செவ்வாய், 23 ஜூன், 2009

வணங்காமண் கப்பலை இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறு இந்தியா உத்தரவிட்டது!

வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.

ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு அது செல்ல வேண்டும் என கப்பல் கேப்டனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து வேறு வழியின்றி வணங்காமண் கப்பல் சென்னை கடல் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளது. அனேகமாக அது மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வணங்காமண் குறித்து சந்தேகமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய தரப்பில், என்ன மாதிரியான சந்தேகம் என்பது குறித்து விரிவாக தெரிவிக்கப்படவில்லை.

-தமிழ்செய்தி

கருத்துகள் இல்லை: