தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் தொடங்கியது; 2 லட்சம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
ஈழத் தமிழர்களுக்காக நேற்று தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி பாடசாலை மற்றும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்தனர் என அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் சிறிலங்கா அரசின் போரை உடனடியாக தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயர் பாடசாலைகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நேற்று போராட்டத்திற்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக திருச்சியில் மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் வேறு இடங்களிலும் மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சென்னை பல்கலைக்கழக மாணவர் தலைவர் கே. வெங்கடாஜலம் கூறியதாவது:
ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்படும் மாணவர் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் போராட்டம். இது நின்றுவிடாது.
இந்த போராட்டத்தை அடக்கிவிட வேண்டும் என்று அரசு மாணவர் தலைவர்களை கைது செய்துள்ளது. அடக்குமுறை மூலம் மாணவர்களை ஒடுக்கிவிட முடியாது. மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
சென்னை பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை பச்சையப்பன் கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.
மேலும் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கோவை பன்னீர் செல்வம், தஞ்சை பாக்கியராஜ், இனியன், தொல்காப்பியன் ஆகியோர் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை அரசு மாணவர் தலைவர்களை கைது செய்து அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் தடுத்து நிறுத்தி விட முடியாது. அப்படி நினைத்தால் தீவிரமடையும் என்றும் கூறினர்.
நன்றி:-புதினம்.
வியாழன், 22 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக