வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007

தோழருக்கு செவ்வணக்கம்...(தனி மடல்)

தோழருக்கு செவ்வணக்கம்...
 
        பொதுவுடைமைக் கொள்கையை லட்சியமாக ஏற்றுக் கொண்ட மொழிக்கும், இனத்திற்கும் பாடுபட்டு என்றும் எளிமையுடன் வாழ்ந்து மறைந்தவர் அமரர் ஜீவானந்தம் ஆவார். ஆரம்பத்தில் கதரியக்கத்தில் தேசத் தொண்டு புரிந்து விட்டு பிறகு பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இனவிடுதலைக்காக பாடுபட்டு, பின்னர் வர்க்க பேதங்களை அகற்ற பொதுவுடைமைக் கொள்கைகளை ஏற்று செயல்பட்டு வந்தவர் ஜீவா. தமிழ் இலக்கியங்கள் மீதும் தமிழ் மீதும் அவர் கொண்ட பற்று அவரை தமிழ்த் தேசியர்களுக்கு ஒரு பாடம்.
        தமிழக அரசியலில் வள்ளல்களாக போஸ் கொடுத்துக் கொண்டும் மக்களை ஏமாற்றி பிழைத்து கொள்ளும் பல தலைவர்கள் அறியப்ட்டது போல ஜீவானந்தம் அறியப்படவில்லை.  இன்றைய இளைய தலைமுறைகளுக்கு அமரர் ஜீவானந்தம் சிறந்த வழிகாட்டி. அவரை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதை நமது கடமையெனக் கருதுவது சிறப்பு..
       
    அமரர் ஜீவானந்தம் அவர்களின் நூற்றாண்டு விழாவினை தமிழ்க் கலை இலக்கிய பேரவை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதற்கு தங்களால் முடிந்த நன்கொடை உதவிகளை தந்து உதவ வேண்டுகிறேன்..
 
நிகழ்ச்சி நிரல்
 
வரவேற்புரை
தோழர் அ.பத்மநாபன்
வெளியீட்டாளர், தமிழர் கண்ணோட்டம்
 
தலைமை
தோழர் உதயன்
தமிழக ஒருங்கிணைப்பாளர்,தக.இ.பே
 
சிறப்புரை 
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்
 
பாலவர் இரா.இளங்குமரனார்
 
திரு.மா.சே.தெய்வநாயகம்
 
தோழர் பெ.மணியரசன்
ஆசிரியர், தமிழர் கண்ணோட்டம்
 
நன்றியுரை 
தோழர் கவிபாஸ்கர்
 
நேரம்
செப்டம்பர் 22 மாலை 5.30 மணிக்கு
இடம்:
செ.தெ.நாயகம் பள்ளி, தியாராய நகா, சென்னை-17.
 
தொடர்புக்கு
தோழர் க.அருணபாரதி,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை,
20-7, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை-17.
பேச: 9841949462
 

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

திங்கள், 27 ஆகஸ்ட், 2007

பொறுத்தது போதும்!! பொங்கி எழுவோம்!!

பொறுத்தது போதும்!! பொங்கி எழுவோம்!!
பட்டினி கிடக்கும் நம் சகோதரர்களுக்கு
படகுகளில் உணவு, மருந்து கொண்டு செல்வோம்!!
பழ. நெடுமாறன்

 

யாழ் நகரம் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு வாழும் ஐந்து இலட்சம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க சிங்கள அரசு முடிவு செய்தது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் 'ஏ9' நெடுஞ்சாலையை அடைத்தது. உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் இன்றியமையாத பொருட்கள் எதுவும் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானார்கள். பொருட்களின் விலை பலநூறு மடங்கு உயர்ந்தது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். நோயாளிகளும் முதியோர்களும் குழந்தைகளும் போதுமான மருந்துகள் இல்லாமல் சாவைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். தங்கள் கண் எதிரிலேயே தங்களால் நேசிக்கப்படுபவர்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்து மக்கள் கண்ணீர் சிந்தினர்.
இந்த செய்திகள் எல்லாம் அன்றாடம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தபோது தமிழக மக்களைச் சோகம் கவ்விக் கொண்டது. துயருறும் தனது சகோதர மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் அளிக்க அவர்கள் துடியாகத் துடித்தனர். ஆனாலும் இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள கடல் அதைத் தடுத்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காலஞ்சென்ற எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் புயல் வீசி மக்களுக்கும் சொத்துகளுக்கும் பெரும் சேதம் நேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டவுடன் இந்திய அரசின் அனுமதியை உடனடியாகப் பெற்று இரண்டு கப்பல்கள் நிறைய உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்து உற்றுழி உதவினார் அவர். அதைப் போல இப்போதும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் யாழ் மக்களின் பட்டினியைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பாகவே நின்று விட்டது.
சிங்கள இனவெறி அரசின் மனித நேயத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. ஆனால் அண்டையில் இருக்கக் கூடிய இந்திய அரசு இதற்குக் கண்டனம் தெரிவிக்கவே இல்லை.
தமிழக, இந்திய அரசுகளின் இந்தப் பாராமுகப் போக்கினைப் பார்த்து வேதனை அடைந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கிற அமைப்புகள் ஒன்றுகூடி யாழ் மக்களின் துயரைத் துடைக்க முடிவு செய்தன.
கடந்த 9.12.06அன்று யாழ்ப்பாண மக்களுக்கு உணவு, மருந்துகள் திரட்டி அனுப்புவது எனத் தீர்மானித்தனர். அதற்கிணங்க தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாகச் சென்று இரு கையேந்தி மக்களிடம் பொருட்களைப் பெற்றனர். ஏழையெளிய மக்கள் கூட தாமாகவே முன்வந்து தங்கள் சக்திக்கு மீறிய அளவிற்கு பொருட்களை அள்ளித் தந்தனர். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதைப்போல சாதாரண மக்கள் முன்வந்து கொடுத்த இந்தப் பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாகும்.
28.012.07 அன்று இந்தப் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு உதவும்படி இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். 9.2.07 அன்று இதற்கான அனுமதியை வழங்கும்படி இந்திய அரசை வேண்டிக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனாலும் மார்ச் மாதம் வரை எவ்வித பதிலும் இல்லை.
அதற்குப்பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ., பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசு ஆகியோர் பிரதமரிடம் நேரிலும் கடிதம் மூலமும் இப்பிரச்சனையை தெரியப் படுத்தினார்கள். அவரும் அதனைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனாலும் மே மாதம் வரை இந்திய அரசின் அனுமதிக் கடிதம் வரவில்லை. அதற்குப் பிறகு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சார்பில் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து பல்லாயிரக்கணக்கான கடிதங்களும் தந்திகளும் தொலைநகலிச் செய்திகளும் அனுப்பப்பட்டன. இதற்குப்பின் 5.6.2007 அன்று சென்னையில் அத்தனை அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் உண்ணாநோன்பு போராட்டத்தை நடத்தினார்கள்.
13.06.07 அன்று ஜெனிவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்குச் சென்று அங்கு தென்ஆசிய பகுதிக்குப் பொறுப்பாளராக இருக்கும் உடோ வாகன் மெய்க் என்பவரை நேரில் சந்தித்து இது குறித்து நான் முறையிட்ட போது அவர் அளவுகடந்த வியப்பு அடைந்தார்.
செஞ்சிலுவைச் சங்கம் பொதுவான மனித நேய அமைப்பாகும். உலக நாடுகளின் அரசுகள் எதுவாக இருந்தாலும் அதனுடைய தொண்டுகளுக்கு துணை நின்றே வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனையில் இந்திய அரசு அனுமதி தரத் தயங்குவதின் பின்னணி என்ன என்பது குறித்து இந்திய அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொள்கிறேன்'' என்று கூறினார்.
கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நாம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகப் போயின. எளியவர்களான நமது தோழர்கள் வீதிவீதியாக - வீடுவீடாகச் சென்று குருவிகள் சேர்ப்பது போல் சேர்த்த பொருட்கள் பசியால் வாடும் சகோதர மக்களுக்கு அனுப்ப முடியாமல் வீணாகி வருவதைக் கண்டு மனம் நொந்தார்கள். வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்ட அரிசி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போகத் தொடங்கிற்று. மருந்துகள் அதன் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் தேதிகளைக் கடந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் நமது தோழர்களின் உள்ளங்களையும் அள்ளிக் கொடுத்த பொது மக்களின் உள்ளங்களையும் எந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு பிறந்தது.
கடந்த 04.08.07 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரத்தில் தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அந்த மாநாட்டில் பேசினார்கள். செப்டம்பர் 7ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு இராமேசுவரம் நோக்கியும் திருச்சியிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் நோக்கியும் இரு அணிகளாகச் சென்று செப்டம்பர் 12ஆம் தேதியன்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்ட முடிவினை நாம் மேற்கொள்வதற்கு இந்திய, தமிழக அரசுகளே பொறுப்பாகும். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்தப் பொருட்களை அனுப்புவதற்கு நாம் செய்த முயற்சிகள் வீணாகிவிட்ட நிலையில் நாமே அந்தப் பொருட்களை படகில் ஏற்றிக் கொண்டு செல்வது என்பது சட்ட விரோதமாக இருக்கலாம்/ ஆனால் அது ஒருபோதும் கடமை தவறியதாகாது. நமது சகோதர மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த கடமையை நாம் செய்ய முற்படும்போது இந்திய கடற்படை நம்மைத் தடுக்கலாம். சிங்கள கடற்படை நம்மை சுடலாம். எது நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் நமது கடமையை நாம் துணிந்து செய்வோம்.
செப்டம்பர் 12ஆம் தேதி நாகப்பட்டினம், இராமேசுவரம் கரைகளில் கடல் அலைகளோடு மக்கள் அலை போட்டியிடட்டும்.
கூடுவோம்! உயிர்காக்கும் பொருட்களைக் கொண்டு செல்வோம்!!
பட்டினியால் துடிக்கும் தமிழர்களுக்கு அளிப்போம்!!
வரலாற்றுக் கடமையாற்றத் தமிழர்களே திரண்டு வருக!!



--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2007

செஞ்சோலை படுகொலை நினைவு தினம்

தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்

"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா. அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள்.

அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன்"தமிழ்த்தினம்" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள்.போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே , செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.

ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது.

அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் "கிபிர்" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன.

ஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூட செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்து கொள்ள முடியமால் போனது.

தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோச செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும்இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.


(இதுதான் கெளசிகா)
 
குண்டுகள் அவள் வயிற்றை கிழித்து குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது.


(இதுதான் கலைப்பிரியா)
கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது.

ஒகஸ்ட் 14 ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கௌசிகாவின் கட்டிலை சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.


"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா"

"தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்"

"அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா"

சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"

"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்"

அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது. என்னை கட்டியணைம்மா..."

"எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ"

"அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா"

"கஜி...தேவாரம் பாடு"

"பாய்....பாய்....பா....ய்ய்...

இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்


(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)

(நன்றி: சருகு பிளாக்)
-----------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2007

‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு

'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு
பொ.ஐங்கரநேசன்
நன்றி : கருஞ்சட்டை தமிழர்
நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின்னணிக்கும் பொருந்தக் கூடிய எடுப்பான நீலநிறம். கோடையில் குளிர்மை. குளில் சூடு. பசபசவென்றிருக்கும் வியர்வையில் இருந்து விடுதலை. பட்டி தொட்டியெல்லாம் போட்டு அடிக்கக் கூடிய கடின உழைப்பு. நீடித்த உழைப்பில் நிறம் தேய்ந்து போனாலும் அதுவும் தனி நாகரிகம். சலவை பற்றிய கவலையேயில்லை. இத்தனைக்கும் மேலாக ஒப்பீட்டளவில் மலிவான விலை... இவை தான் இன்றைய தலைமுறை ஜீன்ஸைத் (Jeans) தலைமையில் வைத்துக் கொண்டாடுவதற்கான காரணங்கள்.

டெனிம், லெவி (Levi), லீ (Lee), கெஸ் (Guess) என்ற லேபல்களுடன் விற்பனையில் தூள்பறத்திக் கொண்டிருக்கும் ஜீன்ஸ் ஏதோ தங்களுக்காகவேதான் உருவாக்கப்பட்டது என இன்றைய இளசுகளை நினைக்க வைத்திருக்கிறது. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே 18 ஆம் நூற்றாண்டில் அடிமைத் தொழிலாளிகள், சுரங்கம் தோண்டுபவர்களின் கடுமையான பாவிப்புக்கென இந்த 'Tough and rough' ஜீன்ஸ் துணிகள் மேற்குலகின் சந்தைக்குள் நுழைந்து விட்டன.

1980இல் ஹாலிவுட் திரையுலகின் கவ்பாய் (cow boy)களின் கண்ணில் பட... கடைசியில் இந்த நீலத்துணிகளுக்கு வெள்ளித்திரை பச்சைக் கொடி காட்டி விட்டது. ஜேம்ஸ் டீனும் மர்லின் மன்றோவும் நிழலில் அணிந்து காட்டியதை அவர்களுடைய ரசிகர்கள் நிஜத்தில் அணிந்து அழகு பார்த்துப் பூத்தார்கள். ஹாலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலையே இன்று ஜீன்ஸýக்கு உலகம் பூராவும் விந்த ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

துணி உற்பத்தியில் இன்று உலகின் முன்னோடியாகத் திகழுவது சான்பிரான்ஸிஸ்கோவில் இயங்கும் Levistrauss நிறுவனம். இதன் வருடாந்த விற்பனை ஏழு மில்லியன் அமெக்க டாலர்களைத் தாண்டியிருக்கிறது. இதில் 71 வீதம் ஜீன்ஸ் விற்பனையால் மட்டுமே கிடைக்கிறது. அந்த அளவுக்கு ஜீன்ஸ் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.

அமெரிக்காவில் ஒவ்வொருவரும் சராசரியாக ஏழு ஜீன்ஸ் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியே டெனிம் துணியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. எனக்கு ஏன் சார்ம்ஸ் (charms) சிகரெட் பிடிச்சிருக்கு தெரியுமா? அதன் அட்டைப் பெட்டியில் அச்சாகியிருக்கும் எனது மனசுக்குப் பிடிச்சமான ஜீன்ஸ் துணிதான் காரணம் என்று ஒரு இந்திய இளைஞனைச் சொல்ல வைக்கும் அளவுக்குத் துணி உலகின் கொக்கோ கோலாவாக இன்றைய தலைமுறையை ஜீன்ஸ் உற்சாகம் ததும்ப வைத்திருக்கிறது. ஆனால் ஜீன்ஸ் உலகின் மறுபக்கத்தைப் பார்க்க நேர்ந்தால் இந்த உற்சாகம் கோலாப் பானத்தின் பொங்கியெழும் நுரைபோலக் கண நேரத்திலேயே அடங்கிவிடும் என்பதுதான் உண்மை.

மூன்றாம் உலக நாடொன்றின் பருத்தித் தோட்டம் ஒன்றிலிருந்து மேற்குலகின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் காட்சியறை வரைக்குமான ஜீன்ஸின் பயணப்பாதை துணியைப் போலவே கரடு முரடாக கரடு முரடாக (tough and rough) இருக்கிறது. இலகுவில் கீறிக் கிழிந்து போகாத ஜீன்ஸின் வரலாறு மனதைக் கீறிக் காயப்படுத்துகிறது.

ஜீன்ஸ் துணியைத் தமது நாடுகளில் தயாரிப்பது பல விதங்களிலும் தங்களுக்குப் பாதகமானது என்பதைத் தெரிந்து கொண்ட மேற்கத்தைய நாடுகள் அதைச் சாமர்த்தியமாக வறிய நாடுகளின் தலை மீது சுமத்தி விட்டிருக்கின்றன. ஏற்கனவே ஒரு வேளை உணவைக்கூடச் சரியாகப் பெறமுடியாமல் பசியுடன் இருக்கும் ஏழை நாடுகளின் விவசாய நிலங்கள் படிப்படியாகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறி போய்க் கொண்டிருக்கின்றன. நெல்லுக்கும் சோளத்துக்கும் பதிலாக ஜீன்ஸ் தயாரிப்புக்குத் தேவையான பருத்தியே இவர்களது விளைநிலங்களில் இன்று பெருமளவில் பயிடப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60,000 சிறு விவசாயிகள் கவர்ச்சிகரமான கடனுதவி போன்றவிளம்பரங்களால் பருத்திப் பயிர்ச் செய்கைக்குத் தாவியிருக்கிறார்கள். உலகெங்கிலுமுள்ள விவசாய நிலத்தின் ஐந்து வீத இடத்தை இன்று பருத்தியே அடைத்துக் கொண்டிருக்கிறது.

உணவுப் பயிர்களுக்குத் தேவையான நீர், பசளைகள், களைக்கொல்லிகளைப் பருத்திக்குப் பயன்படுத்துவதுடன் இதன் பாதுகாப்புக்கென மிகப் பெரிய அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விசிற வேண்டியிருக்கிறது. புதிது புதிதாக உருவாக்கப்படும் கலப்பினப் பருத்திச் செடிகள் நோய்களுக்கும் பீடைகளுக்கும் காட்டும் எதிர்ப்புத்தன்மை குறைவாகவே இருக்கிறது. உலகில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் நான்கில் ஒரு பாகம் (ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானம்) இந்தப் பருத்திச் செடிகளின் மீதே தெளிக்கப்படுகின்றன. இதனால் நிலம் நஞ்சாவதுடன் உலகம் பூராவும் மில்லியன் கணக்கான மக்கள் வருடந்தோறும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால் பூச்சிகொல்லி நஞ்சுகளின் போத்தல்களில் இருக்கும் தற்காப்பு முறைகளைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஏழை விவசாயிகள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். நாலு சதவீதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்காவிலேயே வேறு எங்கும் இல்லாத இந்த மருந்துகளால் நிகழும் மரணங்களும் அதிகமாக இருக்கின்றன.

இயற்கையான உரங்களையும் பூச்சித்தடுப்பு முறைகளையும் பயன்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்ட போதும் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை. இந்தப் பசுமை முறைக்கு ஒரு டாலர் செலவழிக்கப்பட்டால் அதனை விடப் பல ஆயிரம் மடங்குகளில் (4000 டாலர்கள்) புதிது புதிதான இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்படுகிறது.

இவ்வளவு இழப்புகளையும் பயிர்செய் நிலங்களில் கொடுத்துவிட்டு வெளியே வரும் பருத்திப் பஞ்சு இங்கே மட்டும் வெள்ளை மனதுடன் இருந்து விடுகிறதா என்ன?

நூல்களாக மாற்றப்படும்போதும் நீலநிறச்சாயம் ஊட்டப்படும்போதும் மிகப் பெருமளவில் இரசாயனக் கழிவுகளைத் தன் பங்குக்கும் சூழலில் சேர்ப்பித்து வருகிறது. பருத்தி நூலை நீலமாக மாற்றப் பயன்படும் இன்டிகோ (Indigo) சாயத்தைத் தயாரிக்கும்போது வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான டன்கள் அளவில் நச்சுப் பொருள்கள் தண்ணீருடனும் மண்ணுடனும் கலந்து சுற்றுச் சூழலை சீரழித்து விடுகின்றன. போதாக்குறைக்கு பியூமைஸ் கல்லை (Pumice) (நிறைய துளைகளைக் கொண்ட கண்ணாடி மாதியான கல். Stone Wash ஜீன்ஸ் தயாப்பில் உரோஞ்சுவதற்கு பயன்படும்) தோண்டி எடுப்பதால் நியூ மெக்ஸிக்கோவின் ஒரு நிலப்பகுதி அப்படியே நாசமாக்கப்பட்டிருக்கிறது.

பணக்கார நாடுகளில் ஜீன்ஸ் விற்பனை அமோகமாக இருந்தாலும் இந்த நாடுகள் ஆடை தயாரிப்பு நிறுவனங்களைத் தமது மண்ணில் அமைக்க விரும்பாததற்கு சுற்றுச்சூழலின் சீர்கேடு மட்டும் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக்கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. பங்களாதேஷ், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. கனடாவில் இந்திய மதிப்பில் 1000 ரூபாய்களுக்கு விற்பனையாகும் ஜீன்ஸ் மேலாடை ஒன்றுக்கு அதைத் தைத்துக் கொடுத்த கூலியாக எல்ச வடோல் உள்ள ஒரு ஏழைப் பெண்ணுக்கு வழங்கப்படும் தொகை வெறுமனே 27 சதங்கள் (cents) தான்.

வறிய நாடுகளில் உள்ள ஆடை தயாரிப்பு நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன என்ற பலமான குற்றச்சாட்டு வேறு இருக்கிறது. நெசவாளர்கள் பெண்களாக இருப்பதால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதும் இங்கு சகஜமான ஒன்று. தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தொழிலாளிகள் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். எல்சல்வடோல் இயங்கும் தாய்லாந்துக்குச் சொந்தமான மன்டான் சர்வதேச ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கான ஒரு சங்கம் அமைக்க முயற்சித்தபோது நிர்வாகத்தால் 300க்கும் அதிகமானோர் சுட்டுத் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கு நாடுகள் மட்டும் அல்லாமல், பண வருவாய்க்குரிய ஒரு தொழிலாக இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளும் ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை அமைக்கத் தொடங்கி விட்டன. இந்தியாவின் அரவிந்த் நிறுவனம் இப்போது 66 நாடுகளுக்கு 155 வகையான டெனிம் ஆடைகளை ஏற்றுமதி செய்து ஜீன்ஸ் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜீன்ஸ் துணியிலான ஒவ்வொரு ஆடையையும் பார்க்கும்போது நமது பாரம்பரிய பருத்தி ஆடைகளுக்குக் குட்பை சொல்லி விடுவோம் போலவே தெரிகிறது. நாளை இந்த ஜீன்ஸ் மோகம் மாறவும் கூடும். ஆனால் அது அழித்துவிட்டுப் போயிருக்கும் நிலத்தை, இந்த ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கையை யார் மீட்டுத் தருவார்கள்?