இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆந்திரா வந்தடைந்த தமிழர்கள் கூறும் பொழுது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையென்றால் சிறிலங்காவில் தமிழர்கள் அடிமைகளாக்கப்படுவார்கள் என்றனர்.
இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகள், விஷக்குண்டுகள் வீசியது. இதில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கை-கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார்கள். இந்த போரின்போது இலங்கையின் வடபகுதியில் உள்ள சவுதாலாவை சேர்ந்த கிருஷ்ணவேணி, சுகன்யா உள்ளிட்ட 15 பேர் படகு மூலம் ஆந்திரா தப்பி வந்தனர். அவர்கள் கூறியதாவது:-
இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. காரணம் என்னைப் போன்ற பெண்கள் இலங்கை மண்ணில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படுத்தியது அவர்தான்.
நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கூட சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். தமிழர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் சிங்கள ரவுடிகள் புகுந்து பெண்களை கற்பழிப்பார்கள். வீடு, வீடாக வந்து ஆயுதங்களை காட்டி பணம் - நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்கள்.
அவர்கள் மீது சிங்கள போலீசாரிடம் புகார் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மாறாக புகார் கொடுத்த தமிழர்களை எங்கள் இனத்தவர் மீதான புகார் கொடுக்கிறாய். உனக்கு எவ்வளவு தைரியம்? என்று அடித்து உதைத்து விரட்டி விடுவார்கள். இல்லையென்றால் புகார் கொடுத்தவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளி விடுவார்கள்.
இதனால் சிங்கள ரவுடிகள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டால்கூட அங்குள்ள போலீஸ் நிலையங்களில் எங்களால் புகார் கொடுக்க முடியாது. சிங்களர்களின் இந்த தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபாகரன். அவர் இருக்கும் வரைதான் அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர் இல்லாவிட்டால் சிங்கள அரசு தமிழர்களை மீண்டும் அடிமைகளாக மாற்றிவிடும்.
பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக சிங்கள ராணுவம் பொய் பிரசாரம் செய்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களின் கடவுள் பிரபாகரன். அவரது படத்தை வைத்துதான் நாங்கள் வழிபாடு நடத்தி வருகிறோம். தமிழர்களின் காவல் தெய்வமான அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக