"இலங்கையில் தமிழின அழிப்புப் போர் இன்னும் முடியவில்லை , இதற்காகத்தான் இப்போதும் இந்திய ராணுவத்தின் உதவியைக் கோருகின்றனர்" என்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
திருச்சியில் அக்கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "தமிழ்த் தேசியம்" சிறப்பு மாநாட்டில் அவரது நிறைவுரை:
"தமிழகத்தில் தமிழர்கள் அரசியல் விடுதலை பெற வேண்டும். ஈழத் தமிழர் விடுதலைக்கு நாம் துணை நிற்க வேண்டும். இந்த இரண்டும்தான் முக்கியக் கடமைகள்.
ஈழ விடுதலை என்ற முற்றிய கதிரை இந்திய, சீன அரசுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம் அழித்து நாசம் செய்துவிட்டது. ஆனாலும், அந்தப் போராட்டம் மீண்டும் வெல்லும்.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்துக்கான மண்ணின் சிக்கலை முன்வைக்காவிட்டால் நாம் இலங்கைத் தமிழர் விடுதலையைப் பேச முடியாது; அவர்களுக்கு துணை நிற்கும் அளவுக்கு வளரவும் முடியாது.
இலங்கையில் இப்போது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்றரை லட்சம் தமிழர்களை, வாரம் ஆயிரத்து ஐநூறு பேராகக் கொல்ல இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, இலங்கையில் இன அழிப்புப் போர் இன்னமும் முடிவடையவில்லை.
இதற்குத்தான் கண்ணி வெடிகளை அகற்ற உதவ வேண்டும் என்ற போர்வையில், இந்திய ராணுவத்தை அழைக்கிறார்கள். இனி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக் கூடாது.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசத்தை நிறுவ பணம், பதவி, புகழுக்கு ஆசைப்படாத இளைஞர்கள் முன்வர வேண்டும். சேதாரமில்லாமல் தங்க நகையை உருவாக்க முடியாது.
இந்தியாவுக்குள் திபெத்திய அகதிகளுக்கான முகாம்கள் சிறப்பாக உள்ளன. அவர்களுக்கான உதவித் தொகைகளும் அதிகமாக வழங்கப்படுகின்றன. வெளிநாட்டு உதவிகளையும் அவர்கள் விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழர்களுக்கான அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளே இல்லை.
ஒவ்வொரு விடயத்துக்கும் பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலையில் தமிழீழ ஏதிலிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். சலுகைகளைப் பெற, அதற்கான சான்றுகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது" என்றார் மணியரசன்.
பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ. மணி:
"இந்திய விடுதலையின்போதே "இந்த நாடு இனி யார் கைக்குச் செல்லுமோ?" எனக் கேட்டார் அம்பேத்கர். அதேபோல, தமிழ்ச் சூழலில் உள்ள சாதிய, மதக் கூறுகளை வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்? அதற்காக முன்தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.
நம்மைப் பற்றி இந்திய அரசு ஏன் அக்கறை கொள்ளவில்லை? என்ற கோபமும், வேகமும் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. நியாயமான கோபத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
விடுதலைக்கான ஆற்றலை வளர்க்க வேண்டும்" என்று உரையாற்றினார் கொளத்தூர் தா.செ.மணி.
தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு:
"தமிழ்த் தேசியம் சாத்தியமா? என்று கேட்கிறார்கள். இவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால் சாத்தியமில்லைதான். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் தமிழ்த் தேசியம் சாத்தியமாகும்" என்றார் தியாகு.
எழுத்தாளர் அமரந்தா:
"சீன வளர்ச்சியை மாதிரியாக ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. சீனாவின் "சந்தை சோசலிசம்" கியூபாவையும் மீண்டும் முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்திவிடும். ஈழப் போராட்டம் குறித்து மக்கள் நலம் பேணும் கியூபா, வெனிசூலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் நாம் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். இன விடுதலைக்கான நீண்ட போராட்டத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். இதற்கான பணியை "லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்" மேற்கொண்டுள்ளது.
முதல் கட்டமாக அந்த அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கு சில இடங்களில் இருந்து பதிலும் வந்துள்ளது. இந்தப்பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்" என்றார் அமரந்தா.
கவிஞர் நா. ராசா ரகுநாதன் வரவேற்றார். வே.க. லட்சுமணன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக