தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம் 4000 தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர் கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் விடுதிவரை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வீரவணக்கப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்தப் பேரணிக்கு சென்னை நகர ஆணையர் அனுமதி மறுத்தார். என்றபோதும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடத்தப்படும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்தார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் தடையை மீறி நடத்தப்படும் பேரணியில் ம.தி.மு.க பங்கு கொள்ளும் என அறிவித்தார்.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படம் போட்டு வீரவணக்க வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாகை ஒன்றை ஒருங்கிணைப்புக் குழுவினர் ஒரு ஊர்தியில் வைத்திருந்தனர். காவல்துறை அதிகாரிகள் அந்த வாடகை ஊர்தி ஓட்டுநரை மிரட்டி வாகனத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதனை எதிர்த்து குரல் எழுப்பியவர்களை உடனே கைது செய்யப் போவதாக மிரட்டினர். கூடியிருந்தவர்கள் காவல்துறையின் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்தனர். தலைவர்கள் வராமல் யாரையும் கைது செய்யக் கூடாது என காவல்துறையினரிடம் வாதிட்டனர்.
இதற்கிடையே, மன்றோ சிலைக்கு எதிர் திசையான பெரியார் சிலைப் பக்கமிருந்து திடீரென பெரும் ஆரவாரம் கேட்டது. திறந்த ஊர்தி ஒன்றில் பழ. நெடுமாறன், வைகோ, இருவரும் கையில் தமிழ்ச்செல்வன் படம் போட்ட வீரவணக்கப் பதாகைகளை ஏந்தியபடி,
சாலையின் மறுபுறம் கூடியிருந்த ஏறத்தாழ 4000 பேரும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ்நாடு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து ஆகியோரும் தலைவர்கள் வந்த ஊர்தியில் ஏறிக் கொண்டனர்.
இது கூடியிருந்த உணர்வாளர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில் காவல் துறையினர் கூடியிருந்த கூட்டத் திடையே புகுந்து தொண்டர்களை பலவந்தமாக இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்ற முனைந்தனர்.
அதோடு நில்லாமல், 83 வயதான ஆனைமுத்து அவர்களை, அவரின் வயதைக் கூடப் பொருட்படுத்தாமல், ஊர்தியிலிருந்து கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர். உணர்வாளர்கள் ஓடி வந்து அதைத் தடுத்து காவல்துறையினருடன் சண்டையிட்ட பிறகே அவரை மெதுவாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் தலைவர்கள் ஒவ்வொருவராக காவல் துறை வாகனத்தில் ஏறினர். கூடியிருந்த அனைவரையும் கைது செய்யாமல், ஏறத்தாழ 1000 பேர் அளவில் மட்டுமே கைது செய்து அவர்களை இராசரத்தினம் விளையாட்டரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரவு 10 மணியளவில் அவர்கள் அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி புழல் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த திருமாறன், இராசேந்திர சோழன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், ஓவியர் வீர சந்தானம், சந்திரேசன், மரு. சுந்தர், புதுவை அழகிரி, நா. வை. சொக்கலிங்கம், பொன்னிறைவன், கி. த. பச்சையப்பன், கா. பரந்தாமன், இரா. பத்மநாபன், கே. எஸ். இராதாகிருஷ்ணன், ம.தி.மு.க-வின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், ம.தி.மு.க வழக்கறிஞர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி: தென் ஆசிய செய்திகள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக