செவ்வாய், 19 மே, 2009
புதிதாக அச்சிடப்பட்டுள்ள பல சிறீலங்கா தேசிய கொடிகளில் தமிழரைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறம் அச்சிடப்படவில்லை ‐ சிங்களவரை பிரதிபலிக்கும் கடுஞ்சிவப்பு நி
இலங்கையின் வடக்கில் நடைபெற்று வந்த யுத்தம் முடிவையெட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
இதன் மூலம் தோற்கடிக்கப்பட முடியாது என பலராலும் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தோல்வி கண்டுள்ளதாகவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது.
இந்த யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் சகலரும் வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் இலங்கை தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென படையினரும் காவற்துறையினரும் ஏன் அரசாங்கமும் கேட்டுக் கொண்டது.
இதற்காக பல இலட்சக்கணக்கில் இலங்கைத் தேசிய கொடிகள் புதிதாக அச்சிடப்பட்டன. இவ்வாறு அச்சிடப்பட்ட தேசிய கொடிகள் இலங்கையின் பெரும்பாலான இடங்களில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
எனினும் புதிதாக அச்சிடப்பட்டுள்ள பல தேசிய கொடிகளில் சிறும்பான்மையினத்தவரான தமிழரைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறம் அச்சிடப்படாமல் அதற்கு பதிலாக பெரும்பான்மை இனத்தவரான சிங்களவரை பிரதிபலிக்கும் கடுஞ்சிவப்பு நிறமே அச்சிடப்பட்டுள்ளது.
இலங்கை தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கத்தை சுற்றி காணப்படும் கடுஞ்சிவப்பு நிறமானது பெரும்பான்மை இனத்தவரான சிங்களவரையும், பச்சை நிறமானது சிறும்பான்மை இன முஸ்லிம் இனத்தவரையும், செம்மஞ்சள் நிறம் சிறும்பான்மை தமிழினத்தையும் குறிக்கும்.
ஆனால் தற்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள புதிய தேசிய கொடிகளில் பெரும்பாலும் தமிழ் மக்களை பிரதிபலிக்கும் செம்மஞ்சளுக்கு பதிலாக கடுஞ்சிவப்பு நிறம் அச்சிடப்பட்டுள்ளது.
மூவின மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும், சகோதர உணர்வுடனும் வாழும் நாடு இது என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கம் இதில் எவ்வாறு கவனம் செலுத்தாது போனது ஏன் என பலராலும் கேள்வி எழுப்பப்படுகின்றன.
இதனை அச்சகத்தில் ஏற்பட்ட தவறு என உதாசீனதாக எடுத்துக் கொள்ளமுடியாது எனவும் இது அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு எனவும் கொழும்பில் வசிக்கும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உட்பட சகல தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேசிய கொடி விவகாரமானது இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் நிலைமையினை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ளது.
இவ்வாறு தேசிய கொடியிலிருந்து தமிழினத்தை பிரதிபலிக்கும் செம்மஞ்சள் நிறம் சிங்களவர்களின் நிறமாக மாறியது போன்று தமிழ் கிராமங்களும் சிங்கள கிராமங்களாக மாற்றமடையப் போகுதோ என்று எண்ணத் தோன்றுவதாகவும் மற்றுமொருவர் தெரிவித்தார்.
அரசாங்கம் மிகவும் நேர்த்தியாகவும், நாட்டு மக்கள் தொடர்பில் பாரிய பொறுப்புணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவதாக தெரிவிக்கையில், ஒரு நாட்டின் தேசிய கொடியில் இவ்வாறான தவறு இடம்பெறுவதை எவ்வாறு அனுமதித்தது என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்
நன்றி:-வியப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக