திங்கள், 16 ஜூலை, 2007

ஜூலை 21: சென்னையில் போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம்


படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம்

 

போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் வரும் 21-07-2007 வெள்ளியன்று, சென்னையில், போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இதற்கென வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை:

குஜராத்தில் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற அய்.பி.எஸ். அதிகாரிகளே முன்நின்று நடத்திய போலி மோதல் படுகொலைகள் அம்பலப்பட்டுப் போனதை ஒட்டி இன்று இந்தியா முழுவதிலும் காவல்துறையின் இந்தச் சட்ட விரோதக் கொடூரங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூன் 26, அன்று மும்பையில் 'மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின்' சார்பாக போலி மோதல்களை எதிர்த்து மாநாடொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

'மோதல்' என்ற பெயரில் காவல்துறையினர் படுகொலைகளை நிகழ்த்துவதில் முன்னிற்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பயங்கரவாதிகள், நக்சல்பாரிகள், தாதாக்கள் எனக் காரணம் சொல்லி வெளிப்படையாக குடிமக்களைக் கொன்று குவிக்கும் இந்தப் பண்பாடு 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் அதிகமாகியது. நெருக்கடி நிலையை ஒட்டி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏற்பட்ட ஆரோக்கியமான விவாதங்கள், ஏற்பட்டிருந்த ஜனநாயக விழிப்புணர்வு ஆகியவற்றால் சற்றே அடக்கம் காட்டிய காவல்துறை, காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் போராட்டங்களைக் காரணம் காட்டி மீண்டும் படுகொலைகளில் இறங்கியது. அரசியல் கட்சிகளின் பூரணமான ஆதரவுடன் இவை அரங்கேறின.

சட்டம் ஒழுங்கு, தேச ஒற்றுமை, உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லாடி இங்கே ஒரு போலிஸ் ஆட்சி, இராணுவ ஆட்சி உருவாக்கப்பட்டது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் குடிமக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்களாக அணுகப்பட்டனர். தடா', 'பொடா' முதலான ஆள்தூக்கி அடக்குமுறைச் சட்டங்கள், 'இஸட்' பாதுகாப்பு, கறுப்புப் பூனை என்பதெல்லாம் நிர்வாகத் திறனின் அடையாளமாகவும் பெருமைக்குரிய அரசியல் அந்தஸ்தாகவும் ஆக்கப்பட்டன.

போராட்டப் பகுதிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும் இழுத்துச் செல்லவும், காணாமற் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும் அதிகாரம் படைத்ததாக அரசும், காவல்துறையும் ஆயின. நெருக்கடி நிலையில் குடிமக்களுக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறியதையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட இயலாது.

1996ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத் துறை (CBI) உச்சநீதி மன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவதும் இது நடந்துள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் வெளிக் கொணர்ந்தன. காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டார்கள்.

கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துக்களையும் போலிசார் சூறையாடியிருந்தனர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி குடும்பத்தாரிடம் பெருந்தொகைகள் பறிக்கப்பட்டன. இன்று மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அப்சல் குரு முதல் மேலப்பாளையம் முசுலிம்கள் வரை 'என்கவுன்டர்', 'பொடா' மிரட்டல்களுக்குப் பயந்து கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்றழித்து காவல்துறைக்கு காணிக்கையாக்கியவர்கள் ஏராளம்.

மேற்குறிப்பிட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தட்டிக் கழித்தது. இந்திரா ஜெய்சிங், இராம் நாராயண்குமார் போன்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளிகள் சுமார் பத்தாண்டு காலம் போராடியும் குற்றம் செய்த காவல்துறையினர் இன்றுவரை தண்டிக்கப் படவில்லை.

ஆந்திரம், தமிழ்நாடு போன்ற இடங்களில் நக்சல்பாரிகள் எனப்படும் மார்க்சிய-லெனினிய-மாவோயிச இயக்கங்களைச் சேர்ந்தோரை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்' முறையை அறிமுகப்படுத்தின மாநில அரசுகள். எண்பதுகளில் தேவாரத்தின் தலைமையில் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நக்சல்பாரி இயக்க இளைஞர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகின்றனர். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனைத்திலும் அரசாங்கங்களே முன்னின்று சட்ட விரோதமான கொலைப் படைகளை நடத்துகின்றன. சட்டிஸ்கரில் இதற்குப் பெயர் 'சல்வா ஜூடும்', ஆந்திராவில் 'நில்லமல்லா நாகம்', 'நிர்ஸா நாகம்' எனப் பல பெயர்களில் படைகள்.

'பாதுகாப்பு தொடர்பான செலவு' என்கிற பெயரில் அரசாங்க நிதியிலிருந்து இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 'ஆந்திர மாதிரியைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும் நக்சலிசத்தை ஒழிப்போம்' எனப் பிரதமரே வெளிப்படையாகப் பேசுகிறார். சட்ட ஒழுங்கை நலைநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்ட விரோதக் கொலைகளைச் செய்வதை என்ன சொல்வது? இதில் மத்திய மாநில அரசுகள் எல்லாமே கூட்டுக் களவாணிகள் தான். காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. என்றெல்லாம் வேறுபாடு கிடையாது. குஜராத் அதிகாரி வன்சாரா மேற்கொண்ட ஷெராபுதீன் படுகொலையில் குஜராத், இராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய -மூன்று மாநிலங்கள் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் குண்டர்கள், தாதாக்கள் மற்றும் கிரிமினல்களை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்கள்' பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. மும்பை நகரம் இதில் முதலிடம் வகித்தது. இந்தியாவில் 'என்கவுன்டர்கள்' தலைநகரம் என அழைக்கப்பட்டது. அய்ம்பது, நூறு என மோதல் படுகொலை செய்த அதிகாரிகள் போற்றப்பட்டனர். இவர்களைப் பற்றி புத்தகங்கள், சினிமாக்களெல்லாம் வந்தன. பிரதிப் வர்மா என்கிற போலிஸ் அதிகாரிக்கு 'அப்தக் 100' என்று செல்லப்பெயர். அதாவது நூறு என்கவுன்டர் செய்தவன். 'அப்தக் 56' என்கிற இந்தித் திரைப்படம் இவனது வாழ்க்கை வரலாறு. அதில் நாயகனாக நடிக்க நானா படேகருக்கு பிரதிப் வர்மா எப்படி என்கவுன்டர் செய்வது என பயிற்சி கொடுத்தான். பிரதீப்பின் சிஷ்யன் தயாநாயக். இவன் 83 என்கவுண்டர் செய்தவன். பிரதிப்பின் இன்றைய 'ஸ்கோர் 105'.

மேற்குறித்த இருவரும் இன்று தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். இரண்டு குழுக்கள் இருந்தால் ஒரு குழுவினரிடம் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு குழுவைச் சேர்ந்தவரை 'என்கவுன்டர்' செய்ததாக வழக்கு. எட்டாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் தயா நாயக்கின் இன்றைய சொத்து 100 கோடி ரூபாய்.

அவுட்லுக் (மே.14, 2007) இதழ் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டு'களின் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த நிவநீத் சிகோரா (50), பிரிஜ்லால் (100), ராஜேஸ்வர் சிங் (23), டெல்லியைச் சேர்ந்த ரஜ்பீர் சிங் (100), ஜம்மு காஷ்மீரின் ஹன்ஸ் ராஜ் பரிஹார் (50), ஆந்திராவின் முரளி (25) ஆகியோர் இதில் அடக்கம்.

நம்மூ-ர் தேவாரம், விஜயகுமார், வெள்ளத்துரை ஆகியோர் ஏனோ இதில் விடுபட்டுள்ளனர். இன்று நக்சலைட்டுகளைப் பிடிப்பதற்கான சிறப்புப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமாரின் அதிகாரத்தில் சுமார் 12 மோதல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்தன வீரப்பன் குழுவினர் கொல்லப்பட்டதும் இதில் அடக்கம்.

வீரப்பனைப் பிடிப்பதெனச் சொல்லி நூற்றுக்கணக்கான பழங்குடியினர் சித்திரவதை செய்யப்பட்டதையும், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம். இதை சதாசிவம் ஆணையம் வெளிபடுத்தியுள்ளது.

இந்த ''வீரதீரச்'' செயல்களைப் பாராட்டி ஜெயலலிதா அரசு கோடிக்கணக்கான ரூபாய்களையும், வீட்டு மனைகளையும் பரிசளித்த கதை வெட்கக் கேடானது. தேவாரத்திற்குக் கொடுக்கப்பட்ட வீட்டுமனை மட்டும் ஒரு கோடி ரூபாய் பெறும் என ஒரு இதழ் குறிப்பிட்டிருந்தது. இவர்கள் செய்யும் மோதலை விட வேதனையானது இந்தக் 'கலைஞர்கள்' வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்படுவது.

பிடித்துக் கொண்டு போய் வைத்து சித்திரவதை செய்துவிட்டுப் பின்பு கொலை செய்து மோதல் நடந்ததாக அறிவிப்பது, காவலில் உள்ளவர்களைக் கொல்வது தவிர சிறையில் இருப்பவர்களையே சொல்லி வைத்து 'என்கவுன்டர்' செய்யும் கலையில் முன் நிற்பது தமிழகம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராமன், சரவணன் என்கிற இரு தமிழ்த் தேசிய கொள்கை கொண்ட இளைஞர்களைக் காவல் நீடிப்பதற்கென சென்னை மத்திய சிறையிலிருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, திரும்பிச் செல்லும்போது கொன்றது நினைவிற்குரியது. காவல் நீடிப்பிற்கு வழக்கமாகக் காலையில் தான் கொண்டு வருவார்கள். ஆனால், அன்று மாலையில் கொண்டு வந்தார்கள். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த அன்றைய மத்திய சிறைக்கு அண்ணாசாலை வழியாகக் கொண்டு செல்வதே வழக்கம். ஆனால், அன்று கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வந்து, 'டிராபிக்கை' எல்லாம் நிறுத்திவிட்டு சுட்டுக் கொன்றனர். அரசியல்வாதிகள், போலீஸ், சிவில் நிர்வாகம் எல்லாம் இதில் ஒன்றாக இணைவது கவனிக்கத்தக்கது.

தி.மு.க. அரசும் இதில் சளைத்ததில்லை. இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் சரமாரியாக -மூன்று, நான்கு 'என்கவுன்டர்களை' கலைஞர் அரசு செய்தது. பத்திரிகைகளால் சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா? ஜெயலலிதா ஆட்சியைக் காட்டிலும் கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டதாக ஓர் உணர்வு ஏற்படக்கூடாதாம். அதற்காக அந்த நால்வர் பலியிடப்பட்டனர்.

சென்ற ஆண்டு போலி மோதலில் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் கதை ரொம்பப் பரிதாபமானது. முன்பெல்லாம் 'என்கவுன்டர்' முடிந்த பின்புதான், இன்னார் கொல்லப்பட்டார் என படத்துடன் பத்திரிகைகளில் செய்தி வரும். இப்போதோ அடுத்தடுத்த என்கவுன்டர்கள் யாரை நோக்கி இருக்கும் என முன் கூட்டியே படத்துடன் செய்திகள் வருகின்றன. சங்கரை சிறையிலுள்ள போதே 'என்கவுன்டர்' செய்யப்போவதாக போலீஸ் மிரட்டியது. பஞ்சாயத்துத் தலைவரான சங்கரின் அம்மா எல்லோரிடமும் புலம்பினார். மனித உரிமை அமைப்புகள் இச்செய்தியை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றன. நீதிமன்றம் வினவியபோது அப்படியெல்லாம் செய்யப் போவதில்லை என்று சொன்னது அரசு. அடுத்த சில வாரங்களில் சங்கர் கொல்லப்பட்டார். யாரும் கண்டு கொள்ளவில்லை.

எதற்கெல்லாம் எப்படியெல்லாம் மோதல் படுகொலைகள் செய்யப்படுகின்றன என்பதைப் பாருங்கள். பணத்திற்காகக் கொல்வதைப் பார்த்தோம். ஷெராபுதீனைக் கடத்திச் சென்று கொன்று, மனைவி கவுசர் பீவியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றெரிந்து, எஞ்சிய உடற்பாகங்களைக் கிணற்றில் போட்டு, ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியையும் கொன்ற வன்சாரா கும்பலும் கூட தொழில் போட்டியாளரான ஒரு சலவைக் கல் வியாபாரியாம். பணம் வாங்கிக் கொண்டேகூட இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அரசியல்வாதிகள் தம்மையும் தம் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளவும் என்கவுன்டர்கள் பயன்படுகின்றன. குஜராத் கொடுங்கோலன் மோடி தன் உயிர் எப்போதும் ஆபத்தில் உள்ளது என்கிற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக இதுவரை 21 என்கவுன்டர்களை தனது ஆட்சியில் அரங்கேற்றியுள்ளார்.

19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜெஹான் உட்பட லஷ்கர் ஐ தொய்பா, ஜெய்ஷ்இ முஹம்மது, அய்.எஸ்.அய், நக்சலைட் எனக் காரணம் சொன்னால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இஷ்ரத் ஜெஹான் என்ற அந்த மாணவி லஷ்கர் ஐ தொய்பாவின் ஏஜண்ட் என்பதற்கு ஒரே ஆதாரம் அவரது பெயரும் மதமும்தான்.

இப்படி முத்திரை குத்தப்பட்டுக் கொல்லப்படும்போது அவர்களது உடல்கள் மட்டுமின்றி அவற்றோடு பல ஆதாரங்களும் தடயங்களும் அழிக்கப்படுகின்றன. வீரப்பன் கொலையோடு அவருடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், இராஜ்குமார் கடத்தலின்போது கைமாறியதாகச் சொல்லப்பட்ட பணம், தெல்கி, ரஜினி வரை தொடர்புபடுத்திப் பேசப்பட்ட செய்திகள் எல்லாம் அழிக்கப்படவில்லையா?

கையில் எந்த ஆயுதமில்லாது அந்த 19 வயதுப் பெண்ணைச் சுட்டுக் கொல்வதைக் காட்டிலும் கைது செய்து விசாரிப்பதல்லவா பயங்கரவாதத்தை ஒழிக்கப் பயன்படும்?

என்கவுன்டரில் கொல்லப்பட்ட உடல்களை உறவினர்கள் குளிப்பாட்டி புதைக்கக்கூட அனுமதிக்காமல் அவசர அவசரமாகக் காவல்துறையே எரிப்பது ஏன்? 'மோதல்' என்பது எதிர்பாராத நிலையில் எதிரிகளுடன் ஏற்படக்கூடிய எதிர்கொள்ளல். இதில் எதிரி கொல்லப்படத்தான் வேண்டுமென்பதில்லை. எல்லா மோதல்களிலும் எதிரிகள் தப்பிச் செல்வதும் எப்படி?

இப்படி எத்தனையோ 'ஏன்'களையும் 'எப்படி'களையும் உள்ளடக்கியவைதான் என்கவுன்டர் கொலைகள்.

வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் அரசு கண்டு கொள்ளக்கூடாது என நாம் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கை நலைநாட்டும் கடமை அரசுக்கு உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த நிலைநாட்டலில் உள்ள காவல்துறையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இத்தகைய நடவடிக்கைகளில் சுய பாதுகாப்பிற்காக கொலையும் செய்ய இ.பி.கோ. 96, 97, 100 பிரிவுகளில் ஏற்பு இருந்த போதும் வன்முறையையும் உயிர்க் கொலையையும் தவிர்ப்பதே குற்ற நடவடிக்கைச் சட்டம் சாராம்சமாக வலியுறுத்தும் செய்தி. குறிப்பாக 46(III) பிரிவு இதை அழுத்தம் கொடுத்து வலியுறுத்துகிறது. சுயபாதுகாப்புக்காகச் சுட்டதாக போலீசே உரிமை கொண்டாடி அத்தோடு பிரச்சினையை ஊற்றி -மூடிவிட இயலாது.

'என்கவுன்டர்களை' ஒரு குற்றமாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வது அவசியம். அவ்வாறு பதிவு செய்யாமையும், விசாரணை மேற்கொள்ளாமையும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

அரசியல் சட்டத்தின் 21ஆம் பிரிவின்படி உயிர் வாழ்தல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. 14ஆம் பிரிவின்படி அனைவரும் சட்டத்தின் முன் சமம். போலீஸ் செய்தாலும் மற்றவர்கள் செய்தாலும் கொலை கொலையே.

1994 மார்ச் 30 அன்று ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் (APCLC) 1991-93 கால கட்டத்தில் ஆந்திரத்தில் நடைபெற்ற 496 போலி மோதல் கொலைகளைப் பட்டியலிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (NHRC) புகார் மனு ஒன்றை அளித்தது. அது தொடர்பான விசாரணையின் போது 'என்கவுன்டர்' தொடர்பாக ஆணையம் வைத்த பரிந்துரைகளாவன:

(1) கொலை செய்யப்பட்டவரை, என்கவுன்டர் நடந்தபின், குற்றம் சுமத்தப்பட்டவராக அறிவித்து, குற்ற நடைமுறைச் சட்டம் 307ம் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, பின் குற்றவாளி இறந்து போனதால் வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவிப்பது சட்ட விரோதமானது.

(2) மோதல் கொலைகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பொறுப்பிலுள்ள அதிகாரியால் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 154, 170, 173 மற்றும் 190 ஆகியவற்றின் கீழ் முறையான விசாரணை செய்யப்படுவது அவசியம்.

(3) இந்திய சான்றுச் சட்டம் 105இன் (EVIDENCE ACT) பிரிவின்படி சுயபாதுகாப்பிற்காகக் கொல்லும் உரிமையைப் பயன்படுத்தியதை நீதிமன்றத்தில் நிறுவ வேண்டும்.

(4) ஒவ்வொரு கொலையும், அது தற்காப்பிற்காகச் செய்யப்பட்டிருந்த போதும்கூட, கைது செய்யப்பட வேண்டிய குற்றமே. எனவே, புலன் விசாரணை செய்வது அவசியம். மாநில உளவுத்துறை அல்லது வேறு ஏதேனும் சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பு ஒன்றின் -மூலம் ஒவ்வொரு என்கவுன்டர் கொலையும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

இது தவிர தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.என்.வெங்கடாசலையா முதலமைச்சருக்கு எழுதிய மார்ச் 29, 1997 நாளிட்ட கடிதத்திலும் மேற்குறித்தவை வற்புறுத்தப்பட்டன.

புலன் விசாரணை செய்யும் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்களே என்கவுன்டர் செய்தவர்களாக இருக்கும்பட்சத்தில் வேறு சுதந்திரமான புலன் விசாரணை நிறுவனம் விசாரிக்க வேண்டும் எனவும், இத்தகைய விசாரணையின் அடிப்படையில் காவல் துறையினர் மீது வழக்குத் தொடரப்பட்டால் மோதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் கூட வெங்கடாசலையா குறிப்பிட்டிருந்தார்.

டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க அரசு, அசோக் ஜோரி எதிர் உ.பி. அரசு ஆகிய ரிட் வழக்குகளில் நீதியரசர்கள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோரும், பி.யூ.சி.எல். எதிர் இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன்ரெட்டி மற்றும் சுஹால் சென் ஆகியோரும் வழங்கிய தீர்ப்பையும் விசாரணை மேற்கொள்ள வழங்கப்பட்ட ஆணையையும் சுருக்கம் கருதித் தவிர்க்கிறோம்.

மோதலில் கொல்லும் காவல்துறையினரை வீரதீரச் சாகசக்காரர்களாகக் காட்டுவது, அவர்கள் சொல்லும் பொய், புனை சுருக்கங்கள் அனைத்தையும் அப்படியே வெளியிடுவது ஆகியவற்றின் -மூலம் என்கவுன்டருக்கு ஆதரவான ஒரு மனநிலையை ஊடகங்கள் உருவாக்குவதும் கண்டனத்திற்குரியது.

''விஜயகுமாருக்கும் விஜயகாந்துக்கும் என்ன வித்தியாசம்? முன்னவர் 'என்கவுன்டர்' செய்தார். பின்னவர் 'சின்னக்கவுண்டர்' செய்தார்'' என்பது போன்ற 'ஜோக்'குகளை வெளியிட்டு மத்திய தர வர்க்கத்தினரைப் புல்லரிக்கச் செய்வது என்பதெல்லாம் மனித உரிமை நோக்கில் மிகவும் கவலைக்குரியது.

என்கவுன்டர் கொலைகள் விசாரணையின்றி அனுமதிக்கப்படுவதன் -மூலம் என்றென்றும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிரதேமாக நம்முடையது மாற்றப்படுகிறது. சட்டப்பூர்வமற்ற ஒரு நிலையைச் சட்டப்பூர்வமாக்குவதாக பரிசறிவித்தல்கள், புகழ் பாடல்கள் முதலியன அமைகின்றன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை எந்த மக்கள், 'குடிமக்கள்' என்கிற நிலையிலிருந்து 'குடிமக்கள் அல்லாதவர்கள்' என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

என்கவுன்டர் கொலைகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கே அழைத்து வராமல் காவல் நீடிக்கும் 'வீடியோ கான்பரன்சிங்', பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள 'உண்மை அறியும் சோதனைகள்' ஆகியவற்றின் -மூலம் காவல்துறையில் உரிமைகள் அபரிதமாக்கப்படுதல் ஜனநாயகத்திற்கும் கேடு.

குடி உரிமையிலும், மனித கண்ணியங்களிலும் அக்கறையுள்ளோர் ஒன்றிணைவோம்!

போலி மோதல்களை எதிர்ப்போம்!



போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம்


தொடர்புக்கு:

வழக்குரைஞர் பொ.இரத்தினம் 94434 58118,
பேராசிரியர் அ.மார்க்ஸ் 94441 20582,
வழக்குரைஞர் பாவேந்தன் 94433 06110,
கோபால் 98413 24699,
புதுவை கோ.சுகுமாரன் 98940 54640

கருத்துகள் இல்லை: