புதன், 23 மே, 2007

உலகமயமாக்கல்

உலகமயமாக்கல் கொள்கையால் உலக அரசியல், பொருளாதாரம் மாறிவருகிறது. இதனால் தொழிலாளர்கள் நிலையும் மாறிவருகிறது. தொழிலாளர்கள் யார் என்ற வரையறையும் மாறிவிட்டது.

உலகெங்கும் தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரமில்லை, அவர்களின் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. இவற்றை பற்றி இக்குறுங்கட்டுரையில் பார்ப்போம்.

"ஆர்த்திடும் இயந்திர கூட்டங்களே, உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ, நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ"
தமிழ்க்கவியின் இந்த கவிதை வரிகள் தொழிலாளர்களது முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆனால், உலகில் அனைத்தையும் படைக்கிற தொழிலாளர் நிலை இன்று மிக பரிதாபமான நிலைக்கு மாறியிருக்கிறது.

உழைப்பின் உருமாற்றம்
கடந்த காலத்தில் “தொழிலாளர்” என்பது விவசாயிகளையும், ஆலையில் பணிபுரிபவர்களையும் குறித்தது. அதிகமாக உடல் உழைப்பை மட்டுமே மையமாக கொண்டது இந்த விளக்கம்.

அந்த காலத்தில், கடினமான உடல் உழைப்பை வைத்து, சுரங்கங்கள், ஆலைகள், தோட்டங்கள், விவசாயம் போன்றவை அதிகமாக இயங்கிவந்தது. இப்போது தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் அந்த நிலை மாறிவிட்டது. அதிகமான மக்கள் உயர் தொழில்நுட்ப வேலைகளை செய்கிறார்கள். கல்வி, மருத்துவம், சமூகநலம் போன்ற துறைகளின் ஈடுபாடு பெருகிவருகிறது. இன்றைய உழைப்பின் நோக்கம். படைப்பு திறனை வெளிக்கொண்டு வருவதும்அதனால் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதும் முக்கிய பண்பாக அமைந்துள்ளது. வியாபாரம் தான் பணத்தை மையமாக கொண்டு இயங்குகிறது.

மாறிவரும் உலக சூழ்நிலைக்கு ஏற்ப, உழைப்பிற்கு புது விளக்கம் தேவைப்படுகிறது. இந்த விளக்கம் பல துறைகளை உள்ளடக்க வேண்டும்.

இன்றைய காலத்தில், உழைப்பு என்பது உடல், சிந்தனை, அறிவு, சார்ந்த பணிகளால், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக படைத்தல், உற்பத்தி செய்தல், மெருகூட்டுதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மக்கள் பிறருக்காகவும் தங்களுக்காகவும் ஆற்றும் சமூக, பொருளாதார, கலாச்சார கடமையின் வழியாக உழைப்பு மனிததன்மையடைகிறது. இதனால் உழைப்பு வெறும் பணத்திற்காக விற்பனை செய்யும் சக்தியல்ல. மாறாக, சமூகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் உன்னத கடமை.




இன்று உழைப்பை சொந்தமாக்கி வைத்திருப்பது யார்? சமுதாயமா இல்லை ஒரு குறிப்பிட்ட கூட்டமா? இது தான் சமூகத்தில் கேட்கப்படவேண்டிய முக்கிய கேள்வி. தனி முதலாளிகள் ஆதிக்கம் நிறைந்த காலம் மாறிவிட்டது. இன்று உலகை கட்டுப்படுத்துவது அமரிக்காவின் பொருளாதார, கலாச்சார, அரசியல் ஆதிக்கம். இந்த வழியை பின்பற்றி தான் பன்னா¡ட்டு தனியார் நிறுவனங்கள் உழைப்பை கட்டுப்படுத்துகிறது. நமது அரசுகளின் திட்டங்கள் இவற்றிற்கு சாதகமாக மாறி வருகிறது. இதுதான் உலகமயமாக்கல் கொள்கையின் தாக்கம். இதை சரிவர புரிந்து கொள்ள உலகமயமாக்கல் திட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளர் உரிமைகள் தோன்றிய விதம்
தொழிலாளி என்றவுடன் நம்மில் பலருக்கு வெறுப்பும், வேண்டாதவர்களை பார்ப்பது போன்ற எண்ணமும் ஏற்படுவதை மறுக்க இயலாது. அதே நேரத்தில், இன்று நாம் உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை தொழிலாளர் உழைப்பில் வந்தவை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இப்படி சமூகத்தின் தேவைகளுக்கு உழைக்கும் மக்களைப் பற்றி கவனமும், அக்கறையும் செலுத்துவது நமது முக்கிய கடமை.



இன்று நாம் அனுபவித்து வருகிற அனைத்து உரிமைகளும் ஒரு காலத்தில் போராடி பெற்றவை. உதாரணமாக எட்டு மணி நேரம் வேலை என்பது தானாக கிடைத்ததல்ல. 1886 ஆண்டில் சிக்காக்கோ நகரில் வெடித்த போராட்டம் வழிதான் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்வதிலிருந்து 8 மணி நேரம் வேலை என்ற உரிமை பிறந்தது. இதற்காக உயிரை கொடுத்தவர்கள் பலர். அதனால் இன்று 8 மணி நேரம் வேலை என்ற உரிமைக்கு என்ன ஆகி இருக்கிறது? இன்று உரிமைகளுக்கான நடவடிக்கைகளும், போராட்டங்களும் நம்மால் எப்படி பேசப்படுகிறது?

கட்டாய அதிகநேர வேலை (Forced overtime work)
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமொரிக்கா, ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், ஸ்பெயின், ஹாங்காங்க், போன்ற நாடுகளில் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக கட்டாயமாக வேலை வாங்கப்படுகிறது. ஒரு நிறுவனம் உற்பத்தி அல்லது அதன் சேவையை அதிகரிக்கும் போது தொழிலாளர் பற்றாக்குறையால் அதிகநேர வேலை தேவைப்படுகிறது. அந்த நிலைக்கு நிறுவனம் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். 8 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால் இரண்டு மடங்கு சம்பளம் வழங்கவேண்டும். இந்த நடைமுறை விதி மீறப்படுகிறது மட்டுமல்ல, அதிக நேரம் வாங்கப்படுகிற வேலைக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. உற்பத்தி அல்லது வியாபாரதில் ஈடுபடும் போது பணம் மட்டுமல்ல நோக்கமாக இருக்கப்பட வேண்டியது. தொழிலாளர் நலனும் பேணப்பட வேண்டும்.

இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பிரேசில், கொலம்பியா போன்ற பல நாடுகளிலும் ஒப்பந்த தொழிலாளர் என்ற பெயரில் அதிகநேர வேலை விருப்பத்துக்க்கு மாறாக திணிக்கப்படுகிறது. கட்டாய வேலையை உலக தொழிலாளர் அமைப்பில் (International Labour Organisation, an organisation for workers in the United Nations system) தடைசெய்ய பேசி திட்டமிட்டு வருகிற நமது அரசுகள்ஏன் இப்படி முரண்பாடாக நடக்கிறது? ஏன் இந்த நிர்பந்தங்கள்?

வேலையில்லா திண்டாட்டம்
இதே வேளையில், வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலையில்லை. ஜப்பான் நாட்டில் வேலையில்லா இளைஞர்கள் ரயில் நிலையங்களிலும், சாலையோரங்களிலும் கடுங்குளிரில் எந்த வசதியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வாழ்கிறார்கள். ஆஸ்திரேலியா, அமரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற சில வளர்ந்த நாடுகளில் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை இப்போது பறிக்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள் நிலை பரிதாபம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. நமது நாட்டில் சுமார் 20 கோடிக்குஅதிகமான இளைஞர்களுக்கு வேலை இல்லை. இந்த இளைஞர்களது சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த சரியான திட்டங்கள் இல்லை. சுயதொழில் திட்டங்கள் என்று இருக்கிறவை கூட வேலையில்லாதவர்களுக்கு பயன்படவில்லை. பணியில் இருப்பவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. பல அரசுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதால் பலரின் வேலை பாதுகாப்பு பறிபோகிறது.

நமது நாட்டில் கிடைக்கிற வளங்களை பயன்படுத்தி புதிய வகை தொழில்களை உருவாக்கினால் பலருக்கு வேலை கிடைக்கும். அதிகநேர வேலையை தடை செய்து, பலருக்கு புது வேலையை உருவாக்கலாம். இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் 8 மணி நேர வேலை கூட அதிகமானது, ஆக அதை 6 மணி நேரமாக மாற்றினால் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். ஏன் இப்படிபட்ட சமுதாய நோக்கமுடைய திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படவில்லை?

குறைந்த கூலி, பணி பாதுகாப்பற்ற தன்மை
ஏராளமான தொளிலாளர்கள் எந்த பாதுகாப்பும், உரிமைகளும் இல்லாமல், அமைப்பு சாராத வேலைகளில் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள். இவர்கள் கடைவீதிகளிலும், வீடுகளிலும் பொருட்களை உருவாக்க, விற்க வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை. பிலிப்பைன்ஸ், தாய்லந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில்பல குடும்பங்கள் கடை வீதியில் எலுமிச்சை பழம், கருவாடு (உலர்ந்த மீன்), காய்கறிகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை விற்று வாழ்கிறார்கள். இதனால் வரும் வருமனம் குறைவானதால் குழந்தைகள் படிக்க வாய்ப்பு இல்லை.



நமது பகுதிகளில் கடைகளிலும், சிறுநிறுவனங்களிலும் வேலை செய்பவர்களுக்கு மாதம் வெறும் 500 முதல் 750 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு நாளைய கூலி 16 முதல் 25 ரூபாய் மட்டுமே. ஆனால் அவர்களிடம் வாங்கப்படுகிற வேலை சுமார் 10 முதல் 12 நேரம். இது நீதியான நடைமுறை தானா? இந்த சம்பளம் இவர்களுக்கு போதுமானதா? குறைந்தபட்ச கூலி 8 மணி நேரத்துக்கு 50 ரூபாய் (இதன் படி மாதம் 1500 ரூபாய் வழங்கப்படவேண்டும்) என சட்டம் இருக்கையில் இந்த நிலை தொடர்வது ஏன்? இலாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பது சரிதானா?

இந்த நிலை சாதாரண கடைகளில் மட்டுமல்ல. மருத்துவமனைகள், ஆங்கில பள்ளிகள், சிறிய தொழில்கள், ஆலைகள் என அனைத்து இடங்களிலும் இது தொடர்கிறது. உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்படுகிறது. இந்த சட்டவிரோத செயல்களை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை சரிவர செயல்படவில்லை.

பெண் தொழிலாளர்களின் பரிதாபநிலை
பெண்களின் நிலமை இன்று மிகவும் மோசமனது. பணி தலங்களில் சரியான பாதுகாப்பில்லை. ஒரே விதமான வேலைக்கு பெண்களுக்கு ஆண்களை விட குறைந்த கூலி வழங்கப்படுகிறது. பாலியல் கொடுமைகளும், பெண் என்பதால் பதவி உயர்வு மறுக்கப்படுவதும், அவமதிக்கபடுவதும் எல்லா இடங்களிலும் காணலாம். பெண்களுக்கு தொழிற்சங்கங்களில் சரியான இடமில்லை.

பெண்களுக்கு பேறுகால விடுப்பு, குழந்தைகளை பராமரிக்கும் வசதி இவை மறுக்கப்படுகிறது. நமது வீடுளில் பெண்கள் செய்யும் வேலைகளுக்கு மதிப்பு வழங்கப்படுகிறதா? அம்மா, சகோதரிகள், மனைவி என பலரும் செய்யும் வீட்டுவேலைகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கிறோமா?

விவசாயிகளின் நிலை
விவசாயத்தில் நன்றாக வளர்ச்சியடைந்த, பெல்ஜியம், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. தொழில்நுட்பம் (மிகப்பெரிய எந்திரங்கள் முதல் தனி அறைகளில் பயிர் வளர்க்கும் உயர் தொழில்நுட்பம் வரை), மானியம் (அரசு உதவி) போன்றவை வளர்ந்த நாடுகளில் விவசாயிகளுக்கு மிக எளிதாக கிடைக்கிறது. வளரும் நாடுகளில் கால்நடைகள் மற்றும் மரபு ரீதியான தொழில்நுட்பம், அரசு உதவி இல்லாத நிலை. இதனால் வளரும் நாடுகளில் உற்பத்தி குறைவு, உரம் மற்றும் விதை பொருட்களின்விலை அதிகம். பட்டினி சாவுகளும் இடம்பெயர்தலும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையாக மாறியது இதனால் தானே?



ஆனால் உலகமயமாக்கல் திட்டதின் படி எல்லோருக்கும் பொதுவான சந்தை முறை. இந்த விதமான போட்டியான சந்தையில் வெற்றி வளர்ந்த நாடுகளுக்கு. பாதிப்பு வளரும் நாடுகளின் சாதரண விவசாய தொழிலாளிக்கு.

குளிர்பான கம்பெனிகள் வளரும் நாடுகளின் தண்ணீரை விற்பனை செய்து அதிக இலாபமடிக்கிறது. இந்த தன்ணீருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி எற்படுகிறது. இதன் பாதிப்பும் வளரும் நாடுகளின் ஏழை விவசாயிக்கு. அயல்நாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு கொள்ளை இலாபம்.

இந்த நிலமைகளுக்கு காரணங்கள்
இந்த சூழ்நிலைகளுக்கு காரணங்கள் பல அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

# உலக நாடுகளின் பொருளாதார திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமனவை.
# அந்தந்த நாடுகளின் தன்மைக்கு ஏற்ற பொருளாதார திட்டங்களை புறக்கணித்து, உலகம் முழுவதும் ஒரே வகையான திட்டத்தை நடைமுறைப் படுத்தியது.
# முதலீட்டாளர்களுக்கு சாதகமாக, தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து ஒப்பந்த வேலை முறைக்கு (contract work) அனுமதி கொடுத்து பல கோடி தொழிலாளர்களது வேலை பாதுகாப்புக்கு ஆபத்தை உருவாக்கியது.
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கை என்ற பெயரில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், அயல்நாட்டு, தனியார் நிறுவனங்களை மட்டும் நோக்கமாக கொண்ட திட்டங்கள்.
# உலக வங்கி, பன்னாட்டு வர்த்தக நிறுவனம் (WTO) போன்றவற்றின் கடுமையான நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட்டு கடன் பெறுவது.
# உலக தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) வழிகாட்டுதல்கள், தொழிலாளர் நல உடன்படிக்கைகள் சரிவர நடைமுறை படுத்தாதது.
# தொழிலளர்கள் நலனில் அக்கறையுடன் அரசாங்கங்கள் செயல்படாதது.
# தொழிலளர்களுக்கு பாதுகாப்பான பொருளாதர, சமூக திட்டங்களை நடைமுறைபடுத்தாதது.

புதிய உலகை நோக்கி
இந்த நிலைகள் மாற நாம் புது உலகை உருவாக்க வேண்டும். இந்த புதிய உலகில் வேலை, வளங்கள் அனைத்தும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். மனிதனை மையமாக வைத்து, சமூக பொருளாதார திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அடக்குமுறைகளும், அடிமைத்தனமும் அழிந்து சமத்துவம், விடுதலை, மனித உரிமைகள், நீதி, சமாதானம் போன்ற நல்ல பண்புகள் புது உலகின் மைய கருத்தாக அமைய வேண்டும்.


இந்த சூழ்நிலைகளை உருவாக்க நாம் அனைவரும் சமூக நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மக்களிடம் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளூக்கு தீர்வை தருகிற தன்னலமற்ற தலைவர்களை உருவாக்க வேண்டும். நமது செயல், சிந்தனை முதலியவற்றில் மாற்றம் வேண்டும். இந்த மாற்றத்துக்கு நமது கல்வி உதவியாக இருக்கவேண்டும். புதிய உலகம் பற்றிய நமது கனவும் , முயற்சிகளும் நமக்கு விடிவை தேடித் தரட்டும்.

நன்றி :-நிலா முற்றம்

கருத்துகள் இல்லை: