வெள்ளி, 11 மே, 2007

என் மரணத்தில்...

எழுதுவதற்கு இதை
இன்னும் காலங்கள்
இருக்கலாம்
பழுதுற்றுப்
பயனின்றிப்
பிணமாய் நான் விழ
இன்னும் வருடங்கள் ஆகலாம்
அவசியமாய் இது
நடப்பதற்கே
அவசரமாய் இதை
எழுதுகின்றேன்
அலட்சியமாய் விடாமல்
என் இலட்சியமாய் ஏற்று
முடிப்பீர்
ஒவ்வொரு தமிழனின்
இறப்பிலும்
தன் பிறப்பும் சிறப்பும்
அறியா
தமிழினத்து மனிதர் சிலர்
தமிழனாய்ப்
பிறத்தல் வேண்டும்
இறந்து நான்
இருக்கையில்
மறந்தும்
யாரும் அழுது
என் மரணத்தினை
இழிவு செய்யாதிருங்கள்
ஒரு நாள் என்னைச்
சென்னையில் வையுங்கள்
மறு நாள் என்னைக்
காரைக்காலில் புதையுங்கள்
வலத்திய இடத்தில்
ஒலிப்பெருக்கிகள் வையுங்கள்
தமிழிசைப் பாடல்கள்
ஒலிமுழக்கம் செய்யுங்கள்
தமிழாய் வாழும்
தமிழறிஞர்கள்
ஊரும் உறவும்
என் உடல் சூழும் வேளை
தமிழ்ச் செழுமை
தமிழனப் பெருமை
வந்தவர் அறிய
உரையாற்றி உரையாற்றி
நில்லுங்கள்
உணர்வுற்று சில தமிழன்
பிறப்புற்றான் என்றால்
என் பிணம் கூட
உளம் மகிழும்
புதையுங்கள்
ஊர்வலமாய்
என்னுடல் போகும் போது
தமிழ் உணர்வுப் பாடல்கள்
உடன்வரச் செய்யுங்கள்.
வழியில் ஒரு நொடி
அரசலாற்றின்
அந்த நீர்
ஒலி
கேட்க நிறுத்துங்கள்
உயிர்க்காற்றுப் போன
என் உடலில்
அரசலாற்றுக்
காற்று
சில நொடி
படச் செய்யுங்கள்
புதைக்கும்போது
என் இசைப்பாடல்
ஒன்று ஒலிக்கப் புதையுங்கள்
ஈழம் பிறக்கும்
நாள் முன்
நான் இறக்கும்
நாள் வந்தால்
ஈழம் பிறக்கும் நாள்
"ஈழம் பிறந்தது" என்று
என் கல்லறையில்
எழுதுங்கள்
இந்த எழுத்துக்கள்
படர்ந்த பின்தான்
மண்ணுள்
என் உடல்
செரிக்கும்
-பாவலர். காரை மைந்தன
நன்றி: தென்செய்தி, Sept 16, 2006

கருத்துகள் இல்லை: