பொறுத்தது போதும்!! பொங்கி எழுவோம்!! பட்டினி கிடக்கும் நம் சகோதரர்களுக்கு படகுகளில் உணவு, மருந்து கொண்டு செல்வோம்!! பழ. நெடுமாறன்
|
யாழ் நகரம் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு வாழும் ஐந்து இலட்சம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க சிங்கள அரசு முடிவு செய்தது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் 'ஏ9' நெடுஞ்சாலையை அடைத்தது. உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் இன்றியமையாத பொருட்கள் எதுவும் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானார்கள். பொருட்களின் விலை பலநூறு மடங்கு உயர்ந்தது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். நோயாளிகளும் முதியோர்களும் குழந்தைகளும் போதுமான மருந்துகள் இல்லாமல் சாவைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். தங்கள் கண் எதிரிலேயே தங்களால் நேசிக்கப்படுபவர்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்து மக்கள் கண்ணீர் சிந்தினர். இந்த செய்திகள் எல்லாம் அன்றாடம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தபோது தமிழக மக்களைச் சோகம் கவ்விக் கொண்டது. துயருறும் தனது சகோதர மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் அளிக்க அவர்கள் துடியாகத் துடித்தனர். ஆனாலும் இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள கடல் அதைத் தடுத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காலஞ்சென்ற எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் புயல் வீசி மக்களுக்கும் சொத்துகளுக்கும் பெரும் சேதம் நேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டவுடன் இந்திய அரசின் அனுமதியை உடனடியாகப் பெற்று இரண்டு கப்பல்கள் நிறைய உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்து உற்றுழி உதவினார் அவர். அதைப் போல இப்போதும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் யாழ் மக்களின் பட்டினியைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பாகவே நின்று விட்டது. சிங்கள இனவெறி அரசின் மனித நேயத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. ஆனால் அண்டையில் இருக்கக் கூடிய இந்திய அரசு இதற்குக் கண்டனம் தெரிவிக்கவே இல்லை. தமிழக, இந்திய அரசுகளின் இந்தப் பாராமுகப் போக்கினைப் பார்த்து வேதனை அடைந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கிற அமைப்புகள் ஒன்றுகூடி யாழ் மக்களின் துயரைத் துடைக்க முடிவு செய்தன. கடந்த 9.12.06அன்று யாழ்ப்பாண மக்களுக்கு உணவு, மருந்துகள் திரட்டி அனுப்புவது எனத் தீர்மானித்தனர். அதற்கிணங்க தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாகச் சென்று இரு கையேந்தி மக்களிடம் பொருட்களைப் பெற்றனர். ஏழையெளிய மக்கள் கூட தாமாகவே முன்வந்து தங்கள் சக்திக்கு மீறிய அளவிற்கு பொருட்களை அள்ளித் தந்தனர். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதைப்போல சாதாரண மக்கள் முன்வந்து கொடுத்த இந்தப் பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாகும். 28.012.07 அன்று இந்தப் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு உதவும்படி இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். 9.2.07 அன்று இதற்கான அனுமதியை வழங்கும்படி இந்திய அரசை வேண்டிக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனாலும் மார்ச் மாதம் வரை எவ்வித பதிலும் இல்லை. அதற்குப்பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ., பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசு ஆகியோர் பிரதமரிடம் நேரிலும் கடிதம் மூலமும் இப்பிரச்சனையை தெரியப் படுத்தினார்கள். அவரும் அதனைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனாலும் மே மாதம் வரை இந்திய அரசின் அனுமதிக் கடிதம் வரவில்லை. அதற்குப் பிறகு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சார்பில் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து பல்லாயிரக்கணக்கான கடிதங்களும் தந்திகளும் தொலைநகலிச் செய்திகளும் அனுப்பப்பட்டன. இதற்குப்பின் 5.6.2007 அன்று சென்னையில் அத்தனை அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் உண்ணாநோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். 13.06.07 அன்று ஜெனிவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்குச் சென்று அங்கு தென்ஆசிய பகுதிக்குப் பொறுப்பாளராக இருக்கும் உடோ வாகன் மெய்க் என்பவரை நேரில் சந்தித்து இது குறித்து நான் முறையிட்ட போது அவர் அளவுகடந்த வியப்பு அடைந்தார். செஞ்சிலுவைச் சங்கம் பொதுவான மனித நேய அமைப்பாகும். உலக நாடுகளின் அரசுகள் எதுவாக இருந்தாலும் அதனுடைய தொண்டுகளுக்கு துணை நின்றே வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனையில் இந்திய அரசு அனுமதி தரத் தயங்குவதின் பின்னணி என்ன என்பது குறித்து இந்திய அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொள்கிறேன்'' என்று கூறினார். கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நாம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகப் போயின. எளியவர்களான நமது தோழர்கள் வீதிவீதியாக - வீடுவீடாகச் சென்று குருவிகள் சேர்ப்பது போல் சேர்த்த பொருட்கள் பசியால் வாடும் சகோதர மக்களுக்கு அனுப்ப முடியாமல் வீணாகி வருவதைக் கண்டு மனம் நொந்தார்கள். வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்ட அரிசி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போகத் தொடங்கிற்று. மருந்துகள் அதன் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் தேதிகளைக் கடந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் நமது தோழர்களின் உள்ளங்களையும் அள்ளிக் கொடுத்த பொது மக்களின் உள்ளங்களையும் எந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு பிறந்தது. கடந்த 04.08.07 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரத்தில் தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அந்த மாநாட்டில் பேசினார்கள். செப்டம்பர் 7ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு இராமேசுவரம் நோக்கியும் திருச்சியிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் நோக்கியும் இரு அணிகளாகச் சென்று செப்டம்பர் 12ஆம் தேதியன்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்ட முடிவினை நாம் மேற்கொள்வதற்கு இந்திய, தமிழக அரசுகளே பொறுப்பாகும். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்தப் பொருட்களை அனுப்புவதற்கு நாம் செய்த முயற்சிகள் வீணாகிவிட்ட நிலையில் நாமே அந்தப் பொருட்களை படகில் ஏற்றிக் கொண்டு செல்வது என்பது சட்ட விரோதமாக இருக்கலாம்/ ஆனால் அது ஒருபோதும் கடமை தவறியதாகாது. நமது சகோதர மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. இந்த கடமையை நாம் செய்ய முற்படும்போது இந்திய கடற்படை நம்மைத் தடுக்கலாம். சிங்கள கடற்படை நம்மை சுடலாம். எது நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் நமது கடமையை நாம் துணிந்து செய்வோம். செப்டம்பர் 12ஆம் தேதி நாகப்பட்டினம், இராமேசுவரம் கரைகளில் கடல் அலைகளோடு மக்கள் அலை போட்டியிடட்டும். கூடுவோம்! உயிர்காக்கும் பொருட்களைக் கொண்டு செல்வோம்!! பட்டினியால் துடிக்கும் தமிழர்களுக்கு அளிப்போம்!! வரலாற்றுக் கடமையாற்றத் தமிழர்களே திரண்டு வருக!! |
--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com-----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக