புதன், 23 மே, 2007
“உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்”-திரு. பழ. நெடுமாறன் (புத்தகப் பார்வை)
அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள்ளி பார்ப்பனியம் கற்பித்த முடை நாற்றம் வீசும் ஆரிய-இந்து மரபுகளை ஏற்றுக் கொள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் உருவாக்கப் பட்ட “ உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்” என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாக வெளியாகி உள்ளது.
நூல் மொத்தம் முப்பத்தி ஏழு அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. ஆரியர் வருகையால் ஏற்பட்ட வருணாசிரம தர்மத்தின் தாக்கங்களும் அவற்றை எதிர்த்த பௌத்த சமண சமயங்களின் எழுச்சி மற்றும் பழந்தமிழரின் வழிபாடுகள் போன்றவற்றை இந்நூலின் தொடக்க அத்தியாயங்கள் விரிவாக விளக்குகின்றன. வள்ளலார் இராமலிங்க அடிகள், மகாத்மா ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொடுமைகளுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் அவர்களின் சமூக சீர்திருத்தப் பணிகள் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. இந்தியத் தேசியமும் இந்து தேசியமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான பூகோளக் கட்டமைப்பே இந்தியா, அதற்குமுன் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் இந்தியா என்றொரு நாடு ஒரு கொடியின் கீழ் ஏற்படவில்லை என்பதுடன் இந்து என்ற சொல் முதன் முதலாக கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் அரேபியர்களால்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதற்கு முன் எந்த இலக்கியங்களிலோ, வேதங்களிலோ புராண இதிகாசங்களிலோ இந்து என்ற சொல் இல்லை என்ற உண்மையையும் வெளிக்காட்டியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திலகர், அரவிந்தர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் இந்தியத் தேசியம் என்ற பெயரில் இந்துத் தீவிரவாதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து, இந்துக்களே இந்நாட்டின் மைந்தர்கள் என்று முஸ்லீம்களுக்கு எதிரான மதத் துவேசத்தையும் வகுப்புவாத வெறியையும் விதைத்தனர். இவர்களால் உருவாக்கப் பட்ட இந்து மதவெறி வி.டி.சாவர்க்கர் காலத்தில் மேலும் தீவிரமாகி இந்தியாவில் இரத்த ஆற்றை ஓட வைத்ததுடன் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திய அண்ணல் காந்தியடிகளின் உயிரையும் பறித்த நிகழ்ச்சிளை எல்லாம் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளுடனும் பல வரலாற்று அறிஞர்களின் மேற்கோள்களுடனும் நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். அண்ணல் காந்தியடிகளின் கொலையில் மறைக்கப் பட்ட உண்மைகள் “காந்தியடிகளும் ஆர்.எஸ்.எஸ்.சும்” என்ற அத்தியாயத்திலும் “கொலைவெறிக் கும்பல்” என்ற அத்தியாயத்திலும் விரிவாக அலசப்பட்டுள்ளன. காந்தியடிகளைக் கொலை செய்த இந்து வெறியரான நாதுராம் கோட்சேக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த வி.டி.சாவர்க்கருக்கும் இருந்த உறவும், காந்தி கொலையின் முக்கிய குற்றவாளி வி.டி.சாவர்க்கர் என்பதும் மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ‘தேசத்தந்தை’ என்று கருதப்படும் காந்தியடிகளைக் கோட்சேயை அனுப்பி கொலை செய்த குற்றவாளி வி.டி.சாவர்க்கரின் உருவப் படத்தை இந்துத்துவக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்திய நாடளுமன்றத்தில் திறந்து வைத்து அழகு பார்த்த அவலமும் நடைபெற்றது. காந்தியடிகளைக் கொலை செய்த காவிக் கூட்டம் பச்சைத் தமிழர் காமராசரை உயிரோடு வைத்துக் கொளுத்த முயன்றதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
பாகிஸ்தான் பிரிவினையை முன் வைத்த முகமது அலி ஜின்னா உண்மையில் அதைத் தவிர்த்து மானில சுயாட்சியை ஏற்கத் தயாராக இருந்தார் என்றும் இந்தியப் பெருமுதலாளிகளின் இந்துத் தீவிரவாதப் போக்கினால் அவர் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது என்ற உண்மையை அன்றைய காலகட்டத்தில் இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த மௌலான ஆசாத் போன்றவர்களின் மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பசுவின் புனிதம் பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் முன்னொருகாலத்தில் பசு வேட்டையாடி அவற்றை யாகத்தில் வெட்டி பலி கொடுத்ததோடு மட்டுமல்லாது அவற்றின் இறைச்சியையும் உண்டார்கள் என்றும், ஆரியர்களால் போற்றப் படும் வேத விற்பன்னர்களான பிரஜாபதி, யாக்ஞவல்கியர், தேவகுரு பிரகஸ்பதி போன்றவர்களும் மனு சாத்திரம், மகாபாரதம், போன்ற ஆரிய நூல்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன என்பதை எல்லாம் புராண இதிகாசச் சான்றுகளுடன் திரு பழ. நெடுமாறன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொத்தத்தில், திலகரால் உருப்பெற்ற இந்துத் தீவிரவாதம், வி.டி.சாவர்க்கரால் வடிவம் பெற்று இன்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற மதவெறி இயக்கங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவர்களின் பாரதப் பண்பாடு என்பது பார்ப்பனப் பாசிச கருத்துருவாக்கமே. இவர்களின் ‘அகண்ட பாரதக் கனவு’ என்பது, ஜெர்மனியைச் சுற்றியிருந்த ஆஸ்திரியா, போலந்து, அங்கேரி போன்ற நாடுகளைக் கைப்பற்றி, தேசிய இனங்களை அழித்து, ஜெர்மனிய வல்லரசைக் கட்டி எழுப்ப முயன்று ஐரோப்பாவையே இரத்த வெள்ளத்தில் மூழ்க வைத்த பாசிச இனவெறியர் இட்லர் கண்ட கனவுக்கு ஒப்பானது என்பது தெளிவாகிறது.
திரு பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்த நூலை வாசித்து முடித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு ஆழமாகச் சிந்தித்தால் ஓர் உண்மை தெளிவாகப் புலனாகிறது. உண்மையில் நாம் எல்லோரும் இந்துக்கள் நமக்குள் வேற்றுமைகள் வேண்டாம் என்ற எண்ணம் இந்தியத் தேசியவாதிகளுக்கோ அல்லது இந்துத் தேசியவாதிகளுக்கோ இருந்திருந்தால் அவர்கள் தமிழீழத்தை ஆதரித்திருப்பார்கள் ஏனெனில் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவே கருதப்படுகின்றனர், மற்றும் இந்தியாவின்பால் பற்றுக் கொண்டவர்கள். ஆனால் இந்திய மேலாதிக்க வர்க்கமானது “இந்திய-சீனப் போர்”, “இந்திய-பாகிஸ்தான் போர்” இன்னும் பல காலகட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு ஆதரவு அளித்த சிங்கள அரசையே ஆதரிக்கிறது. சிங்களவர்கள் வேறு மதத்தினராக இருந்தாலும் ஆரியர்கள், நம்மவர்கள் என்ற அவர்களின் நினைப்பே அதற்குக் காரணம். தமிழர்கள் என்ன செய்வார்கள் பாவம் அவர்கள்தான் பிரம்மாவின் காலில் இருந்து தோன்றிய சூத்திரர்களாயிற்றே.
தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் படித்துப் பயன் பெறக்கூடிய அரிய வரலாற்றுத் தொகுப்பாக இந்நூல் அமைகிறது. இந்து-இந்திய மாயையில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் இந்நூலை படித்தபிறகாவது மத அடையாளங்களைத் துறந்து தமிழ்த் தேசிய அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டால் அது, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக