இலங்கைத் இலங்கைத் தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில், எடுப்பதற்கு ஆள் இல்லாமல் கிடக்கிறது. இந்திய செஞ்சிலுவைச் சங்கமும், இந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டதால், நிவாரணப் பொருட்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது.
இந்த அமைப்பின் சார்பில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் திரட்டப்பட்ட உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்றிய, "கேப்டன் அலி' கப்பல், கடந்த மே மாதம் 7ம் தேதி பிரான்சில் இருந்து இலங்கைக்கு கிளம்பியது. "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் என, இவற்றிற்கு பெயரிடப்பட்டது. நிவாரணப் பொருட்களை இறக்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. சென்னையைச் சேர்ந்த, "மனிதம்' என்ற அமைப்பு, நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இறக்க முடிவு செய்து, அனுமதி கோரியது; இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜா மூலமாக தமிழக அரசு வலியுறுத்தலும், சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, கொத்தபயே ராஜபக்ஷே தலைமையில், இந்தியா வந்த இலங்கை உயர்மட்டக் குழு, நிவாரணப் பொருட்களை ஏற்பதாக உறுதியளித்தது. ஜூலை 3ம் தேதி, சென்னை துறைமுகத்திற்கு வணங்காமண் கப்பல் வந்து சேர்ந்தது. நிவாரணப் பொருட்கள் இறக்கப் பட்டன. நான்கு நாட்கள் சோதனைக்குப் பிறகு, 27 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, "கேப் கலோராடா' என்ற கப்பல் மூலமாக, நிவாரணப் பொருட்கள் கொழும்பு எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இந்தப் பொருட்கள் கொழும்பிற்கு அனுப்பப் பட்டன. நிவாரணப் பொருட்களை, கொழும்பில் இறக்கி வைத்துவிட்டு கப்பல் புறப்பட்டுச் சென்றுவிட்டது. துறைமுகக் கட்டணத்தை செலுத்துவது யார், உரிய ஆவணங்கள் இல்லை என பல காரணங்களைக் கூறி, அந்தப் பொருட்களை கிடப்பில் போட இலங்கை அரசு முயற்சித்தது. அதோடு, இந்த பொருட்களை ஆகஸ்ட் 15ம் தேதி ஏலம் விடுவதாக அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில், துறைமுகக் கட்டணத்தை செலுத்துவதற்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்தது. ஆனால், கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய இலங்கை அரசு, அதற்கான ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தியது. அதோடு, நிவாரணப் பொருட்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரி நிர்ணயித்து, அதைக் கட்டுமாறும் நிர்பந்தம் கொடுத்தது. இலங்கை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்திய நிலையில், இந்த நிவாரணப் பொருட்களை தாங்கள் எடுக்கப்போவதில்லை என, கடந்த செப்டம்பர் 26ம் தேதி இந்திய செஞ்சிலுவைச் சங்கம், கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதற்கும் இலங்கை அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. நிவாரணப் பொருட்களை அனுப்பிய கருணைத் தூதுவன் அமைப்பு, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் விலகிக் கொண்டுள்ள நிலையில், 884 டன் நிவாரணப் பொருட்கள், கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் கிடக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக