| "எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்துப் போராடும்" - பழ.நெடுமாறன். Posted: 12 Sep 2007 04:35 AM CDT 12-09-2007: இலங்கையில் வாடும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் படகு மூலம் எடுத்துச் செல்ல முயன்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களைத் தமிழகப் போலிசார் கைது செய்து நாகை அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அப்போது பழ.நெடுமாறன் அளித்த பேட்டி: ஈழத் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் திரட்டி வைத்திருந்த உதவிப் பொருட்கள் மருந்து, உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு நாங்கள் திரட்டி வைத்திருந்த பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிச் செல்ல படகுகளைத் தயார் செய்து வைத்திருந்தோம். மாநில அரசு படகு தரக் கூடாது என மீனவர்களை மிரட்டியுள்ளது. இதனால் யாரும் படகு தரவில்லை. இது எங்களுடையப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதனால் எங்கள் குழு உடனடியாக கூடிப் பேசி முடிவெடுத்து, இன்று முதல் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்றும், மற்றவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். அதன்படி போராட்டத்தைத் தொடர்கிறோம். எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்து போராட்டத்தை நடத்தும். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். |
| இலங்கைக்குப் படகுமூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற பழ.நெடுமாறன் கைது Posted: 12 Sep 2007 07:44 AM CDT இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர். இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றனர். அப்போது, மீனவர்களிடம் போலிசார் படகுகள் கொடுக்கக் கூடாது என மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பழ.நெடுமாறன், நாகை கடற்கரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து அமர்ந்து கொண்டார். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. செய்வதறியாது தவித்த போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நாகை அருகேயுள்ள காடம்பாடி காவலர் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனிடையே, பழ.நெடுமாறன் "ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்ப மத்திய, மாநில அரசுகள் தடை போடுகின்றன. என்ன விலைக் கொடுத்தாவது எடுத்த செயலை முடிப்போம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்" என அறிவித்துள்ளார். அவரோடு கைது செய்யப்பட்ட அனைவரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசும் காவல்துறையும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். பழ.நெடுமாறன் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதத்தால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
வியாழன், 13 செப்டம்பர், 2007
"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்துப் போராடும்" - பழ.நெடுமாறன்.
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007
தோழருக்கு செவ்வணக்கம்...(தனி மடல்)
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
திங்கள், 27 ஆகஸ்ட், 2007
பொறுத்தது போதும்!! பொங்கி எழுவோம்!!
| பொறுத்தது போதும்!! பொங்கி எழுவோம்!! பட்டினி கிடக்கும் நம் சகோதரர்களுக்கு படகுகளில் உணவு, மருந்து கொண்டு செல்வோம்!! பழ. நெடுமாறன் |
| யாழ் நகரம் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு வாழும் ஐந்து இலட்சம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க சிங்கள அரசு முடிவு செய்தது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் 'ஏ9' நெடுஞ்சாலையை அடைத்தது. உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் இன்றியமையாத பொருட்கள் எதுவும் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானார்கள். பொருட்களின் விலை பலநூறு மடங்கு உயர்ந்தது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். நோயாளிகளும் முதியோர்களும் குழந்தைகளும் போதுமான மருந்துகள் இல்லாமல் சாவைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். தங்கள் கண் எதிரிலேயே தங்களால் நேசிக்கப்படுபவர்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்து மக்கள் கண்ணீர் சிந்தினர். |
--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2007
செஞ்சோலை படுகொலை நினைவு தினம்
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்
அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன்"தமிழ்த்தினம்" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள்.போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே , செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.
ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது.
அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் "கிபிர்" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன.
ஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூட செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்து கொள்ள முடியமால் போனது.
தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோச செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும்இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.

(இதுதான் கெளசிகா)
(இதுதான் கலைப்பிரியா)
ஒகஸ்ட் 14 ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கௌசிகாவின் கட்டிலை சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.
"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா"
"தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்"
"அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா"
சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"
"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்"
அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது. என்னை கட்டியணைம்மா..."
"எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ"
"அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா"
"கஜி...தேவாரம் பாடு"
"பாய்....பாய்....பா....ய்ய்...
இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்
(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)
(நன்றி: சருகு பிளாக்)
-----------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
வெள்ளி, 3 ஆகஸ்ட், 2007
‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு
பொ.ஐங்கரநேசன்
டெனிம், லெவி (Levi), லீ (Lee), கெஸ் (Guess) என்ற லேபல்களுடன் விற்பனையில் தூள்பறத்திக் கொண்டிருக்கும் ஜீன்ஸ் ஏதோ தங்களுக்காகவேதான் உருவாக்கப்பட்டது என இன்றைய இளசுகளை நினைக்க வைத்திருக்கிறது. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே 18 ஆம் நூற்றாண்டில் அடிமைத் தொழிலாளிகள், சுரங்கம் தோண்டுபவர்களின் கடுமையான பாவிப்புக்கென இந்த 'Tough and rough' ஜீன்ஸ் துணிகள் மேற்குலகின் சந்தைக்குள் நுழைந்து விட்டன.
1980இல் ஹாலிவுட் திரையுலகின் கவ்பாய் (cow boy)களின் கண்ணில் பட... கடைசியில் இந்த நீலத்துணிகளுக்கு வெள்ளித்திரை பச்சைக் கொடி காட்டி விட்டது. ஜேம்ஸ் டீனும் மர்லின் மன்றோவும் நிழலில் அணிந்து காட்டியதை அவர்களுடைய ரசிகர்கள் நிஜத்தில் அணிந்து அழகு பார்த்துப் பூத்தார்கள். ஹாலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலையே இன்று ஜீன்ஸýக்கு உலகம் பூராவும் விந்த ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
துணி உற்பத்தியில் இன்று உலகின் முன்னோடியாகத் திகழுவது சான்பிரான்ஸிஸ்கோவில் இயங்கும் Levistrauss நிறுவனம். இதன் வருடாந்த விற்பனை ஏழு மில்லியன் அமெக்க டாலர்களைத் தாண்டியிருக்கிறது. இதில் 71 வீதம் ஜீன்ஸ் விற்பனையால் மட்டுமே கிடைக்கிறது. அந்த அளவுக்கு ஜீன்ஸ் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.
அமெரிக்காவில் ஒவ்வொருவரும் சராசரியாக ஏழு ஜீன்ஸ் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியே டெனிம் துணியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. எனக்கு ஏன் சார்ம்ஸ் (charms) சிகரெட் பிடிச்சிருக்கு தெரியுமா? அதன் அட்டைப் பெட்டியில் அச்சாகியிருக்கும் எனது மனசுக்குப் பிடிச்சமான ஜீன்ஸ் துணிதான் காரணம் என்று ஒரு இந்திய இளைஞனைச் சொல்ல வைக்கும் அளவுக்குத் துணி உலகின் கொக்கோ கோலாவாக இன்றைய தலைமுறையை ஜீன்ஸ் உற்சாகம் ததும்ப வைத்திருக்கிறது. ஆனால் ஜீன்ஸ் உலகின் மறுபக்கத்தைப் பார்க்க நேர்ந்தால் இந்த உற்சாகம் கோலாப் பானத்தின் பொங்கியெழும் நுரைபோலக் கண நேரத்திலேயே அடங்கிவிடும் என்பதுதான் உண்மை.
மூன்றாம் உலக நாடொன்றின் பருத்தித் தோட்டம் ஒன்றிலிருந்து மேற்குலகின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் காட்சியறை வரைக்குமான ஜீன்ஸின் பயணப்பாதை துணியைப் போலவே கரடு முரடாக கரடு முரடாக (tough and rough) இருக்கிறது. இலகுவில் கீறிக் கிழிந்து போகாத ஜீன்ஸின் வரலாறு மனதைக் கீறிக் காயப்படுத்துகிறது.
ஜீன்ஸ் துணியைத் தமது நாடுகளில் தயாரிப்பது பல விதங்களிலும் தங்களுக்குப் பாதகமானது என்பதைத் தெரிந்து கொண்ட மேற்கத்தைய நாடுகள் அதைச் சாமர்த்தியமாக வறிய நாடுகளின் தலை மீது சுமத்தி விட்டிருக்கின்றன. ஏற்கனவே ஒரு வேளை உணவைக்கூடச் சரியாகப் பெறமுடியாமல் பசியுடன் இருக்கும் ஏழை நாடுகளின் விவசாய நிலங்கள் படிப்படியாகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறி போய்க் கொண்டிருக்கின்றன. நெல்லுக்கும் சோளத்துக்கும் பதிலாக ஜீன்ஸ் தயாரிப்புக்குத் தேவையான பருத்தியே இவர்களது விளைநிலங்களில் இன்று பெருமளவில் பயிடப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60,000 சிறு விவசாயிகள் கவர்ச்சிகரமான கடனுதவி போன்றவிளம்பரங்களால் பருத்திப் பயிர்ச் செய்கைக்குத் தாவியிருக்கிறார்கள். உலகெங்கிலுமுள்ள விவசாய நிலத்தின் ஐந்து வீத இடத்தை இன்று பருத்தியே அடைத்துக் கொண்டிருக்கிறது.
உணவுப் பயிர்களுக்குத் தேவையான நீர், பசளைகள், களைக்கொல்லிகளைப் பருத்திக்குப் பயன்படுத்துவதுடன் இதன் பாதுகாப்புக்கென மிகப் பெரிய அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விசிற வேண்டியிருக்கிறது. புதிது புதிதாக உருவாக்கப்படும் கலப்பினப் பருத்திச் செடிகள் நோய்களுக்கும் பீடைகளுக்கும் காட்டும் எதிர்ப்புத்தன்மை குறைவாகவே இருக்கிறது. உலகில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் நான்கில் ஒரு பாகம் (ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானம்) இந்தப் பருத்திச் செடிகளின் மீதே தெளிக்கப்படுகின்றன. இதனால் நிலம் நஞ்சாவதுடன் உலகம் பூராவும் மில்லியன் கணக்கான மக்கள் வருடந்தோறும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதில் சோகம் என்னவென்றால் பூச்சிகொல்லி நஞ்சுகளின் போத்தல்களில் இருக்கும் தற்காப்பு முறைகளைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஏழை விவசாயிகள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். நாலு சதவீதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்காவிலேயே வேறு எங்கும் இல்லாத இந்த மருந்துகளால் நிகழும் மரணங்களும் அதிகமாக இருக்கின்றன.
இயற்கையான உரங்களையும் பூச்சித்தடுப்பு முறைகளையும் பயன்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்ட போதும் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை. இந்தப் பசுமை முறைக்கு ஒரு டாலர் செலவழிக்கப்பட்டால் அதனை விடப் பல ஆயிரம் மடங்குகளில் (4000 டாலர்கள்) புதிது புதிதான இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்படுகிறது.
இவ்வளவு இழப்புகளையும் பயிர்செய் நிலங்களில் கொடுத்துவிட்டு வெளியே வரும் பருத்திப் பஞ்சு இங்கே மட்டும் வெள்ளை மனதுடன் இருந்து விடுகிறதா என்ன?
நூல்களாக மாற்றப்படும்போதும் நீலநிறச்சாயம் ஊட்டப்படும்போதும் மிகப் பெருமளவில் இரசாயனக் கழிவுகளைத் தன் பங்குக்கும் சூழலில் சேர்ப்பித்து வருகிறது. பருத்தி நூலை நீலமாக மாற்றப் பயன்படும் இன்டிகோ (Indigo) சாயத்தைத் தயாரிக்கும்போது வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான டன்கள் அளவில் நச்சுப் பொருள்கள் தண்ணீருடனும் மண்ணுடனும் கலந்து சுற்றுச் சூழலை சீரழித்து விடுகின்றன. போதாக்குறைக்கு பியூமைஸ் கல்லை (Pumice) (நிறைய துளைகளைக் கொண்ட கண்ணாடி மாதியான கல். Stone Wash ஜீன்ஸ் தயாப்பில் உரோஞ்சுவதற்கு பயன்படும்) தோண்டி எடுப்பதால் நியூ மெக்ஸிக்கோவின் ஒரு நிலப்பகுதி அப்படியே நாசமாக்கப்பட்டிருக்கிறது.
பணக்கார நாடுகளில் ஜீன்ஸ் விற்பனை அமோகமாக இருந்தாலும் இந்த நாடுகள் ஆடை தயாரிப்பு நிறுவனங்களைத் தமது மண்ணில் அமைக்க விரும்பாததற்கு சுற்றுச்சூழலின் சீர்கேடு மட்டும் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக்கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. பங்களாதேஷ், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. கனடாவில் இந்திய மதிப்பில் 1000 ரூபாய்களுக்கு விற்பனையாகும் ஜீன்ஸ் மேலாடை ஒன்றுக்கு அதைத் தைத்துக் கொடுத்த கூலியாக எல்ச வடோல் உள்ள ஒரு ஏழைப் பெண்ணுக்கு வழங்கப்படும் தொகை வெறுமனே 27 சதங்கள் (cents) தான்.
வறிய நாடுகளில் உள்ள ஆடை தயாரிப்பு நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன என்ற பலமான குற்றச்சாட்டு வேறு இருக்கிறது. நெசவாளர்கள் பெண்களாக இருப்பதால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதும் இங்கு சகஜமான ஒன்று. தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தொழிலாளிகள் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். எல்சல்வடோல் இயங்கும் தாய்லாந்துக்குச் சொந்தமான மன்டான் சர்வதேச ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கான ஒரு சங்கம் அமைக்க முயற்சித்தபோது நிர்வாகத்தால் 300க்கும் அதிகமானோர் சுட்டுத் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
மேற்கு நாடுகள் மட்டும் அல்லாமல், பண வருவாய்க்குரிய ஒரு தொழிலாக இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளும் ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை அமைக்கத் தொடங்கி விட்டன. இந்தியாவின் அரவிந்த் நிறுவனம் இப்போது 66 நாடுகளுக்கு 155 வகையான டெனிம் ஆடைகளை ஏற்றுமதி செய்து ஜீன்ஸ் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜீன்ஸ் துணியிலான ஒவ்வொரு ஆடையையும் பார்க்கும்போது நமது பாரம்பரிய பருத்தி ஆடைகளுக்குக் குட்பை சொல்லி விடுவோம் போலவே தெரிகிறது. நாளை இந்த ஜீன்ஸ் மோகம் மாறவும் கூடும். ஆனால் அது அழித்துவிட்டுப் போயிருக்கும் நிலத்தை, இந்த ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கையை யார் மீட்டுத் தருவார்கள்?
திங்கள், 16 ஜூலை, 2007
ஜூலை 21: சென்னையில் போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம்
இதற்கென வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை:
குஜராத்தில் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற அய்.பி.எஸ். அதிகாரிகளே முன்நின்று நடத்திய போலி மோதல் படுகொலைகள் அம்பலப்பட்டுப் போனதை ஒட்டி இன்று இந்தியா முழுவதிலும் காவல்துறையின் இந்தச் சட்ட விரோதக் கொடூரங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூன் 26, அன்று மும்பையில் 'மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின்' சார்பாக போலி மோதல்களை எதிர்த்து மாநாடொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
'மோதல்' என்ற பெயரில் காவல்துறையினர் படுகொலைகளை நிகழ்த்துவதில் முன்னிற்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பயங்கரவாதிகள், நக்சல்பாரிகள், தாதாக்கள் எனக் காரணம் சொல்லி வெளிப்படையாக குடிமக்களைக் கொன்று குவிக்கும் இந்தப் பண்பாடு 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் அதிகமாகியது. நெருக்கடி நிலையை ஒட்டி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏற்பட்ட ஆரோக்கியமான விவாதங்கள், ஏற்பட்டிருந்த ஜனநாயக விழிப்புணர்வு ஆகியவற்றால் சற்றே அடக்கம் காட்டிய காவல்துறை, காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் போராட்டங்களைக் காரணம் காட்டி மீண்டும் படுகொலைகளில் இறங்கியது. அரசியல் கட்சிகளின் பூரணமான ஆதரவுடன் இவை அரங்கேறின.
சட்டம் ஒழுங்கு, தேச ஒற்றுமை, உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லாடி இங்கே ஒரு போலிஸ் ஆட்சி, இராணுவ ஆட்சி உருவாக்கப்பட்டது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் குடிமக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்களாக அணுகப்பட்டனர். தடா', 'பொடா' முதலான ஆள்தூக்கி அடக்குமுறைச் சட்டங்கள், 'இஸட்' பாதுகாப்பு, கறுப்புப் பூனை என்பதெல்லாம் நிர்வாகத் திறனின் அடையாளமாகவும் பெருமைக்குரிய அரசியல் அந்தஸ்தாகவும் ஆக்கப்பட்டன.
போராட்டப் பகுதிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும் இழுத்துச் செல்லவும், காணாமற் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும் அதிகாரம் படைத்ததாக அரசும், காவல்துறையும் ஆயின. நெருக்கடி நிலையில் குடிமக்களுக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறியதையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட இயலாது.
1996ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத் துறை (CBI) உச்சநீதி மன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவதும் இது நடந்துள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் வெளிக் கொணர்ந்தன. காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டார்கள்.
கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துக்களையும் போலிசார் சூறையாடியிருந்தனர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி குடும்பத்தாரிடம் பெருந்தொகைகள் பறிக்கப்பட்டன. இன்று மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அப்சல் குரு முதல் மேலப்பாளையம் முசுலிம்கள் வரை 'என்கவுன்டர்', 'பொடா' மிரட்டல்களுக்குப் பயந்து கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்றழித்து காவல்துறைக்கு காணிக்கையாக்கியவர்கள் ஏராளம்.
மேற்குறிப்பிட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தட்டிக் கழித்தது. இந்திரா ஜெய்சிங், இராம் நாராயண்குமார் போன்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளிகள் சுமார் பத்தாண்டு காலம் போராடியும் குற்றம் செய்த காவல்துறையினர் இன்றுவரை தண்டிக்கப் படவில்லை.
ஆந்திரம், தமிழ்நாடு போன்ற இடங்களில் நக்சல்பாரிகள் எனப்படும் மார்க்சிய-லெனினிய-மாவோயிச இயக்கங்களைச் சேர்ந்தோரை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்' முறையை அறிமுகப்படுத்தின மாநில அரசுகள். எண்பதுகளில் தேவாரத்தின் தலைமையில் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நக்சல்பாரி இயக்க இளைஞர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர்.
இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகின்றனர். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனைத்திலும் அரசாங்கங்களே முன்னின்று சட்ட விரோதமான கொலைப் படைகளை நடத்துகின்றன. சட்டிஸ்கரில் இதற்குப் பெயர் 'சல்வா ஜூடும்', ஆந்திராவில் 'நில்லமல்லா நாகம்', 'நிர்ஸா நாகம்' எனப் பல பெயர்களில் படைகள்.
'பாதுகாப்பு தொடர்பான செலவு' என்கிற பெயரில் அரசாங்க நிதியிலிருந்து இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 'ஆந்திர மாதிரியைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும் நக்சலிசத்தை ஒழிப்போம்' எனப் பிரதமரே வெளிப்படையாகப் பேசுகிறார். சட்ட ஒழுங்கை நலைநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்ட விரோதக் கொலைகளைச் செய்வதை என்ன சொல்வது? இதில் மத்திய மாநில அரசுகள் எல்லாமே கூட்டுக் களவாணிகள் தான். காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. என்றெல்லாம் வேறுபாடு கிடையாது. குஜராத் அதிகாரி வன்சாரா மேற்கொண்ட ஷெராபுதீன் படுகொலையில் குஜராத், இராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய -மூன்று மாநிலங்கள் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொண்ணூறுகளில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் குண்டர்கள், தாதாக்கள் மற்றும் கிரிமினல்களை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்கள்' பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. மும்பை நகரம் இதில் முதலிடம் வகித்தது. இந்தியாவில் 'என்கவுன்டர்கள்' தலைநகரம் என அழைக்கப்பட்டது. அய்ம்பது, நூறு என மோதல் படுகொலை செய்த அதிகாரிகள் போற்றப்பட்டனர். இவர்களைப் பற்றி புத்தகங்கள், சினிமாக்களெல்லாம் வந்தன. பிரதிப் வர்மா என்கிற போலிஸ் அதிகாரிக்கு 'அப்தக் 100' என்று செல்லப்பெயர். அதாவது நூறு என்கவுன்டர் செய்தவன். 'அப்தக் 56' என்கிற இந்தித் திரைப்படம் இவனது வாழ்க்கை வரலாறு. அதில் நாயகனாக நடிக்க நானா படேகருக்கு பிரதிப் வர்மா எப்படி என்கவுன்டர் செய்வது என பயிற்சி கொடுத்தான். பிரதீப்பின் சிஷ்யன் தயாநாயக். இவன் 83 என்கவுண்டர் செய்தவன். பிரதிப்பின் இன்றைய 'ஸ்கோர் 105'.
மேற்குறித்த இருவரும் இன்று தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். இரண்டு குழுக்கள் இருந்தால் ஒரு குழுவினரிடம் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு குழுவைச் சேர்ந்தவரை 'என்கவுன்டர்' செய்ததாக வழக்கு. எட்டாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் தயா நாயக்கின் இன்றைய சொத்து 100 கோடி ரூபாய்.
அவுட்லுக் (மே.14, 2007) இதழ் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டு'களின் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த நிவநீத் சிகோரா (50), பிரிஜ்லால் (100), ராஜேஸ்வர் சிங் (23), டெல்லியைச் சேர்ந்த ரஜ்பீர் சிங் (100), ஜம்மு காஷ்மீரின் ஹன்ஸ் ராஜ் பரிஹார் (50), ஆந்திராவின் முரளி (25) ஆகியோர் இதில் அடக்கம்.
நம்மூ-ர் தேவாரம், விஜயகுமார், வெள்ளத்துரை ஆகியோர் ஏனோ இதில் விடுபட்டுள்ளனர். இன்று நக்சலைட்டுகளைப் பிடிப்பதற்கான சிறப்புப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமாரின் அதிகாரத்தில் சுமார் 12 மோதல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்தன வீரப்பன் குழுவினர் கொல்லப்பட்டதும் இதில் அடக்கம்.
வீரப்பனைப் பிடிப்பதெனச் சொல்லி நூற்றுக்கணக்கான பழங்குடியினர் சித்திரவதை செய்யப்பட்டதையும், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம். இதை சதாசிவம் ஆணையம் வெளிபடுத்தியுள்ளது.
இந்த ''வீரதீரச்'' செயல்களைப் பாராட்டி ஜெயலலிதா அரசு கோடிக்கணக்கான ரூபாய்களையும், வீட்டு மனைகளையும் பரிசளித்த கதை வெட்கக் கேடானது. தேவாரத்திற்குக் கொடுக்கப்பட்ட வீட்டுமனை மட்டும் ஒரு கோடி ரூபாய் பெறும் என ஒரு இதழ் குறிப்பிட்டிருந்தது. இவர்கள் செய்யும் மோதலை விட வேதனையானது இந்தக் 'கலைஞர்கள்' வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்படுவது.
பிடித்துக் கொண்டு போய் வைத்து சித்திரவதை செய்துவிட்டுப் பின்பு கொலை செய்து மோதல் நடந்ததாக அறிவிப்பது, காவலில் உள்ளவர்களைக் கொல்வது தவிர சிறையில் இருப்பவர்களையே சொல்லி வைத்து 'என்கவுன்டர்' செய்யும் கலையில் முன் நிற்பது தமிழகம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராமன், சரவணன் என்கிற இரு தமிழ்த் தேசிய கொள்கை கொண்ட இளைஞர்களைக் காவல் நீடிப்பதற்கென சென்னை மத்திய சிறையிலிருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, திரும்பிச் செல்லும்போது கொன்றது நினைவிற்குரியது. காவல் நீடிப்பிற்கு வழக்கமாகக் காலையில் தான் கொண்டு வருவார்கள். ஆனால், அன்று மாலையில் கொண்டு வந்தார்கள். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த அன்றைய மத்திய சிறைக்கு அண்ணாசாலை வழியாகக் கொண்டு செல்வதே வழக்கம். ஆனால், அன்று கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வந்து, 'டிராபிக்கை' எல்லாம் நிறுத்திவிட்டு சுட்டுக் கொன்றனர். அரசியல்வாதிகள், போலீஸ், சிவில் நிர்வாகம் எல்லாம் இதில் ஒன்றாக இணைவது கவனிக்கத்தக்கது.
தி.மு.க. அரசும் இதில் சளைத்ததில்லை. இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் சரமாரியாக -மூன்று, நான்கு 'என்கவுன்டர்களை' கலைஞர் அரசு செய்தது. பத்திரிகைகளால் சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா? ஜெயலலிதா ஆட்சியைக் காட்டிலும் கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டதாக ஓர் உணர்வு ஏற்படக்கூடாதாம். அதற்காக அந்த நால்வர் பலியிடப்பட்டனர்.
சென்ற ஆண்டு போலி மோதலில் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் கதை ரொம்பப் பரிதாபமானது. முன்பெல்லாம் 'என்கவுன்டர்' முடிந்த பின்புதான், இன்னார் கொல்லப்பட்டார் என படத்துடன் பத்திரிகைகளில் செய்தி வரும். இப்போதோ அடுத்தடுத்த என்கவுன்டர்கள் யாரை நோக்கி இருக்கும் என முன் கூட்டியே படத்துடன் செய்திகள் வருகின்றன. சங்கரை சிறையிலுள்ள போதே 'என்கவுன்டர்' செய்யப்போவதாக போலீஸ் மிரட்டியது. பஞ்சாயத்துத் தலைவரான சங்கரின் அம்மா எல்லோரிடமும் புலம்பினார். மனித உரிமை அமைப்புகள் இச்செய்தியை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றன. நீதிமன்றம் வினவியபோது அப்படியெல்லாம் செய்யப் போவதில்லை என்று சொன்னது அரசு. அடுத்த சில வாரங்களில் சங்கர் கொல்லப்பட்டார். யாரும் கண்டு கொள்ளவில்லை.
எதற்கெல்லாம் எப்படியெல்லாம் மோதல் படுகொலைகள் செய்யப்படுகின்றன என்பதைப் பாருங்கள். பணத்திற்காகக் கொல்வதைப் பார்த்தோம். ஷெராபுதீனைக் கடத்திச் சென்று கொன்று, மனைவி கவுசர் பீவியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றெரிந்து, எஞ்சிய உடற்பாகங்களைக் கிணற்றில் போட்டு, ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியையும் கொன்ற வன்சாரா கும்பலும் கூட தொழில் போட்டியாளரான ஒரு சலவைக் கல் வியாபாரியாம். பணம் வாங்கிக் கொண்டேகூட இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அரசியல்வாதிகள் தம்மையும் தம் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளவும் என்கவுன்டர்கள் பயன்படுகின்றன. குஜராத் கொடுங்கோலன் மோடி தன் உயிர் எப்போதும் ஆபத்தில் உள்ளது என்கிற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக இதுவரை 21 என்கவுன்டர்களை தனது ஆட்சியில் அரங்கேற்றியுள்ளார்.
19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜெஹான் உட்பட லஷ்கர் ஐ தொய்பா, ஜெய்ஷ்இ முஹம்மது, அய்.எஸ்.அய், நக்சலைட் எனக் காரணம் சொன்னால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இஷ்ரத் ஜெஹான் என்ற அந்த மாணவி லஷ்கர் ஐ தொய்பாவின் ஏஜண்ட் என்பதற்கு ஒரே ஆதாரம் அவரது பெயரும் மதமும்தான்.
இப்படி முத்திரை குத்தப்பட்டுக் கொல்லப்படும்போது அவர்களது உடல்கள் மட்டுமின்றி அவற்றோடு பல ஆதாரங்களும் தடயங்களும் அழிக்கப்படுகின்றன. வீரப்பன் கொலையோடு அவருடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், இராஜ்குமார் கடத்தலின்போது கைமாறியதாகச் சொல்லப்பட்ட பணம், தெல்கி, ரஜினி வரை தொடர்புபடுத்திப் பேசப்பட்ட செய்திகள் எல்லாம் அழிக்கப்படவில்லையா?
கையில் எந்த ஆயுதமில்லாது அந்த 19 வயதுப் பெண்ணைச் சுட்டுக் கொல்வதைக் காட்டிலும் கைது செய்து விசாரிப்பதல்லவா பயங்கரவாதத்தை ஒழிக்கப் பயன்படும்?
என்கவுன்டரில் கொல்லப்பட்ட உடல்களை உறவினர்கள் குளிப்பாட்டி புதைக்கக்கூட அனுமதிக்காமல் அவசர அவசரமாகக் காவல்துறையே எரிப்பது ஏன்? 'மோதல்' என்பது எதிர்பாராத நிலையில் எதிரிகளுடன் ஏற்படக்கூடிய எதிர்கொள்ளல். இதில் எதிரி கொல்லப்படத்தான் வேண்டுமென்பதில்லை. எல்லா மோதல்களிலும் எதிரிகள் தப்பிச் செல்வதும் எப்படி?
இப்படி எத்தனையோ 'ஏன்'களையும் 'எப்படி'களையும் உள்ளடக்கியவைதான் என்கவுன்டர் கொலைகள்.
வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் அரசு கண்டு கொள்ளக்கூடாது என நாம் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கை நலைநாட்டும் கடமை அரசுக்கு உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த நிலைநாட்டலில் உள்ள காவல்துறையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இத்தகைய நடவடிக்கைகளில் சுய பாதுகாப்பிற்காக கொலையும் செய்ய இ.பி.கோ. 96, 97, 100 பிரிவுகளில் ஏற்பு இருந்த போதும் வன்முறையையும் உயிர்க் கொலையையும் தவிர்ப்பதே குற்ற நடவடிக்கைச் சட்டம் சாராம்சமாக வலியுறுத்தும் செய்தி. குறிப்பாக 46(III) பிரிவு இதை அழுத்தம் கொடுத்து வலியுறுத்துகிறது. சுயபாதுகாப்புக்காகச் சுட்டதாக போலீசே உரிமை கொண்டாடி அத்தோடு பிரச்சினையை ஊற்றி -மூடிவிட இயலாது.
'என்கவுன்டர்களை' ஒரு குற்றமாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வது அவசியம். அவ்வாறு பதிவு செய்யாமையும், விசாரணை மேற்கொள்ளாமையும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
அரசியல் சட்டத்தின் 21ஆம் பிரிவின்படி உயிர் வாழ்தல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. 14ஆம் பிரிவின்படி அனைவரும் சட்டத்தின் முன் சமம். போலீஸ் செய்தாலும் மற்றவர்கள் செய்தாலும் கொலை கொலையே.
1994 மார்ச் 30 அன்று ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் (APCLC) 1991-93 கால கட்டத்தில் ஆந்திரத்தில் நடைபெற்ற 496 போலி மோதல் கொலைகளைப் பட்டியலிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (NHRC) புகார் மனு ஒன்றை அளித்தது. அது தொடர்பான விசாரணையின் போது 'என்கவுன்டர்' தொடர்பாக ஆணையம் வைத்த பரிந்துரைகளாவன:
(1) கொலை செய்யப்பட்டவரை, என்கவுன்டர் நடந்தபின், குற்றம் சுமத்தப்பட்டவராக அறிவித்து, குற்ற நடைமுறைச் சட்டம் 307ம் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, பின் குற்றவாளி இறந்து போனதால் வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவிப்பது சட்ட விரோதமானது.
(2) மோதல் கொலைகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பொறுப்பிலுள்ள அதிகாரியால் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 154, 170, 173 மற்றும் 190 ஆகியவற்றின் கீழ் முறையான விசாரணை செய்யப்படுவது அவசியம்.
(3) இந்திய சான்றுச் சட்டம் 105இன் (EVIDENCE ACT) பிரிவின்படி சுயபாதுகாப்பிற்காகக் கொல்லும் உரிமையைப் பயன்படுத்தியதை நீதிமன்றத்தில் நிறுவ வேண்டும்.
(4) ஒவ்வொரு கொலையும், அது தற்காப்பிற்காகச் செய்யப்பட்டிருந்த போதும்கூட, கைது செய்யப்பட வேண்டிய குற்றமே. எனவே, புலன் விசாரணை செய்வது அவசியம். மாநில உளவுத்துறை அல்லது வேறு ஏதேனும் சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பு ஒன்றின் -மூலம் ஒவ்வொரு என்கவுன்டர் கொலையும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.
இது தவிர தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.என்.வெங்கடாசலையா முதலமைச்சருக்கு எழுதிய மார்ச் 29, 1997 நாளிட்ட கடிதத்திலும் மேற்குறித்தவை வற்புறுத்தப்பட்டன.
புலன் விசாரணை செய்யும் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்களே என்கவுன்டர் செய்தவர்களாக இருக்கும்பட்சத்தில் வேறு சுதந்திரமான புலன் விசாரணை நிறுவனம் விசாரிக்க வேண்டும் எனவும், இத்தகைய விசாரணையின் அடிப்படையில் காவல் துறையினர் மீது வழக்குத் தொடரப்பட்டால் மோதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் கூட வெங்கடாசலையா குறிப்பிட்டிருந்தார்.
டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க அரசு, அசோக் ஜோரி எதிர் உ.பி. அரசு ஆகிய ரிட் வழக்குகளில் நீதியரசர்கள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோரும், பி.யூ.சி.எல். எதிர் இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன்ரெட்டி மற்றும் சுஹால் சென் ஆகியோரும் வழங்கிய தீர்ப்பையும் விசாரணை மேற்கொள்ள வழங்கப்பட்ட ஆணையையும் சுருக்கம் கருதித் தவிர்க்கிறோம்.
மோதலில் கொல்லும் காவல்துறையினரை வீரதீரச் சாகசக்காரர்களாகக் காட்டுவது, அவர்கள் சொல்லும் பொய், புனை சுருக்கங்கள் அனைத்தையும் அப்படியே வெளியிடுவது ஆகியவற்றின் -மூலம் என்கவுன்டருக்கு ஆதரவான ஒரு மனநிலையை ஊடகங்கள் உருவாக்குவதும் கண்டனத்திற்குரியது.
''விஜயகுமாருக்கும் விஜயகாந்துக்கும் என்ன வித்தியாசம்? முன்னவர் 'என்கவுன்டர்' செய்தார். பின்னவர் 'சின்னக்கவுண்டர்' செய்தார்'' என்பது போன்ற 'ஜோக்'குகளை வெளியிட்டு மத்திய தர வர்க்கத்தினரைப் புல்லரிக்கச் செய்வது என்பதெல்லாம் மனித உரிமை நோக்கில் மிகவும் கவலைக்குரியது.
என்கவுன்டர் கொலைகள் விசாரணையின்றி அனுமதிக்கப்படுவதன் -மூலம் என்றென்றும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிரதேமாக நம்முடையது மாற்றப்படுகிறது. சட்டப்பூர்வமற்ற ஒரு நிலையைச் சட்டப்பூர்வமாக்குவதாக பரிசறிவித்தல்கள், புகழ் பாடல்கள் முதலியன அமைகின்றன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை எந்த மக்கள், 'குடிமக்கள்' என்கிற நிலையிலிருந்து 'குடிமக்கள் அல்லாதவர்கள்' என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
என்கவுன்டர் கொலைகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கே அழைத்து வராமல் காவல் நீடிக்கும் 'வீடியோ கான்பரன்சிங்', பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள 'உண்மை அறியும் சோதனைகள்' ஆகியவற்றின் -மூலம் காவல்துறையில் உரிமைகள் அபரிதமாக்கப்படுதல் ஜனநாயகத்திற்கும் கேடு.
குடி உரிமையிலும், மனித கண்ணியங்களிலும் அக்கறையுள்ளோர் ஒன்றிணைவோம்!
போலி மோதல்களை எதிர்ப்போம்!
போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம்
தொடர்புக்கு:
வழக்குரைஞர் பொ.இரத்தினம் 94434 58118,
பேராசிரியர் அ.மார்க்ஸ் 94441 20582,
வழக்குரைஞர் பாவேந்தன் 94433 06110,
கோபால் 98413 24699,
புதுவை கோ.சுகுமாரன் 98940 54640
வெள்ளி, 13 ஜூலை, 2007
உதவி வேண்டும் :: மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார்.
பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது.
மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.
அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.
-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.
-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.
-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.
- றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.
- றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Chacking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
- கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.
- இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் (அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.
மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.
அன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள். தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப் பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை.
அதாவது வேலைக்குப் போகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப் போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப் போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை. இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.
இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது' வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப் பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது.
சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது.
இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப் பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது.
நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.
றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் (33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)
படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம்.
வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப்பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.
இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும்.
இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும்.
றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.
றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும்.
இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.
ஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக் குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒரு மாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள்.
அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.
குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.
இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச்செய்வோம்.
காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி - இமெயில் மூலமாகவோ பேக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.
தயவு செய்து, உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.
Father of the dead child,(re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi
c/o, Sri Lankan Embassy,
Po Box,94360
Riyadh-11693
Soudi Arabia
Fax.00 9661 460 8846, e mail--. lankaemb@sabakah.net.sa
என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும்.
ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.
நன்றி: கீற்று
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
