இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படியே குறித்த தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எனினும் அரசாங்கம் மே 18 ஆம் திகதி மோதல் ஒன்றின் போது நடேசன்,புலிதேவன் மற்றும் ரமேஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெல்லமுள்ளிவாய்க்காலில் 100க்கு 100 மீற்றர் பிரதேசத்திற்குள் அகப்பட்டிருந்தபோதே இடம்பெற்றது என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தளபதி கருத்து கூற மறுத்துள்ளார்
சரத் பொன்சேகாவின் இந்த தகவல் தொடர்பில், 58 வது படையணித்தளபதி சவேந்திர சில்வாவும், இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரியவும் தமது கருத்தை தெரிவிக்க மறுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
எனினும் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், தமக்கு கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் சரணடையப் போகும் விருப்பத்தை தொலைபேசி மூலம் அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள், சரணடையப் போவதாக நோர்வே தரப்பு தமக்கு அறிவித்ததாக இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். எனினும் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதி நாட்களில் உரியவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளராக இருந்தவரும் தற்போது ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதருமான பாலித கோஹன, செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கையில், நடேசனிடம் இருந்தும் புலிதேவனிடம் இருந்தும் பல செய்திகளை பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, சமபவத்தின் போது, 58 வது படையணி தளபதி சவேந்திர சில்வாவுடன் இருந்த ஊடகவியலாளர்களே தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற விடயத்தை கூறியதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரே சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக அந்த ஊடகவியலாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவும் மறுப்பு
சரத் பொன்சேகாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, தாம் நோர்வே தரப்பிடம் இருந்து புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெற்றிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று தலைவர்கள் சரணடையப்போவதான தகவலை அறிந்திருக்கவில்லையா என பசில் ராஜபக்சவிடம் கேட்டபோது, இல்லை. தாம் அவ்வாறு கூறவில்லை.ஆனால் நோர்வே தரப்பினர் தம்முடன் தொடர்புக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் செய்திகள் தொடர்பாக இலங்கையின் ஆங்கில ஊடகம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக