோயில் தெரு, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17.’ என்ற முகவரிக்கும் உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டதும், விடுதலைப்புலிகளும், ஆற்றல்மிகு தளபதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தமிழீழத் தேசியத்தலைவர் “பிரபாகரன் உடல் இதோ” என்று ஒட்டு வேலை செய்து ஓர் உடலை சிங்களப்படை காட்டியதும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களை ஒவ்வொரு வகையில் தாக்கி சிதைத்துள்ளது.

பக்கத்தில் தமிழ்நாட்டில் நாம் ஆறரைக்கோடி பேர் இருந்தும், நம் இன மக்கள் ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை. தமிழின அழிப்புப் போரின் கடைசி மூன்று நாள்களான 2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் மட்டும் 45 ஆயிரம் தமிழ் மக்களை பாஸ்பரஸ் குண்டு வீசியும், கொத்து வெடிகுண்டு போட்டும், சிங்களப்படை கொன்றது. தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் குழந்தைகளையும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்களையும் குறிவைத்து அழித்தது சிங்களப்படை.

இந்தத் தமிழ் இன அழிப்புப்போரை, சிங்களர் மட்டுமா நடத்தினர்? இந்தியாவும் சேர்ந்து நடத்தியது.

2008 அக்டோபர் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில், பெரும்பாலான கட்சிகள், பெரும்பாலான மக்கள், ஈழத்தில் போர்நிறுத்தம் செய்ய இந்தியாவை வலியுறுத்திப் பலவகைகளில் போராடினோம்.தமிழ்நாட்டில் இப்போராட்டங்கள் தீவிரப்பட, தீவிரப்பட, ஈழத்தமிழர் அழிப்புப்போரை இந்தியா மேலும் தீவிரப்படுத்தியது. தமிழகத்தின் வழியாகவே, கனவகைப் போர்க்கருவிகளை இலங்கைக்குப் பகிரங்கமாக அனுப்பிவைத்தது.

ஈழத்தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? இலங்கை நாடு 1948 பிப்ரவரி 4-ஆம் நாள் வெள்ளையரிடமிருந்து விடுதலைப்பெற்றது முதல் சிங்களப் பேரினவாத அரசு தமிழினத்தை ஒடுக்கியது; இரண்டாம் தரக் குடிகளாக நடத்தியது. உரிமைகள் கேட்டுப் போராடிய தமிழர்கள் விடுதலை பெற்றால் ஒழிய வேறு தீர்வில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

வட இந்தியாவிலிருந்து வந்தேறிய சிங்களர் புகுவதற்கு முன்பிருந்தே முழு இலங்கைக்கும் உரிய மண்ணின் மக்கள் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகத் தென் இலங்கைக்குப்போன மலையகத் தமிழர்கள் வேறு; ஈழத்தமிழர்கள் வேறு. மலையகத் தமிழர்களின் தேவை சமஉரிமை. ஈழத்தமிழர்களின் தேவை தாயக விடுதலை.

அமைதிவழியில், சனநாயகவழியில், தேர்தல் வழியில் தாயக விடுதலை கேட்ட தமிழர்களை, அவ்வப்போது சிங்களப்படை சுட்டுக்கொன்றது; சிறைப்பிடித்து சித்திரவதை செய்தது. எதிர்வினையாக எழுந்தது விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர். உலகத்தின் தலைசிறந்த விடுதலைப்படையாக, விடுதலை இயக்கமாகத் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் அமைப்பு எழுந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதை இந்தியா தனது இலக்காக எடுத்துக்கொண்டது. இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை அழிப்பதைத் தனது வேலைத் திட்டமாக இந்தியா ஏற்றுக்கொண்டது.

இந்தியாவைத் தனது தாய்நாடு போல் நேசித்தவர்கள் ஈழத்தமிழர்கள். காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, இந்திராகாந்தி போன்றவர்களைத் தங்கள் தலைவர்களாக நேசித்தார்கள்.

அப்படி நேசித்த மக்கள் மீது 1987-இல் படையெடுத்தார் இராசீவ்காந்தி. ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படை. அதில் பாதிக்கப்பட்டோர், இராசீவ்கொலையில் ஈடுபட்டிருக்கலாம்.

ஈழத் தமிழ்இன அழிப்புப்போரை இந்தியா நடத்துவதற்கான அடிப்படைக்காரணம் இராசீவ்காந்தி கொலை அல்ல.

இந்திய அரசு நேருகாலத்திலிருந்து இன்றுவரை இலங்கையில் சிங்கள இனத்திற்கு ஆதரவாகவும் தமிழ் இனத்திற்கு எதிராகவும் தான் இருந்து வருகிறது.

நேரு காலத்தில், சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டில் தி.மு.க. அழுத்தம் கொடுத்தது. அக்கோரிக்கையை நேரு ஆய்வு செய்கிறார் என்று தெரிந்ததும், அப்போதைய இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா புதுதில்லி வந்து நேருவைச் சந்தித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தினார். சேது கால்வாய் ஆழப்படுத்தப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் விரிவடையும்; கொழும்பு துறைமுகம் தனது முகாமைத்தன்மையை இழந்து விடும் என்று அவா; கூறினார். அக்கோரிக்கையை ஏற்று நேரு அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையை வளப்படுத்த, தேயிலைத் தோட்டங்கள் செழிக்கத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழக வம்சாவழித்தமிழர்கள் பதினைந்து லட்சம் பேர்க்குக் குடியுரிமை வழங்க மறுத்தார்; சிரிமாவோ பண்டாரநாயகா.குடியுரிமை கோரி இலங்கையில் தமிழர்கள் போராடினார்கள். தமிழ் நாட்டிலும் அக்கோரிக்கையை ஆதரித்து ஆர்ப்பரித்தனர் தமிழர்கள்.

சிங்கள அரசின் விருப்பத்தை ஏற்று, அப்போதைய இந்தியப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஐந்துலட்சம் தமிழர்களை அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வரவழைத்தார். ஐந்துலட்சம் தமிழர்கள் இலங்கையில் நாடற்றவர்களாக இருக்கவும் சாஸ்திரி ஒப்புக்கொண்டார். இதற்கு சிரிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் என்று பெயர்.

இப்பொழுது, தமிழகக் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் காரணமாக, சேதுக்கால்வாய்த்திட்டம் செயலுக்கு வந்தது. அதை இலங்கை அரசு எதிர்த்தது. வடநாட்டுக் கட்சிகளும் “இராமர் பாலம்” இடிக்கப்படுகிறது என்று கூறி எதிர்த்தன. அத்திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவைத் தனக்கு வேண்டுமென சிங்கள அரசு கேட்டது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தார்.

தமிழ்நாட்டு மீனவர்களை நானூற்றைம்பது பேர்க்கு மேல் சிங்களப்படை சுட்டுக் கொன்றுள்ளது. இன்னும் எவ்வளவு பேரைக் கொல்லும் என்று சொல்லமுடியாது. இவ்வளவு இனக்கொலையையும் இந்தியாவின் துணையோடுதான், இந்தியாவின் ஆதரவோடுதான் சிங்களப்படை செய்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் அரபிக் கடலில் எல்லைதாண்டி மீன் பிடிக்கும் மீனவரை அடுத்த நாடு சுட்டுக்கொல்வதில்லை. தளைப்படுத்தி பின்னர் விடுவிக்கிறார்கள். இந்த அணுகுமுறைகள் தமிழக மீனவர்களிடம் சிங்கள அரசு கடைபிடிப்பதில்லை. அந்நாட்டு அத்துமீறலை இந்தியா தடுப்பதில்லை.

சிங்களர்க்கும், தமிழர்க்கும் இடையே முரண்பாடு வந்தால், இந்தியா சிங்களர் பக்கம் நிற்கும்; தமிழர்களைப் பலியிடும். ஈழத்தமிழர்கள் பால் மட்டுமல்ல, தமிழகத் தமிழர் மீதும் இந்தியா கொண்டுள்ள எதிர்ப்பு இதே போன்றதுதான்.

காவிரி, முல்லைப்பெரியாறு நீர் உரிமையில் நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அவ்வப்போது கொடுத்த தீர்ப்புகளைச் செயல்படுத்த கன்னட அரசும், மலையாள அரசும் மறுத்தன.

இத்தீர்ப்புகளைச் செயல்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டப்படி எல்லா அதிகாரமும் இந்திய அரசிடம் இருக்கிறது. ஆனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் தாகத்திற்கும், பாசனத்திற்கும் தண்ணீர்ப் பெற்றுத் தர இந்திய அரசு முயலவி;ல்லை. மாறாக மறைமுகமாக, கன்னடர்களையும், மலையாளிகளையும் ஆதரித்துத் தமிழர்களைப் பழிவாங்கியது. அரசமைப்புச்சட்ட விதி 355-இன் கீழ், நடுவர்மன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்துமாறு கட்டளைத் தாக்கீது அனுப்பிச் செயல்படுத்தியிருக்கலாம். அக்கட்டளைத் தாக்கீதையும் செயல்படுத்தவில்லை என்றால், விதி 356-இன் கீழ் குறிப்பிட்ட மாநில நிர்வாகத்தை இந்திய அரசு தன் கையிலெடுத்து, மேற்கண்ட தீர்ப்புகளைச் செயல்படுத்த முடியும்;.

அரசமைப்புச்சட்டத்தில் இந்த அதிகாரங்கள் இருந்தும், தமிழ்நாட்டிற்குரிய நீதியை நிலைநாட்ட இந்திய அரசு முன்வரவில்லை. மாறாக அந்த மாநிலங்களின் அத்துமீறல்களை மறைமுகமாக ஊக்குவிக்கின்றது.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஆந்திரப்பிரதேசம், பாலாற்றில் தமிழக எல்லையை ஒட்டி பல அணைகளைக் கட்டுகிறது.

வரலாற்றுக் காலந்தொட்டு நமக்குரியதாக இருந்துவரும் காவிரி உரிமையை மறுத்தது மட்டுமின்றி, கன்னட வெறியர்கள், கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களை 1991-1992 -இல் அடித்துத் துன்புறுத்தி, வீடுகளைக் கொள்ளையிட்டு, கொளுத்தி, நூற்றுக் கணக்கானோரைக் கொன்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் நோக்கி ஓடிவந்தனர்.

இந்தக்கொலை, கொள்ளை குற்றங்களுக்காக, ஒருவர் மீது கூடக் கர்நாடகத்தில் வழக்கு இல்லை. யாரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை. கன்னட வெறியர்களின் கொலை, கொள்ளைச் செயல்களை இந்திய அரசு மறைமுகமாக ஆதரித்ததால் தான் அக்குற்றவாளிகள் தப்பிக்க முடிந்தது.

ஒகேனக்கலில், அருவி அருகே, தமிழக அரசு ஆண், பெண் உடை மாற்றும் அறை கட்டியதைக் கன்னட அரசு தடுத்துவிட்டது. 2005 செப்டம்பர் மாதம் இக்கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளை அங்கு வந்த கன்னட வெறியர்கள் தாக்கி, கட்டுமானக்கருவிகளைப் பிடுங்கி, ஓடுகின்ற காவிரி ஆற்றில் வீசினர். அத்தோடு அக்கட்டுமானப்பணி நின்றுவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தைக் கர்நாடக அரசு எதிர்க்கிறது. அத்துடன், ஒகேனக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தம் என்று உரிமை கோருகிறது.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பணிபுரியும் தமிழகப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்களையும் ஊழியர்களையும், அவ்வப்போது கேரள வனத்துறையினர் அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

மேற்கண்ட அட்டூழியங்களைச் செய்வது கேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. இதற்கு முன் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போதும் இதேபோல் தான் நடந்துகொண்டது.

கர்நாடகத்தில், காவிரி உரிமைக்கு எதிராகச் செயல்படுபவை,காங்கிரஸ், ஜனதாதள, பா.ஜ.க. கட்சிகளும் அவற்றின் ஆட்சிகளும் தாம்.

மேற்கண்ட கட்சிகள் அனைத்தும் இந்திய தேசியம், இந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பேசக்கூடியவை.

ஈழத் தமிழின அழிப்புப்போரில் இந்தியா பங்கு கொண்டது தனிப்பட்ட ஒரு திட்டமல்ல ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் மீதும் இந்திய ஆளும்வர்க்கம் கொண்டுள்ள பகை உணர்ச்சியின் கொடூர வெளிப்பாடே அது.

குறிப்பாக, தமிழ் நாட்டுத் தமிழர்கள் மீது இந்திய ஆளும்வர்க்கம் கொண்டுள்ள பகையுணர்ச்சியின் நீட்சிதான் ஈழத்தமிழர்கள் மீது அது பாய்ந்ததற்கான அடிப்படைக் காரணம். தமிழகத் தமிழர்களின் தமிழ்த்தேசியத்தன்னுரிமையை மறுத்து, தமிழ்நாட்டைத் தனது காலனியாக வைத்திருப்பதற்குத் தமிழ் ஈழம் இடையூறாய்ப் போய்விடும் என்று இந்தியா ஆளும்வர்க்கம் கருதுகிறது.

இந்தியப் பெருங்கடலில், இலங்கையைத் தன்வசப்படுத்தித் தனது புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தனது விரிவாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் இலங்கையை வளைத்துப் போடுவதற்காக, இந்தியா, சிங்கள இனவெறிக்குத் துணைபோகிறது என்று சிலர் வாதிடுகின்றனர்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் நலனும், விரிவாதிக்க நோக்கமும் ஈழச்சிக்கலில் இரண்டாம்நிலை முகாமை கொண்டவையாகவே உள்ளன. அதுதான் முதன்மைக்காரணி எனில், வங்காளதேச விடுதலைப் போருக்கு ஏற்பிசைவு வழங்கியதுபோல், ஈழவிடுதலைப்போரை ஏற்று, புலிகளுக்கு உதவிகள் செய்திருக்கலாம்.

பிரபாகரன், கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை நோக்கி நேசக்கை நீட்டினார். இந்தியா தமிழீழத்திற்கு ஏற்பிசைவு வழங்கினால், இந்தியப்பெருங்கடலில், இந்தியாவின் பாதுகாப்பு அரணாக ஈழம் விளங்கும் என்றார். இக்கருத்து, இந்திய அதிகாரிகளிடம் பல தடவை தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் நீட்டிய நட்புக் கையை இந்தியா தட்டிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த சிங்கள அரசுக்கு உதவியது.

இந்தியா, தமிழர்களை நம்ப அணியமாய் இல்லை. சிங்களர்களையும் முழுமையாய் நம்ப முடியாது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்.

கடந்த காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி இலங்கை, சீனாவுடன் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளது. வங்காள தேசப்போரின் போது, பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்வழியே பறந்து கிழக்குப் பாகிஸ்தானுக்குப் போக இந்தியா அனுமதிக்கவில்லை. அப்போது கொழும்பு வழியே, பறந்துசெல்ல பாகிஸ்தானை அனுமதித்தது இலங்கை. இப்பொழுது கூட அம்பன் தோட்டா என்ற துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுத்துள்ளது இலங்கை.

சீனாவும் இலங்கையுடனான தனது உறவு மிகவும் முன்னுரிமை மிக்கது என்று பகிரங்கமாகக் கூறி வருகிறது. இதெல்லாம் இந்தியாவுக்குத் தெரியாத கமுக்கங்கள் அல்ல. தமிழர்களை நம்புவதைவிட சிங்களரை நம்புவதே மேல் என்று இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது.

இந்தியா, ஈழத்தமிழர்களையும் நம்பவில்லை; தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்பவில்லை. தமிழர்களின் நம்பிக்கைக்குரிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் தன்னைக் கருதிக்கொண்டதில்லை. அதேபோல் தமிழர்களை நம்பிக்கைக்குரியவர்களாக அது கருதியதுமில்லை. மெய்நடப்பு இவ்வாறிருக்க, இந்தியாவைத் தமிழர்கள் நம்புவதும், இந்தியா ஏமாற்றிவிட்டது என்று அதிர்ச்சியடைவதும் நமது ஏமாளித்தனத்தைத் தான் வெளிப்படுத்தும்.

ஆயுதப்போர் நடத்தும் விடுதலைப்புலிகள் பலவகை அரச தந்திர உத்திகளைக் கையாளலாம். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம், இந்தியாவை நம்பினோம், ஏமாற்றிவிட்டது என்று கூறுவது, ஆடு ஓநாயிடம் அடைக்கலம் தேடியதைப் போன்றதுதான்.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று உரிமைகள், கடல் உரிமை, கச்சத்தீவு உரிமைபோன்றவற்றை இந்தியா எந்நாளும் தமிழர்களுக்கு மீட்டுத்தராது.

இந்த உரிமைகளைப் பறித்துள்ள தேசிய இனங்களுக்கு (மாநிலங்களுக்கு) எதிராகப் பொருளியல் தடை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கவும், உலக அரங்கில், உரிமையோடு இச்சிக்கல்களை எழுப்பி, பல நாட்டு ஆதரவைத் திரட்டவும், தமிழர்களுக்கு இறையாண்மை வரும்போதுதான், இச்சிக்கல்களுக்குத் தீர்வு வரும்.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு தமிழர்களுக்கு இருந்திருந்தால், தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோயிருக்காது; ஈழத் தமிழினமும் அழிந்திருக்காது.

தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால், நமக்கொரு படை இருந்திருக்கும். கர்நாடகத்தில் நம்மின மக்கள் மீது கன்னடர்கள் எளிதில் கைவைத்திருக்க முடியாது. ஒகேனக்கலில் நுழைந்து நம் கட்டுமானத் தொழிலாளிகளைத் தாக்கியிருக்க முடியாது. முல்லைப்பெரியாறு அணையில் நம் பொறியாளர்களையும், ஊழியர்களையும் மலையாளிகள் தாக்கியிருக்க முடியாது. நானூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நம் மீனவர்களைச் சிங்களர்கள் சுட்டுக் கொன்றிருக்க முடியாது.

நாம் பதிலடி கொடுத்திருப்போம் என்பது மட்டுமல்ல் அவற்றைப் பன்னாட்டுச் சிக்கல்கள் ஆக்கிப் பரிகாரம் தேடியிருப்போம். ஐ.நா.மன்றத்தைப் பயன்படுத்தியிருப்போம்.

இப்பொழுது நமது அழுகுரல் உலக அரங்கில் ஒலிப்பதில்லை. ஏன், தமிழ்நாட்டைத் தாண்டிக்கூட போவதில்லை. நமது அழுகுரல் இந்தியாவுக்கும் உருத்தாது; இதர மாநிலங்களுக்கும் உருத்தாது.

ஈழத்தில் இவ்வளவு பெரிய இன அழிப்பு நடத்தியதற்கு இந்தியாவின் எந்த மாநிலமாவது இரக்கப்பட்டு, ஆறுதல் தெரிவித்ததா? தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர்கள், பாட்டாளிவர்க்கச் சர்வதேசியம் பேசும் அனைத்திந்தியத் தலைவர்களில் பலர், திராவிட மாநிலங்களின் தலைவர்கள் என யாருக்குமே தமிழ் இன அழிப்பு, ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே. அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையே.


தமிழ்நாடு தனது இறையாண்மையை மீட்காமல்; தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியாது. இந்த இலட்சியத்தோடு மகள் திரள் எழுச்சி தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பாமல் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும் நம்மால் உறுதியான முறையில் உதவ முடியாது. இதர நாடுகளில் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்காது.

உரிமைகள் மீட்பிற்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கும், தமிழகத்தில் தமிழ்ச் சமூகம் முன்னேறுவதற்கும், சமத்துவ சமூகம் அமைவதற்கும் இந்தியா எதிராக உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம், ‘தமிழர்’ என்ற தேசிய இனம் இருப்பதை ஏற்கவில்லை. இது இன அடையாள மறுப்பாகும். தமிழ் மொழி, தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய மொழி என்பதையும் அது ஏற்கவில்லை. இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கக் கருவியாகவே அரசமைப்புச் சட்டம் உள்ளது.

தேர்தல் சனநாயகம் என்ற பெயரால் இந்தி தேசிய இனத்தின் ‘பெரும்பான்மை வாதம்’ கோலோச்சுகிறது. தமிழர்களை அவர்களின் வரலாற்றுக்கும், தாயகத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்பில்லாத மிகத்தொலைவிலுள்ள அயல் இனங்களுடன் சேர்த்துத் தமிழர்களை செயற்கையாக சிறுபான்மையாக்குவது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சாரம்.

மக்களவை என்பது, உண்மையான பொருளில் இந்தி மக்களின் அவையே. தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட உரிமை பறிக்கப்பட்ட பிற தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக் கருவி தான் இந்தியாவின் மக்களவை.

தமிழ்நாட்டில் உள்ள சட்டப் பேரவை, பிரித்தானியக் காலனி ஆட்சி உருவாக்கிய மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அதே வடிவம் தான். அயல் இனத்தார் ஆள்கிறார்கள் என்பதை மூடிமறைக்க, மண்ணின் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது போன்ற மாயத் தோற்றத்தை அளிப்பது தான் மாண்டேகு செம்ஸ்போர்டு உருவாக்கிய சட்டமன்றம். அதற்கென்று முழுமையான அரசியல் இறையாண்மை கிடையாது. அன்று போலவே இன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒரு கங்காணி மன்றமாகவே உள்ளது. தமிழக அரசு என்பது தில்லி ஏகாதிபத்தியத்தின் கங்காணி அரசே.

இந்திய அரசமைப்புச் சட்டம் தமிழகத்தின் இயற்கை வளங்களையும், வரி வருமானங்களையும் இந்திய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது. கனி வளங்கள், பெருந்தோட்டங்கள், துறைமுகங்கள், ஏற்றுமதி வருவாய்கள், அனைத்து வகை வரி வருமானங்கள் என எல்லாவற்றையும் இந்திய அரசு பறித்துக் கொண்டு, தமிழகத்தின் கையில் பிச்சைப் பாத்திரத்தைத் திணித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தில்லியில் இருந்து வரும் வரிப்பங்குத் தொகை குறைந்து கொண்டே வருகிறது என்று தமிழகக் கங்காணி அரசு கூட கவலை தெரிவித்துள்ளது.

திறந்த சந்தை, இந்தியா ஒரே சந்தை என்ற பெயரால் தமிழ்நாட்டின் தொழிலும் வேளாண்மையும் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளால் சூறையாடப்படுகின்றன.

இந்திய சமூகத்தின், அதேபோல் தமிழ்ச் சமூகத்தின் தனித் தன்மையாக இருப்பது வர்ணசாதி ஒடுக்குமுறை. இவ் வொடுக்குமுறைக்குரிய தத்துவம் பார்ப்பனியம். பார்ப்பனியம் தமிழ்நாட்டில் தோன்றிய மெய்யியல் அல்ல. அதைத் தோற்றுவித்தவர்கள் தமிழர்களும் அல்லர். அது வடநாட்டில், ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட மெய்யியல்.

இன்றைக்கும் பார்ப்பனியத்தின் தலைமை பீடம் புது தில்லியில் தான் உள்ளது. தமி;ழ் நாட்டில் எவ்வளவுதான், தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை ஏந்திப் பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடினாலும் அதனை முற்றிலும் வீழ்த்த முடியவில்லை. அரசுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை, கலை இலக்கியத்துறை ஆகியவற்றில் இன்றும் தமிழ்நாட்டில் பார்ப்பனியமே கோலோச்சுகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் பார்ப்பனியத்திற்கு உயிரும் ஊட்டசத்தும் தில்லித் தலைமை பீடத்திலிருந்து வருகிறது.

இந்திய அரசு, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை பார்ப்பனியப் பாம்புகள் பதுங்கியிருக்கும் புற்றுகளாகும்.

தமிழ்நாட்டில் எழுச்சி கொண்டுள்ள பார்ப்பனிய எதிர்ப்புச் சூழலுக்கேற்ப, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காதரவாக சிற்சில நடவடிக்கைகளும், சட்டங்களும் வந்தால் கூட, தில்லி ஆதிக்க சக்திகள் அவற்றைச் செல்லாததாக்கிவிடும். இட ஒதுக்கீடு, சேதுக்கால்வாய்த்திட்டம், தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குதல், பயிற்றுமொழியாக்குதல் போன்றவற்றில் உள்ள தடைகள் இதற்கான எடுத்துக்காட்டுகள்.

தமிழ்நாடு தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்வரை, இங்கு பார்ப்பனியத்தை ஒழிக்க முடியாது என்று பெரியார் கூறினார். (பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர் 1973 செப்டம்பர்-17)

பார்ப்பனியத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது. பார்ப்பனியத்திற்கென்று ஒரு மெய்யியல் இருக்கிறது. (கர்ம, தர்ம, தண்டக்கோட்பாடு. இதுவே வர்ணாசிரம தர்மம்). சாதிக்கென்று தனியே ஒரு மெய்யியல் இல்லை.

தொடக்கக் காலத்தில் தொழில் அடிப்படையில் உருவான சாதி, வர்ணாசிரம தத்துவப் பின்புலம் கிடைத்ததும், நிலைத்து வளர்ந்தது. வர்ணாசிரமத்திலிருந்து நேரடியாகக் கிளைவிடாவிட்டாலும், வர்ணாசிரமத்தின் பின்பலம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவு சாதி நிலைத்திருக்காது.

ஆனால், வளர்ந்து நிலைத்துவிட்ட சாதி, இப்பொழுது வர்ணாசிரமம் மறைந்தாலும் தான் மறையாத அளவிற்கு வேறு சில காரணிகளைக் கொண்டுள்ளது. அரசாங்கச் செல்வாக்கு, எண்ணிக்கை வலு, பொருளியல் மேம்பாடு போன்றவற்றால் ஏற்படும் சமூக மேல் நிலை காரணமாக பார்ப்பனரல்லாத சிற்சில சாதிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முனைகின்றன. இம்முனைப்புக்கு எதிர் வினையாக, ஒடுக்கப்பட்ட சாதிகளும் சிறுபான்மைச்சாதிகளும், வறிய நிலையில் உள்ள சாதிகளும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முனைகின்றன.

பார்ப்பனரல்லாத சாதிகளின் சமூக ஆதிக்க நிலை என்பது வட்டார அளவில்தான் உள்ளது. அது தமிழகம் தழுவியது அல்ல. அதனால்தான் சில சாதி அமைப்புகள தாங்கள் அரசியல் ஆதிக்கம் பெற, தமிழ்நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிக்கக் கோருகின்றன.

பார்ப்பனியம் அதாவது வர்ணாசிரமம் அனைத்திந்திய ஆதிக்கம் பெற்றது. அனைத்திந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேறினால், வர்ணாசிரமம் ஒழிக்கப்பட வாசல் திறக்கும்.அந்நிலை சாதியை ஒழிக்கும் சமூகச் சூழலை உருவாக்கும்.

சாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமையை ஒழிக்கத் தனிக்கவனம் செலுத்தாமல் சாதியற்ற சமூகத்தை உருவாக்க முடியாது. சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக அந்தந்த மட்டத்தில் போராடுவதும், தமிழ்த்தேசிய ஓர்மைப் பண்பை வளர்ப்பதும் சாதி மறையத் துணை செய்யும்.

வர்ணாசிரமம் இன்று சாதி வழியாகத்தான் செயல்படுகிறது. பார்ப்பனர்கள் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் சாதியாக இன்று செயல்;படுகிறார்கள். சாதியானது உற்பத்தி முறைகளில் ஏற்படும் எல்லா மாறுதல்களோடும் தன்னை இணக்கப்படுத்திக்கொள்கிறது. நிலக்கிழமை உற்பத்தி முறைக்கு முந்தியது சாதி. நிலக்கிழமை உற்பத்தி முறை வந்தபோது, அதனோடு இணங்கி, சாதி தன்னை வலுப்படுத்திக்கொண்டது.

முதலாளிய உற்பத்தி முறை வளர்ந்தபோது அதனுடன் சாதி தன்னை இணக்கப்படுத்திக்கொண்டது. முதலாளியம் சாதியை இணைத்துக்கொண்டது.

இப்பொழுது உலகமயமும் சாதியும் இணைந்துகொண்டன.

காலகாலமாக உற்பத்தியில் ஈடுபடும் சாதிகள் கீழ்நிலையில் இருக்கின்றன. அதிகாரவர்க்கம் மற்றும் வணிகச்சாதிகள் மேல்நிலையில் இருக்கின்றன. இன்றும் அதே நிலைதான். உற்பத்தியில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகள் கீழ்நிலையிலும் வறுமையிலும் உழலுகின்றன.இச்சாதிகளில் உள்ள சில தனிநபர்கள் முன்னேறியிருக்கலாம். அம்முன்னேற்றம் சராசரித்தன்மையது அல்ல. அதிகார வர்க்கப் பணிகளையும், வணிகங்களையும் செய்;வோர் வளமாகவும் சமூக ஆதிக்க நிலையிலும் உள்ளார்கள். அதிலும் நாடோடித் தன்மை கொண்ட பல்தேசிய வணிகச் சாதிகள செழிப்பாக இருக்கின்றன. வேளாண் உற்பத்தியில் மட்டுமல்ல தொழில் உற்பத்தியிலும் ஈடுபடுவோரைவிட வணிகர்களும், புதிய சேவைத் துறையினரும் (ளுநசஎiஉந ளுநஉவழச) பல்தேசிய நாடோடிகளுமே செல்வம் கொழிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துகிறார்கள். செழிப்பாக இருக்கிறார்கள்.

உலகம் சிலருக்காக மட்டுமே என்பது இன்றைய உலகமயக் கோட்பாடு;. இதுதான் ஆரியத்தின் அடிப்படைக் கோட்பாடு. உலகமயமும் ஆரியமும் ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்படுகின்றது. ஓருயிர் ஈருடல் என்பது போல் இரண்டும் ஒன்றையொன்று காதலிக்கின்றன. இரண்டும் உடன்கட்டை ஏறினால் உழைக்கும் மக்களுக்கு நிரந்தர விடிவு வரும்.

வணிகம் செய்துகொண்டும் பல்தேசிய நாடோடிகளாகவும் உள்ள சமூகப்பிரிவினர் இந்தியாவில் பார்ப்பனர்கள், மார்வாரி, குசராத்தி சேட்டுகள் ஆகியோரே! உலகமயத்தால் இவர்கள் கொழுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டு தொழில் வணிகம் அனைத்திலும் மார்வாரி, குசராத்தி சேட்டுகள் ஏகபோகம் செலுத்துகிறார்கள். அடுத்த நிலைஆதிக்கத்தை மலையாளிகள் பெற்று வருகிறார்கள்.

“இந்தியன்” என்கிற இல்லாத இனத்தைச் சொல்லிக்கொண்டு, அவர்கள் இந்தியா முழுமையையும் தமது தாயகம் போல் ஆக்கிக், கொண்டு, மண்ணுக்குரிய தேசிய இன மக்களைக் குனிய வைத்து அவர்கள் முதுகில் குதிரைச் சவாரி செய்கிறார்கள்.

இவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்தால்- அது இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான வன்முறை என்று இந்தியா நம்மீது பாயும்.

தமிழக வேலைவாய்ப்புகளை மிகுதியாக வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவரகள் பறித்துக்கொள்கிறார்கள். ‘இந்தியன்’ என்ற கற்பனை அடையாளத்தால் எல்லா ஆக்கிரமிப்புக் குற்றங்களும் கழுவப்படுகின்றன.

இவ்வாறான அயலார் ஆக்கிரமிப்பு, தமிழர்க்குரிய தாயகத்தின் இருப்பை வினாக்குறியாக்குகிறது. தமிழர் தாயகம் பறிபோகும் நிலை உள்ளது. இதற்கெல்லாம் இந்தியாதான் காரணம்.

உலகமயத்தை எதிர்க்கும் வலுவான கோட்பாடு தேசிய இனத்தாயக இறையாண்மை மீட்பு தான். அயல் தேச மூலதனக் கழுகுகளை உள்ளே விடாமல் தடுப்பது தேசிய இனத் தாயகக் காப்புதான்.

தமிழ்த்தேச இறையாண்மைதான், மார்வாரி, குசராத்தி, மலையாளிகள் மற்றும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்கும். தமிழ் மக்களுக்கான தாயகத்தையும், வாழ்வுரிமையையும் பாதுகாக்கும்.

உலகமயம் கொண்டு வந்த மிகப்பெரிய தீங்குகளில் ஒன்று சூழலியல் பேரழிவு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, வெளி என்ற ஐம்பூதங்களையும் அது மாசுப்படுத்தி, அதனதன் இயற்கைத் தன்மையைக் கெடுத்துவிட்டது. இதனால் இந்நிலக்கோளம் மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்களும் வாழத்தகுதியற்றதாக மாற்றப்பட்டு வருகிறது.

முதலாளியத்தின் அடிப்படையாக உள்ளது மூலதனம். இலாபம், மேலும் இலாபம், என்ற வெறியும் அதனடிப்படையிலான போட்டியும் அதன் இயங்கு ஆற்றலாக உள்ளது. எல்லாவற்றையும் வீழ்த்தி, வெல்லவேண்டும் என்ற முதலாளிய மனநிலை அது. அது இயற்கையின் கூறுகள் அனைத்தையும் தனது இலாப வேட்டைக்கான ஆதாரங்களாக மட்டுமே பார்க்கிறது.

தேசியத் தாயகம் என்பதை முதலாளியத்திற்குரிய, திறந்தவெளிச் சந்தைத் திடலாக மாற்றுகிறது. அதில்வாழும் மக்களை நுகர்வு வெறிகொண்ட வாடிக்கையாளர்களாக மாற்றுகிறது.

இவ்வாறான உலகமயச் சுரண்டலைக் கொண்டு வருவது இந்தியா. ஆரியத்திற்கும் உலகமயத்திற்கும் நெருக்கமான உறவு உண்டு என்று பார்த்தோம்.இந்த உறவுச் சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது. சிந்து வெளியில் நிலையான வாழ்வு வாழ்ந்த தமிழர்களின் நீர்நிலைகளையும் வேளாண்மையையும் அழித்தார்கள் ஆரியர்கள். யாகக்குண்டங்களை எழுப்பி, அந்நெருப்பில் உணவுத் தவசங்களையும், ஆடு மாடுகளையும் போட்டு எரித்து வீணாக்கினர். இயல்பிலேயே சுற்றுச்சூழலை கெடுக்கிறது ஆரியம்.

தமிழர்களின் மரபுவழிப்பட்ட தொழில்நுட்பம், சுற்றுச் சூழலைப்பாதுகாப்பதாக உள்ளது. நமது இயற்கை வேளாண்மை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது மரபு வழித் தொழில்நுட்பங்களைச் சார்ந்து போராட வேண்டியுள்ளது. இருப்பினும் இந்தியா, அன்றாடம் சூழலைப் பெருமளவில் மாசுபடுத்தும்போது அதிலிருந்து தப்பிக்க, தமிழ்நாட்டின் இறையாண்மையை மீட்க வேண்டிய தேவை உள்ளது.

உலகின் முதல் மொழி என்றும் மூத்த செம்மொழி என்றும் ஆய்வாளர்களால் கருதப்படும் என்றுமுள தென்தமிழ் தேயவும், இந்தியும் ஆங்கிலமும் கொழுக்கவும் ஆன சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதற்கான காரணம் இந்தியாவே!

இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்றது ஆளும்வர்க்கம். தற்காப்பு நிலையில் தமிழகத் தலைவர்கள் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை ஆட்சி மொழி என்றார்கள். இவ்விரண்டில் எதை ஏற்றுக்கொண்டாலும் தமிழுக்கு அழிவே.

தமிழ்நாட்டிற்குத் தனி இறையாண்மை இருந்திருந்தால், தமிழே ஆட்சி மொழி, கல்வி மொழி என்ற ஒரு மொழிக்கொள்கை செயலுக்கு வந்திருக்கும். மொழிப்பாடமாக ஆங்கிலத்தைக் கற்பது வேறு. அனைத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்தும் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் நீடிப்பது தமிழையும் தமிழ் இனத்தையும் அரித்து அண்டிப்பிழைக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடையாகஉள்ளதுஇந்தியாவே!.

இந்திய அரசுக் கட்டமைப்பில் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் இருப்பதால், இந்தியா பெண் விடுதலைக்கும் எதிராக உள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்குவதற்குக் கூட சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன. பெண்களுக்கு சிற்சில உயர்பதவிகளைக் கொடுப்பது மட்டும் பெண்விடுதலைஆகாது. இந்தி மண்டலத்தில் பெண்ணடிமைத்தனம் கூடுதலாக உள்ளது.

தமிழ்நாடு ஒப்பீட்டளவில், பெண் விடுதலைக் கருத்துகளில் முன்னேறிய தேசமாகும். மொழி ஒடுக்குமுறை, வரலாற்றுத் தாயகத்திற்கு ஆபத்து, வர்க்கச் சுரண்டல், உலகமயச் சூறை, வர்ண-சாதி ஆதிக்கம், சூழலியல் பேரழிவு, பெண்ணொடுக்குமுறை முதலிய அனைத்துக்கும் நிலைக்களமாக இந்தியத் தேசியம் இருக்கிறது. இந்தப் புனைவு தேசியத்தின் கொடுங் கையாக இந்திய வல்லரசு செயல்புரிகிறது. பன்னாட்டு முதலாளிகளுடன் இணைந்துள்ள பெருமுதலாளிகள், குறிப்பாக மார்வாடி - குசராத்தி சேட்டுகள் - பார்ப்பனர்கள் - இந்தி ஆதிக்க சக்திகள் இக்கொடுங்கோல் வல்லரசின் ஆளும் சக்திகளாக இருக்கிறார்கள். பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் துணைகொண்டுதான் இவர்களது ஆதிக்கம் தொடர முடிகிறது.

எனவே தமிழ்நாட்டு மக்கள் தங்களை அழுத்துகிற எந்தவகை ஒடுகு;குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்றாலும் அதற்கு இந்தியத் தேசியத்தோடு முரண்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

இந்த ஆதிக்கப் புனைவு தேசியத்திலிருந்து விடுபடுவதற்கு உள்ள மாற்றுவழி தமிழ்த்தேசியம் தான்; இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு படைப்பது தான். அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விடுதலைச் சிந்தனைகளும், முற்போக்கு நீரோட்டங்களும் ‘தமிழ்த்தேசியம்’ என்ற மைய விடுதலை நீரோட்டத்தில் இணைந்தாக வேண்டியது அவசியம் எனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அனைத்துவகை விடுதலைச் சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டே தற்சார்புள்ள - புரட்சிகரத் தமிழ்த் தேசியம் உரம் பெறுகிறது.

தமிழ் மண்ணின் முற்போக்கு மரபுகளை உள்வாங்கியும், பெரியார், அயோத்திதாசர்,அம்பேத்கர் ஆகியோரின் சமூகவியல் சிந்தனைகளை ஏற்றும் செழுமையுற்ற மண்ணுக்கேற்ற மார்க்சியமே நாம் நடத்த விரும்புகிற தமிழ்த் தேசியப் புரட்சிக்கு வழிகாட்டும் நெறி என த.தே.பொ.க. அறிவித்துள்ளது. இதன் போக்கில் அனைத்து வகை முற்போக்குச் சிந்தனைகளையும் வளர்த்தெடுத்துச் செல்ல முயல்கிறது.

வரலாற்றியல், உற்பத்தி ஒழுங்கமைப்பு, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அனைத்திலும் இனமுரண்பாட்டின் பங்கு, மொழியின் பாத்திரம் ஆகியவற்றைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியதாகிறது.

“ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்சிய வரையறுப்பு சரியே என்றாலும், அது முழு உண்மையை விளக்கவில்லை. வர்க்கப் போராட்டத்தைப் போலவே இனப் போராட்டமும் வரலாற்றை வளர்த்திருக்கிறது. வர்க்கச் சுரண்டலும், வர்க்க ஆதிக்கமும் இனச் சுரண்டல், இன ஆதிக்கம் வழியாகவே பல நேரங்களில் செயல்படுகிறது.

சிந்து வெளியில் நிலையான வேளாண் சமூகத்தின் மீது மேய்ச்சல் நாடோடி வர்க்கத்தின் ஆதிக்கம் நிறுவப்பட்டது. தொல் தமிழினத்தின் மீது ஆரிய இன ஆதிக்கம் நிறுவப்படுவதன் வழியாகவே இது நடைபெற்றது.

பல்லவர் ஆட்சிக் காலத்திலிருந்து பேரரசுகள் எல்லாம் நிலக்கிழமை வர்க்க ஆட்சியாக மட்டும் இல்லை. ஆரிய பார்ப்பனிய - வடமொழி மேலாண்மை ஆட்சியாகவும் இருந்தது. பின்னால் வந்த மொகலாயர் ஆட்சி சமீன்தாரி வர்க்க - நிலக்கிழமை வர்க்க ஆட்சியாக மட்டும் இல்லை. பாரசீக - நிலக்கிழமை ஆட்சியாகவே இருந்தது. அதுபோலவே தெலுங்கு மன்னராட்சி ஒரே நேரத்தில் நிலக்கிழமை ஆட்சியாகவும் - தெலுங்கு இன மேலாதிக்க ஆட்சியாகவும் திகழ்ந்தது. மராட்டியர் ஆட்சியும் அதையொத்ததே.

இங்கெல்லாம் ஒடுக்குமுறைக் கருவியான அரசுக்கு வர்க்கத் தன்மை மட்டும் இருக்கவில்லை; இனத்தன்மையும் சேர்ந்தே இருந்தது. வர்க்க ஒடுக்குமுறைக் கருவியாக மட்டுமின்றி இன ஒடுக்குமுறைக் கருவியாகவும் அரசுகள் திகழ்ந்தன.

அமெரிக்க முதலாளியத்திற்குக் கிடைக்கும் குறைந்த கூலித்தொழிலாளர்கள் பெருமளவில் கறுப்பின மக்களே ஆவர். எனவே அமெரிக்க ஆளும் வர்க்கம் வெறும் முதலாளிய வர்க்கம் மட்டுமல்ல் அது வௌ;ளை - முதலாளி வர்க்கம் ஆகும்.

இன்றைய உலகமயக் காலத்தில் மிகை உழைப்புச் சுரண்டலுடன் இணைந்து இன ஆதிக்கமும், நிற ஆதிக்கமும் பெருமளவில் நடப்பதைப் பார்க்கிறோம்.

கூர்ந்து கவனித்தால் இனத்தாழ்ச்சி, நிறத்தாழ்ச்சிக் கருத்தியல்தான் வற்றாத குறைகூலித் தொழிலாளர்களைப் பெற்றுத் தருவது புலனாகும். அதாவது இன ஆதிக்கம், நிற ஆதிக்கம் வழியாகத்தான் வர்க்க ஆதிக்கம் எளிதாக நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏகபோக முதலாளி வர்க்க ஆதிக்கம் என்பது சாரத்தில் மார்வாடி - குசராத்தி ஆதிக்கம்தான். சனநாயகக் காலத்தில் இங்குள்ள தேவைக்கு ஏற்ப அது இந்தி ஆதிக்கம் வழியாகச் செயல்படுகிறது. உலகமயச் சுரண்டலும், ஆங்கில ஆதிக்கமும் இணைந்து வருவது தற்செயலானதல்ல.

உழைக்கும் வர்க்கம் என்பது பெரிதும் உழைக்கும் சாதியாக இங்கு நிலவுவதும் தற்செயலானதல்ல.

வரலாறு நெடுகிலும் உற்பத்தி உறவும் குல உறவும் ஒன்றாக இருந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம். ‘குலத்தொழில்’ என்பதன் அடிப்படை அதுதான். குடிகள், மரபினங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைவுக்கு முக்கியப் பங்காற்றிய மொழியானது, உற்பத்தி ஒழுங்கமைப்பிலும் மையப் பங்காற்றுகிறது.

கருவிகளைப் போலவே கருவிகள் குறித்த அறிவியலும், தொழில் நுட்பமும் உற்பத்தி சக்தியாகும். இந்த அறிவியல் தொழில் நுட்பத்தின் கொள்கலனாகவும், அதனைப் பரப்பும் கடத்தியாகவும் உள்ள மொழியும் உற்பத்திக் கருவிதான். கருவிகளை இயக்கும் மனித உழைப்பாற்றல் உற்பத்தி சக்தியாகத் திகழ்கிறது. எப்போதுமே உழைப்பு என்பது சமூக உழைப்புதான் என்பதை மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது. இந்த சமூக உழைப்பைச் சாத்தியப்படுத்தும் மையக் காரணியாக மொழியே விளங்குகிறது.

ஆயினும் மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் அல்ல. அதேபோல் மனிதஉறவுகள் வெறும் உற்பத்தி உறவுகள் மட்டுமல்ல.

உற்பத்தி நடவடிக்கைகளுக்கு வெளியேயும் மனிதர்களுக்குச் சமூக உறவுகள் உள்ளன. இந்த சமூக உறவுக்கு மையக் காரணியாக மொழியே உள்ளது.

இவ்வாறு மொழியானது உற்பத்தி ஒழுங்கமைப்பிலும், சமூக ஒருங்கிணைப்பிலும் ஒரு சேரப் பணியாற்றுகிறது. இதனால், வரலாற்று வளர்ச்சியை உந்தித் தள்ளும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக மொழி திகழ்கிறது.

இதன் காரணமாகத்தான் மொழி விடுதலையும், இனவிடுதலையும், வர்க்க விடுதலையும் ஒரு சேரச் செல்கின்றன.

அதுவும் ஒரு தேசிய இனம் என்ற ஒட்டுமொத்தமே (றுhழடந) அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, அந்த அடிமைத்தளையை அறுக்காமல் வர்க்க விடுதலை, சாதி விடுதலை, பாலின விடுதலை என்ற உள்கூறு விடுதலைகள் தனித்து சாத்தியப்படாது. தனக்கான தேசத்தைப் படைத்துக் கொள்ளாத எந்தத் தேசிய இனமும் வர்க்க விடுதலையையோ பிற விடுதலையையோ சாதிக்க முடியாது.

அதேபோல் இந்த உட்கூறு விடுதலைக்கானக் போராட்டங்களுடன் இணைக்கப்படாத தேச விடுதலைப் போராட்டம் இலக்கற்றதாக முடியும். இரண்டின் ஒருங்கிணைவே புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஆகும்.

இவ்வாறான சூழலில் தேச அரசு அமைப்பதே புரட்சிகர சமூக சக்திகளின் மையக் கடமையாக இருக்க முடியும்.

அதனால்தான் இங்கு இறையாண்மை உள்ள தமிழ்த் தேசக் குடியரசு நிறுவுவதை மையக் கடமையாக அறிவிக்கின்றோம்.

உலகில் நாடுகளுக்கான எல்லை பழைய காலத்தில் அரசர்களின் வாள் வலிமைக் கேற்ப விரியும், சுருங்கும் அல்லது அழியும். இந்த இடையறாத போர் அழிவைத் தவிர்க்க உருவாக்கப்பட்டதே தேச அரசுக் கோட்பாடு. ஒரு தேசியஇனத்தின் தாயகம் அத்தேசிய இனத்திற்கான நாடு. ஒரு தேசத்தின் அடிப்படை அலகு இதுவே.

இப்பொழுதுள்ள நாடுகள் பெரிதும் தேசிய இனத்தேசங்களாக உலகில் உள்ளன. இன்றும் அவ்வாறு அமையாத நாடுகளும் உண்டு.

பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாட்டை ஏற்றுள்ள கம்யு+னிஸ்ட்டுக் கட்சிகள் ஆளும் நாடுகள், நடைமுறையில் தங்கள் தேசிய நலன்கள் அடிப்படையில் தான் உலக அரச தந்திரத்தை வகுக்கின்றன. பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் அவை உலக அரச தந்திரத்தை வகுப்பதில்லை.

கருத்துகள் இல்லை: