திங்கள், 22 ஜூன், 2009

அழிக்கப்பட வேண்டிய காங்கிரசு ஆட்சி அமைத்தது! அடிமைப்பட்ட சாதியினர் ஆதரவு இழந்தனர்!உண்மையை உணர்ந்து செயல்பட முந்துங்கள்!! -வே. ஆனைமுத்து

இந்திய தேசியக் காங்கிரசு 10ஆவது தடவையாகத் தலைமையேற்று இந்திய ஆட்சியை அமைத்துவிட்டது. இப்போது நடைபெற்றது, 15ஆவதுதடவை நாடாளு மன்றத்துக்கு உரிய தேர்தல். இந்தியாவில் 71.40 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டில் 4.16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. காவல்துறை, துணைப் படைத்துறை, படைத்துறை மற்றும் உள்ள எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் 15ஆவது தடவையாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதிலிருந்தே இங்கு மக்கள் நாயக உணர்வு மலரவில்லை என்பதை நாம் அறிய முடியம். அதற்கு மாறாகப் பணநாயகம், காலித்தனம், சாதி உணர்வு என்கிற கூறுகளும், தேர்தல் தில்லுமுல்லுகளும் மிக அதிகமாக வளர்ந்து விட்டன என்பதை எல்லோரும் அறிய முடியும். இதுபற்றிப் பொதுவில் உள்ள சில உண்மைகளை நாம் உணரவேண்டும். இந்தியாவில் உள்ள 6 இலக்கம் ஊர்களில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு உள்சாதியிலும் சில வாக்குகள் கட்டாயமாகக் காங்கிரசுக்கு உண்டு என்பது ஓர் உண்மை. இந்தத் தன்மை தேசியக் கட்சிகளில் பொதுவுடைமைக் கட்சிகளுக்கோ, பாரதிய சனதாவுக்கோ இல்லை. சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கும் இல்லை.

தமிழக மக்கள் 3 பகுதிகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. என்கிற இரண்டு கட்சிகளும் மூன்றில் இரண்டுபங்கு மக்களைத் தம் பிடியில் கொண்டுள்ளன. மற்றெல்லாக் கட்சிகளும் மீதியுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றில் ஒருபங்கு வாக்குகளைப் பெற்றுள்ள கட்சிகள் தேர்தல்தோறும் இரண்டு அணிகளாகப் பிரிந்து, மாறி, மாறி ஏதாவது ஓர் அணியில் சேருவதையே 1971 முதல் ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதை இவர்களால் ஒரு போதும் மாற்றிக் கொள்ளமுடியாது. அதற்கு மாறாக தி.மு.க., அ.தி.மு.க. தலைமையை ஏற்றுத் தீரவேண்டிய ஈன நிலையில்தான் இவர்கள் இருந்து தீரவேண்டும்.

இப்படிப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்று இந்திய மத்திய அரசில் ஆட்சியை அமைக்கிற ஒரு கட்சியோடு சேர்ந்து கொண்டே ஆகவேண்டும். எல்லா மாநிலங்களிலும் உள்ள மாநிலக் கட்சிகள் மற்றும் சாதிக் கட்சிகளின் நிலைமை இதுதான். அதாவது, மய்ய அரசை அமைப்பதிலோ, மாநில அரசை அமைப்பதிலோ அணி மாறாத கட்சி என்பதாக ஒன்றுமே இல்லை, இது ஏன்? ஏனெனில் தேசியக் கட்சிகளுள் பாரதிய சனதாக் கட்சி ஒன்றைத் தவிர மற்ற கட்சிகளுக்குத் தெளிவான அரசியல் நிலைப்பாடு இல்லை. பாரதிய சனதா வைத்துள்ள இராம ராஜ்யம் அமைப்பு, இராமர் கோயில் கட்டுதல் என்பதை எந்தத் தேசியக்கட்சியும், எந்த மாநிலக் கட்சியும் வெளிப்படையாக எதிர்ப்பது இல்லை. ஆனால் அந்தக் கட்சியின் தலைமையில் மத்திய ஆட்சியில் சேருவதற்கு வெட்கப்படுவதும் இல்லை.

அத்துடன்கூட இந்தியாவில் ஆட்சியை அமைக்கும் போது கூட்டணி சேருகிற கட்சிகள்-மதச் சார்பற்ற அணி, மதச்சார்புள்ள அணி என்று இருப்பதாக ஒரு பொய்யையே சொல்லுகிறார்கள், எப்படி இது பொய்? முதலில், இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே மதச் சார்பு அற்ற கோட்பாடு இடம்பெறவில்லை. “எல்லா மதங்களையும் ஒன்றுபோல் பாவிப்பது என்பதுதான் இந்திய அரசின் மதச்சார்பற்ற கொள்கை'' என்பதைத்தான்-மதச் சார்பு அற்ற தன்மை என்று எல்லா வாக்கு வேட்டைக் கட்சிக் காரர்களும் கூறுகின்றனர். அப்படிச் சொல்லுவது ஓர் ஏமாற்று-மதச் சார்பின்மைக்கு எதிரானது என்பதை தந்தை பெரியார் உறுதிபடக் கூறிவிட்டார்.

இதுபற்றித் திராவிட இயக்கத்தினரும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது ஒரு பெரிய குறைபாடு ஆகும். அதனால்தான் தி.மு.க.-அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் 1971 முதல் இன்று வரையிலும்-மாறி, மாறி காங்கிரசுத் தலைமையிலான அணியையும், பாரதிய சனதா தலைமையிலான அணியையும், ஆளவிட்டார்கள்; அப்படிப்பட்ட ஆட்சியில் இவர்களும் பங்கேற்றார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிக்கு வெளியில் இருந்து இரண்டு கட்சியின் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தன. மற்ற கட்சிகள் இதுபற்றிக் கவலைப்படுபவை அல்ல.

இந்நிலையில் தென்னாட்டில் செல்வாக்குப் பெற முடியாத நிலையில்-வடநாட்டில் உ.பி, பீகார், ம.பி, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், உத்தர்கண்ட் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் இடங்களைப் பெற முடியாத நிலையில்-தென்னாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தான் 2004 தேர்தல் வரையில் காங்கிரசு வென்றது. 2004 தேர்தலில்-தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் திரண்ட காங்கிரசு அணி, தி.மு.க. ஆதரவைப் பெற்று மத்தியில் காங்கிரசுத் தலைமையிலான ஆட்சியை அமைத்தது.

ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென்னாட்டில் ஆந்திரம், கேரளம், முதலான மாநிலங்களில் அதிக மாநிலங்களில் காங்கிரசு பெற்றுள்ளது. தமிழகத்திலும் புதுவையிலும் காங்கிரசுக் கூட்டணி 40இல் 28 இடங்களைப் பெற்றதுடன் மேற்கு வங்கம், பஞ்சாப், உ.பி.முதலான மாநிலங்களில் நல்ல அளவில் புதிய வரவுகளைப் பெற்றுவிட்டது. 2004 தேர்தலில் இந்திய அளவில் வெறும் 145 இடங்களைப் பெற்ற காங்கிரசு, 2009இல் இந்திய அளவில் 206 இடங்களைப் பெற்றுவிட்டது. தன் அணிக்கு 268 இடங்களைப் பெற்றுவிட்டது. இது எப்படி முடிந்தது?

எல்லா மாநிலங்களிலும் பணக்கரர்கள், தொழில் முதலைகள் அளித்த நிதி ஆதரவுடன்-ஒருவாக்குக்கு ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 எனத் தந்தே வாக்குப் பெறப்பட்டுள்ளது. எல்லாக் கட்சிகளும் வாக்குக்குப் பணம் தந்தாலும்-நேரு குடும்பக் கட்சி பெற்றுள்ள மேல்சாதி ஆதரவுக் கட்சி, பணக்காரர் பாதுகாப்புக் கட்சி என்கிற கூறுகள் காங்கிரசுக்கு ஆதரவாக அமைந்துவிட்டன. இந்த நிலைமை மிகவும் கேடானது. ஏன்? ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், கொலைகாரர்களின் பாதுகாப்பு அரணாகவும், தேசிய இன எழுச்சிகளை ஒடுக்கும் கட்சியாகவும் விளங்குவது காங்கிரசு. அத்துடன் குடும்ப வாரிசு அரசியலுக்கு இந்தியாவில் வித்திட்டது காங்கிரசு. ஊழலையும் மக்கள் நாயகத்துக்கு எதிரான தன்மைகளை யும் வளர்த்தெடுத்தது காங்கிரசு. எப்படி?

1. இந்திராகாந்தி, 2.2.1959இல்-நேருவின் காலத்திலேயே, அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். நேருவுக்கு ஒப்பான ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜே.பி.கிருபளானி முதலானவர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

2. 15.1.1966இல், நேருவின் மகள் என்பதால் இந்திரா காந்தியே பிரதமராக்கப்பட்டார். நகர்வாலா வங்கி ஊழலைத் தொடங்கி வைத்தவர் இந்திராகாந்திதான்.

3. 1969இல் கட்சியில் தானே முன்மொழிந்த என். சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக, தன் விருப்பத்துக்கு வி.வி. கிரியைக் குடிஅரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தி, காங்கிரசு உள்கட்சி மக்கள் நாயகத்தைத் கொன்றவர் இந்திராகாந்தி. அதன்மூலம் பெருந்தலைவர் காமராசரை வீழ்த்தியவர் இந்திராகாந்தி.

4. காமராசரை வீழ்த்திடக் கை கொடுத்த கலைஞர் கருணாநிதியை, 31.1.76இல் பதவி நீக்கம் செய்த சர்வாதிகாரி இந்திராகாந்தி.

5. நீதிமன்ற ஆணைக்குக் கட்டுப்படாமல், இந்தியாவில் அவசரகால ஆட்சியை அமல்படுத்தி-குமரி முதல் காஷ்மீர் வரை பல்லாயிரவரை வெஞ்சிறைக்கு அனுப்பிக் கொடுமை செய்தவர், இந்திராகாந்தி. இவ்வளவு நெடிய காலத்தில் இவர் செய்த ஒரே நன்மை வங்கிகளைத் தேசிய மயம் ஆக்கியது மட்டுமே. நிற்க.

6. அவசரகால ஆட்சியின்போதே ஜெயில்சிங் ஆதரவுடன், பஞ்சாபில் காங்கிரசை வளர்க்க வேண்டி, பிந்தரன் வாலே என்கிற சீக்கியக் கொலைகாரனை வளர்த்தெடுத்து, அகாலிதளத்தை அழிக்க முயன்றவர், இந்திரா. அவனோ சீக்கிய மதத் தேசியவாதியாக மாறி, இந்திராவின் ஆட்சியை எதிர்த்தபோது, அவனைக் கொல்லுவது என்கிற பேரால் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான சீக்கியரைக் குருவிகள்போல் கொன்றுகுவித்த வன்னெஞ்சர், இந்திராகாந்தி.

7. வடகிழக்கில் அசாமில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ‘அஹோம்' என்கிற பெரிய வகுப்பினரின் செல்வாக்கை ஒழிக்க வேண்டி பார்ப்பனர் காயஸ்தர், கொலிதா என்கிற மேல்சாதிகளைச் சார்ந்த மாணவர்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமியர் மற்றும் பழங்குடியினரை ‘அந்நியர்' என்று பெயரிட்டு வெளியேற்ற எல்லாம் செய்து, அவர்கள் ஆட்சிக்கு வர வழி அமைத்தவர், இந்திராகாந்தி. டி.கே. பருவாவின், “இந்தியாவே இந்திரா-இந்திராவே இந்தியா'' என்கிற முழக்கத்தை வரவேற்றுத் தன்னை சர்வாதிகாரியாக மாற்றிக் கொண்டிருந்த இந்திராகாந்தி, கொலை செய்யப்பட்டவுடன்-அவருடைய மகன் என்பதால் மட்டுமே இராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். இரண்டாவது தலைமுறையின் வாரிசு அரசு 1984இலேயே தொடங்கி விட்டது.

கற்றுக் குட்டியான இராஜீவ் காந்தி, தன் அன்னையின் கொலையை முன்வைத்து, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரோடு கொல்லப்பட எல்லாம் செய்தார்.

1. 1984இல் நடந்த அந்தப் படுகொலைக்கு, இன்றுவரை-25 ஆண்டுகளாக நீதி வழங்கப்படவில்லை.

2. இராஜீவ் காந்தி செய்த போபர்ஸ் தரகு ஊழல் இன்றளவும் ஊர்முழுதும் நாறுகிறது. இதை அவரே மறைத்தார். அவர் இறந்தபிறகு பி.வி. நரசிம்மராவ் மறைத்தார். அவருடைய அன்புத் துணைவியார் சோனியா காந்தி இப்பொழுது அதை மறைக்கிறார்.

3. 1986இல் தமிழ்நாட்டில் வன்னியர்கள் நடத்திய இட ஒதுக்கீட்டுக் கிளர்ச்சியைப் புறந்தள்ளினார்; மண்டல் குழு பரிந்துரைகளைத் துச்சமாக மதித்தார்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக, 23.7.1987இல் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றிடவேண்டி, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வற் புறுத்தினார்; மிரட்டினார். அவர் அதற்கு அடிபணியவில்லை என்றவுடன்-இந்திய அமைதிப் படை என்கிற பேரால் 20,000 இந்தியப் படை வீரர்களையும், ஆயுதங்களையும் இலங்கைக்கு அனுப்பி, ஈழத் தமிழர் பல்லாயிரவரைக் கொன்று குவித்தார்; விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படச் செய்தார்; தமிழ்த் தாய்மார்கள் கற்பழிக்கப்படக் காரணரானார். இலங்கையின் இந்தியத் தூதர் டிக்சித் என்பவர்மூலம், இந்திய இராணுவத் தளபதிக்கு, பிரபாகரன் கொல்லப்பட ஆணை பிறப்பித்தார், இராஜீவ் காந்தி.

படையினர்க்கு உள்ள நெடுங்கால மரபு காரணமாக, அதைச் செய்திட முடியாது என, இராணுவத் தளபதி மறுத்துவிட்டார். எனவே பிரபாகரன் அன்று உயிர் தப்பினார். இராஜீவ் காந்தி 21.1.1991இல் கொலையுண்டார்.

1. அடுத்துவந்த நரசிம்மராவ் இராஜீவ் பேரிலான போபர்ஸ் ஊழலை மிக இலாவகமாக மறைத்தார்.

2. இராஜீவ் கொலைவழக்கில் பலருக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத் தர எல்லாம் செய்தார்.

3. 6.12.1992இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படத் துணிந்து வழி அமைத்துத் தந்தார். மும்பை, சூரத் முதலான நகரங்களில்-அதன் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படத் துணை போனார்.

4. மும்பை கலவரம் மற்றும் கொலை, கொள்ளை காவல்துறை அத்துமீறல் இவற்றைப் பற்றி ஆய்வுசெய்து நீதிபதி கிருஷ்ணா தந்த அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

5. வி.பி.சிங் காலத்தில் மத்திய அரசு வேலையில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன் முதலாக அளிக்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டைத் தரும்போது, பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கவேண்டும் என்கிற ஒரு திருத்தத்தை, வி.பி. சிங் காலத்திய ஆணையில் திணித்தார். அதை அப்படியே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால், அது, சட்ட வலிமையைப் பெற்றுவிட்டது.

இடையில் 1996, 1998, 2004 வரை பாரதிய சனதா, ஆட்சி நடைபெற்றது. 2004 தேர்தலில் இராஜீவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரசு வெற்றிபெற்றது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற கேடுகளை டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சி செய்தது. தமிழ்நாடு-புதுவை உள்ளிட்ட 40 தமிழ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களும் காங்கிரசு அணியைச் சேர்ந்தவர்கள். சோனியா காங்கிரசு செய்த எல்லாத் தீய செயல்களுக்கும் இவர்கள்-உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் உறுதுணையாக நின்றார்கள்.

1. போபர்ஸ் ஊழலில் முதன்மையான குற்றவாளியான இத்தாலிய குவத்ரோச்சி என்கிற தன் உறவினர் குற்றம் அற்ற-அப்பாவி என்று கூறி, மேற்படி வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட எல்லாம் செய்துவிட்டார், சோனியா. அதன் மூலம் தன் கணவர் இராஜீவும் குற்றம் அற்றவர் என்று எண்பிக்க வழிகண்டு விட்டார்.

2. 13.5.2004இல் காங்கிரசு பதவியேற்ற நாள் முதல் திட்டம் தீட்டி, 2006 முதல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சாவுடன் அரசு ரீதியான உறவை வலுப்படுத்திக் கொண்டு, தன் கணவர் இராஜீவைப் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபாகரனைப் பிடித்தே தீரவேண்டும்-அவரைத் தூக்கில் போட்டே தீர வேண்டும் என உறுதி பூண்டு,-ஆயுதங்கள், வானூர்திகள், படைத் தளபதிகள், வானூர்தி ஓட்டுநர்கள், ராடார்கள், பணக் கடன் இலவச நிதி உதவி என எல்லாம் வெளிப்படையாகவே இலங்கை அரசுக்குத் தந்து விடுதலைப் புலிகள் கொல்லப்படவும்; இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போலியான ஒரு மாகாண அரசு அமைக்கப்படவும், புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் பகுதியைக் கைப்பற்றிப் புலிகளை அழிக்கவும் எல்லாம் செய்தது இன்றைய கேடுகெட்ட-சோனியா தலைமையிலான தமிழின அழிப்புக் காங்கிரசு அரசுதான்!

3. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு உயர் கல்வியில் 27% தருவதை முடமாக்கி ஒரு சட்டம் செய்தது சோனியா காங்கிரசு அரசு.

4. அமெரிக்க அணுப் பெருக்க ஒப்பந்தத்துக்கு ஒப்புதலளித்து, இந்தியாவின் தன்னாதிபத்திய உரிமைக்குக் கேடு தேடியது சோனியாவின் காங்கிரசு அரசு.

5. மக்களால் தேர்வுசெய்யப்படும் அவைகளில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அளித்திடச் சட்டம் செய்வதில், வகுப்புவாரி உரிமையை ஏற்க மறுத்து அதனாலேயே இன்றளவும் அதற்கான சட்டம் இயற்றாமல் ஏமாற்றுவது காங்கிரசு அரசு.

6. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் எவரும் ஆசிரியப் பணியில் அமர்த்தப்படத் தகுதி அற்றவர்கள் என, 23.12.2008இல் தனிச் சட்டத்தை மாநிலங்கள் அவையில் நிறைவேற்றியது சோனியா காங்கிரசு அரசு!

இவ்வளவு கேடுகளையும், காங்கிரசின் பேரால்-நேருவின் குடும்ப வாரிசுகள் தத்தம் ஆட்சிக் காலத்தில் வன்னெஞ்சத்தோடு செய்தனர். இந்தக் கேடர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டும், அதை எதிர்த்தும் தமிழகத்தில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்தன. தமிழ்நாடு ஆளுங்கட்சியான தி.மு.க. கடந்த 5 ஆண்டுக்கால மத்திய அரசின் சாதனைகளையும், தமிழ்நாட்டு அரசின் சாதனைகளையும் விளக்கிக் கூறி, வாக்குக் கேட்டது. ஈழத் தமிழர்கள் இலங்கையில் சம உரிமை பெற்றுத் திகழ எல்லாம் செய்வோம் என்று மட்டும் உரத்துக் கூறி வாக்குக் கோரியது.

தேர்தல் நெருங்கும் முன்னரே தமிழக மக்கள் நெஞ்சில் ஈழ விடுதலை ஆதரவுக் கோரிக்கை மகத்தான செல்வாக்குப் பெற்றிருப்பதைக் கண்ட அ.இ.அ.தி.மு.க. தலைவி செயலலிதா திடீரென ஒரு பொய் வேடம் பூண்டு, “தனிச் சுதந்தர ஈழ நாட்டை அமைத்துத் தரப் பாடுபடுவேன்'' என 29.4.2009 முதல் மேடைதோறும் விண்ணதிர முழங்கினார். இவற்றையயல்லாம் தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள் புறந்தள்ளிவிட்டது போல்-இங்கு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகளில்-தி.மு.க அணி, அ.இ.அ.தி.மு.க. அணி இரண்டினுடைய எதிர்பார்ப்பை-குறிப்பாக அ.இ.அ.தி.மு.க அணியின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிய கூறுகள் மூன்று ஆகும்.

1. தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற தே.மு.தி.க.-40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு, 25 தொகுதிகளில் நல்ல அளவில் வாக்கைப் பெற்றுவிட்டது.

8 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் காங்கிரசும், 3 தொகுதிகளில் தி.மு.க.வும், 2 தொகுதிகளில் பா.ம.க.வும், 2 தொகுதிகளில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும், தலா ஒரு தொகுதியில் பாரதிய சனதா, ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் என மொத்தம் 25 தொகுதிகளில் இக்கட்சிகள் தோல்வியடைய தே.மு.தி.க. கணிசமான வாக்கைப் பிரித்தது முக்கியக் காரணம் ஆயிற்று.

2. ஜெயலலிதாவின் புதிய பொய் வேடத்து முழக்கத்தைவிட, தமிழீழ விடுதலை ஆதரவு மாணவ இளைஞர்கள் தெருத் தெருவாக-வீடு வீடாகச் சென்று, “ஈழ விடுதலைக்கு ஊறு விளைத்த காங்கிரசுக்கு வாக்குப் போடாதீர்கள்!'' என வாக்காளர்களிடம் பணிந்து கேட்டு, காங்கிரசுக்காரர்கள், பல இடங்களில்-குறிப்பாக ஈரோடு, சேலம் தொகுதிகளில் தோல்வி பெறக் காரணம் ஆயினர். சிவகங்கையில் ப. சிதம்பரம் குறைந்த வாக்குப் பெறக் காரணம் ஆயினர்.

3. இத் தேர்தலில் பணம் தராத நல்ல கட்சி என்று எதுவும் இல்லை. அதிகப் பணம் தர வக்கு இல்லாத-மனம் இல்லாத கட்சியை நடத்துபவர்கள்-”தேர்தலில் பணம் விளையாடியது'' என்று கூறுவது போக்கிலித்தனமாகும். சில கட்சிக்காரர்கள்-கட்சிப் பொறுப்பாளர்களிடம் தந்த பணம் வாக்காளர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதும் ஓர் உண்மையாகும்.

இது மட்டுமா? இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 206 காங்கிரசுக் கட்சி மக்களவை உறுப்பினர்களுள் 41 பேர் குற்றவியல் வழக்குகள் சாற்றப்பட்டவர்கள்; இதில் 12 பேர் கொடிய குற்றங்களைச் செய்தவர்கள். அதேபோல் பாரதிய சனதாவைச் சேர்ந்தவர்களுள் 42 பேர் குற்றவியல் பின்புலம் கொண்டவர்கள்; 17 பேர் கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள். மாநில அளவில் உ.பி.யில் 80 பேர்களுள் 32 பேர் குற்றம் சாற்றப் பெற்றோர்; தமிழ் நாட்டில் 23 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்; இதில் 9 பேர் கொடுங் குற்றங்கள் செய்தவர்கள். ஆந்திராவில் 17 பேர், பீகாரில் 17 பேர், கொடிய குற்றப் பின்னணி உள்ளவர்கள்.

இவர்களும் நம்மை ஆளப்போகிற மக்களவையில் இன்று உறுப்பினர்கள் ஆகிவிட்டனர். ஒட்டு மொத்தத்தில், இந்தியாவில் உள்ள எந்தத் தேர்தல் கட்சிக்கும் எந்தக் கொள்கையும் இல்லை என்பதையும், கொள்கை இருப்பதாகச் சொல்வோரும் மக்கள் நாயகத்தை வளர்த்தெடுக்க அடிப்படையான கல்வி, இங்கு, எல்லோருக்கும் அளிக்கப்படவில்லை என்பதையும்; வாக்குரிமையின் மதிப்பை உணராமல் அரசு தரும் இலவசங்களை எதிர்நோக்கி ஏங்கும் ஈனப் புத்தியை வளர்த்துவிட்டு-பணத்துக்கும், துணி மணிக்கும், சாராயத்துக்கும், சோற்றுப் பொட்டலத்துக்கும் வாக்குப் போடும் இழிந்த தன்மையை எல்லாக் கட்சிகளும் இங்கே வளர்த்துவிட்டன என்பதையும்; சாதியை மய்யமாக வைத்துத்தான் கட்சிகளால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள் என்பதையும், சமூக அக்கறையும் எந்தப் பொறுப்பும் இல்லாத செய்தித் தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்காளர்களைத் தரங் கெட்டவர்களாக ஆக்கிட எல்லாம் செய்தன-செய்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த இழிந்த சூழலில் தமிழ்நாட்டுத் தமிழர் இப்போது செய்யத்தக்கவை யாவை?

1. தமிழ்நாட்டில் எல்லாவிதப் பள்ளிகளிலும் தமிழில் மட்டுமே எல்லாக் கல்வியையும் கொடு!

2. ஆங்கில மொழியை 3ஆம் வகுப்பு முதல் ஒரு பாடமாகமட்டுமே கற்றுக்கொடு!

3. எல்லாக் கல்வியையும் எல்லா மக்களுக்கும் இலவசமாகக் கொடு!

4. வேளாண் துறைக்கு முதலிடம் கொடு!

5. இலவசங்களைக் கைவிடு! வேலைக்கு உறுதி கொடு!

6. தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சி பெற்றிடத், தமிழகத் தமிழர்கள் ஒருமித்த கருத்துடன் இங்கே பணிபுரிய எல்லா அமைப்புகளையும் அநுமதித்திடு!

என்கிற கோரிக்கைகளை முன்வைத்து, 2009, 2010, 2011 முழுவதும் தமிழகமெங்கும் இக்கோரிக்கைகளைத் தூக்கிப் பிடித்திடத் தமிழ் உணர்வாளர்கள் முன்வர வேண்டும். ஊர் தோறும், தெருத்தோறும் சென்று இக் கோரிக்கைகளை முழங்கி, பெரும் எண்ணிக்கையிலுள்ள மக்களுக்கு மொழி-நாட்டு-இன உரிமை உணர்வை ஊட்டிட வேண்டும். தேர்தலைப் பொறுத்து, நாம் காண வேண்டிய செய்திகள் இவை. நம்மளவில் நாம் செய்ய வேண்டிய பணிகள் மேலே காணப்பட்டவை. இவற்றைக் காணுங்கள்! யாதொன்றையும் சரியயனக் காண்போர், அதைச் செயல்படுத்திட முந்துங்கள்!

1.6.2009 வே. ஆனைமுத்து

கருத்துகள் இல்லை: