வியாழன், 10 மே, 2007
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்
பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்
மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!
நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!
கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!
காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை
-கவிஞர் காசி ஆனந்தன்
தமிழுக்கும் அமுதென்று பேர்!
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
- பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்

( நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து)
1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.
1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.
1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.
1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.
1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.
1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.
1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.
1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.
1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.
1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.
1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.
1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.
1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.
1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.
1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.
1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..
1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.
1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.
1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.
1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.
(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)
1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)
1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.
1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.
1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".
1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.
1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.
1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.
1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.
1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.
1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.
1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.
1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.
1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.
1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.
1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.
1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.
அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.
1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.
1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.
1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.
1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.
1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.
1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.
1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.
1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.
1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.
1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.
"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.
1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.
1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.
1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.
1970, சனவரி - இரமணி மறைவு.
1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.
1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.
புதன், 11 ஏப்ரல், 2007
சோதிடம், மந்திரம் என்பவையெலாம் மோசடியே!
சோதிடம், மந்திரம்
என்பவையெலாம் மோசடியே!
`மந்திரத்தால் மாங்காய் விழுமா?' என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இதன் பொருள் அவ்வாறெல்லாம் நடக்காது என்பதுதான். ஆனாலும் நடைமுறையில் மக்களிடம் இருக்கும் பேராசையும், பயமும் இவற்றை யெல்லாம் நம்பும்படிச் செய்கின்றன.
ஒரே ஒரு நிமிடம் இந்த நம்பிக்கையாளர்கள் சிந்தித் தாலே மாந்திரீகத்தின் பித்தலாட்டம் தோலுரிந்து போய்விடும்.
மாந்திரிகம் செய்கிறேன் என்று சொல்லி மார்தட்டும் அந்தப் பேர்வழிகள் அதற்காக ஏராள பணம் கேட்பது ஏன்? அந்த மாந்திரிகத்தால் தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில்தானே பணம் கேட்கிறார்கள்?
ஆசை வெட்கம் அறியாது - அச்சம் அறிவைத் தேடாது என்கிற முறையில்தான் மக்கள் நடந்து கொள்கிறார்கள். இதில் படித்தவர்கள் பாமரர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.
தங்கள் சரகத்தில் கொலைகள் அதிகம் நடக்கின்றன என்று சொல்லி காவல் நிலையத்திலேயே மந்திரவாதிகளை அழைத்து சடங்குகளைச் செய்யும் பரிதாபம் நிகழும்போது, பொதுமக்களைப் பற்றிச் சொல்வானேன்?
மதம் - அது விளைவித்த கேடுகள் ஒன்றல்ல இரண்டல்ல! பக்தி என்ற பெயரால் புத்தியை முதலாவதாக நாசப்படுத்துகிறது - காலத்தைக் கரியாக்குகிறது - பொருளை வீணடிக்கிறது. இந்த மூன்றும் மனிதனுக்கு எவ்வளவு அவசியமானவை? இவற்றைப் பறிமுதல் செய்கிறது சோதிடமும், மந்திரமும் என்றால், ஒரு மக்கள் நல அரசாங்கம் இதற்குக் காரணமானவர்களை என்ன செய்ய வேண்டும்? கொலைக் குற்றத்தினும் கொடிய குற்றமாகக் கருதி தண்டிக்க வேண்டாமா?
அரசமைப்புச் சட்டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அடிப்படைக் கடமையாகச் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? இதற்கு மாறான நடவடிக்கைகளைத் தண்டிக்க வேண்டாமா?
நான்கு நாள்களாக ஒரு செய்தி அடிபடுகிறதே! நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியைச் சேர்ந்த பெண் மந்திரவாதியான பத்மினி என்பவர் மந்திரத்தின் மூலம் தொழில் வளம் பெறும், செல்வம் கொழிக்கும். கெட்டது அழியும் - இந்தந்த வகையில் காளி பூஜை செய்யவேண்டும் என்று கதைவிட்டு, ஏராளமான அளவுக்குச் சொத்துகள் குவித்தார் என்றும், வங்கிகளில் கோடிக் கோடியாக பணம் இருக்கிறது என்றும் பத்தி பத்தியாகச் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. நாடெங்கும் முகவர்களை ஏற்பாடு செய்து மந்திரம் என்பதை ஒரு தொழில் முறையாக நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்ற முறையிலே அந்தப் பெண் மந்திரவாதியின்மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
இதற்குமுன் மயிலாடுதுறையை அடுத்த வைத்தீ°வரன் கோயில் என்ற ஊரில் நாடி சோதிடம் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றமும், வீடுமாக அலைந்து கொண்டு இருக்கிறார். இவற்றிற்கெல்லாம் பிறகாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டாமா?
சோதிடமும், மாந்திரிகமும் உண்மையானால் இவர்கள் ஏன் சட்டத்திற்குள் சிக்குகிறார்கள். சிறைச் சாலைக்குள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?
சாயிபாபா கதையே நாறுகிறதே! மாயாஜாலம் பெயரில் பிரதமர் நரசிம்மராவுக்குக் கொடுத்த தங்க சங்கிலி, வீடியோவில் பதிவாகி, அதன் குட்டு அம்பலமாகி விடவில்லையா? அவரிடம் ஆசி பெற்றுச் சென்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர் டெண்டுல்கரின் இப்போதைய நிலை என்ன? உலகக் கோப்பைக்கான போட்டியில் முகம் வீங்கி வெளிறிப் போய் வெளியேறியதுதானே மிச்சம்?
பொது மக்கள் இத்தகு படிப்பினைகளுக்குப் பிறகாவது கொஞ்சம் சிந்திப்பார்களாக
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
வெள்ளி, 6 ஏப்ரல், 2007
தலித் அடிமைகள்... தலையிடாத அரசு!
கொளத்தூர் ஒன்றியத்தில் அதிர்ச்சி சர்வே...
அந்தக் கிணற்றருகில் விளையாடிய சின்னக் குழந்தை. திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. அருகில் இருந்த பெண்களின் அலறல் கேட்டு, பக்கத்துத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த ஒரு பெரிய பையன், கிணற்றுக்கு ஓடி வந்திருக்கிறான். கிணற்றுக்குள் குதித்துக் குழந்தையைக் காப்பாற்ற அவன் தயாரான போது, அவனைத் தடுத்து நிறுத்திவிட்டனர் அந்தப் பெண்கள். எல்லோர் கண் எதிரிலும் அந்தக் குழந்தை உயிருக்குப் போராடி இறந்துவிட்டது...
இது கதையல்ல; நிஜம்! சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்துக்குள் வரும் கருங்கல்லூர் என்ற கிராமத்தில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.
ஏன் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற விடாமல், பையனைத் தடுத்தனர்? ஏனென்றால், அவன் ஒரு தலித்! கீழ்சாதிக்காரன் தொட்டால் தீட்டு என்று அவனைத் தடுத்து விட்டார்களாம்!
மனதை சில்லிட வைக்கும் இந்த சம்பவத்தை நம்மிடம் சொன்னவர், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மேட்டூர் மற்றும் கொளத்தூர் ஒன்றியச் செயலாளரு மான மேவை.சண்முகராஜா. அவரைச் சந்தித்தோம்.
''தீண்டாமைங்குறதே இல்லைனு எல்லா அரசாங்கமும் சொல்றது எந்த அளவுக்கு உண்மைங்கறத பாக்குறதுக்காக இந்த சர்வேயை எடுத்தோம். ஒரு குழுவுக்கு ஆறு பேருன்னு மொத்தம் இருபத்தஞ்சி குழுக்களா சர்வே டீமை பிரிச்சோம். இந்தக் குழுவுல அரசு ஊழியர்கள், வக்கீல்கள், பட்டதாரி இளைஞர்கள்னு எல்லோரையும் கொண்டு வந்தோம். 35 கேள்விகள் கொண்ட கேள்வித்தாளை ரெடி பண்ணி, கொளத்தூர் ஒன்றியத்துல இருக்கிற 54 தலித் கிராமங்களுக்கு அவங்க போனாங்க. அதுல பத்தாயிரம் பேரை சந்திச்சாங்க.
பெரியதண்டா, நீதிபுரம், ஊர்நத்தம், ஒட்டன்காடு, கோவிந்தபாடி, சி.எஸ்.புரம் ஆகிய ஊர்களில் தலித் மக்களுக்கு சலூன் கடையில முடி வெட்டுறது இல்ல. என்ன காரணம்னு விசாரிச்சா தலித் மக்கள் உட்கார்ந்து முடி வெட்டிக்கிட்டுப் போனா அந்த நாற்காலியில மத்த சாதிக்காரங்க உட்கார மாட்டாங்களாம். அதனால இன்னைக்கு வரைக்குமே அந்தக் கட்டுப்பாடு இருந்துகிட்டேதான் இருக்கு. பா.ம.க. மாநிலத் தலைவரான ஜி.கே.மணியோட சொந்த ஊரான கோவிந்தபாடியிலும் இதே கொடுமைதான்.
இந்த ஒன்றியத்துல மொத்தம் 127 டீக்கடைகள் இருக்கு. அதுல 32 டீக்கடையில இன்னும் இரட்டை டம்ளர் முறை இருக்கு. சத்யா நகர் ஏரியாவுல ஹோட்டல்களில் தலித்கள் இன்னமும் கீழேதான் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்காங்க. இந்திரா நகர்ல உள்ள கடைகளில் கொட்டாங்குச்சியிலதான் அவங்களுக்கு டீ கொடுக்கிறாங்க.
ஊர்நத்தம்ங்குற கிராமத்துல வெளியூரைச் சேர்ந்த தலித் ஒருத்தரு தெரியாம அந்த ஊருல இருக்கிற பிள்ளையாருக்குத் தண்ணி ஊத்திட்டு சாமிக் கும்பிட்டிருக்காரு. இந்த விஷயம் தெரிஞ்சி, பஞ்சாயத்தைக் கூட்டி அவருக்கு நூறு ரூவா குத்தம் போட்டிருக்காங்க. ஏரிக்காடுங்குற கிராமத்துல மீனாங்குற பொண்ணு பொது பைப்ல தண்ணிப்பிடிக்க போயிருக்கு. அப்போ பைப்ல வச்சிருந்த குடத்துல தண்ணி ரொம்பி கீழே போயிட்டு இருந்திருக்கு. அந்தக் குடத்தை நகர்த்தி வச்சிட்டு, இந்தப் பொண்ணு தண்ணி பிடிச்சிருக்கு. மேல் சாதிக்காரங்க குடத்தை கீழ் சாதிக்காரப் பொண்ணு எப்படி தொடலாம்னு அந்தக் குடத்தைப் போட்டு உடைச்சி தீ வச்சதோடு இல்லாம, குடத்தைத் தொட்ட மீனாவுக்கு நூறு ரூவா தண்டமும் விதிச்சிருக்காங்க!
இருபது கோயில்கள்ல தலித் மக்களை இப்பவும் உள்ளே விடுறது இல்ல. தலித் பையன்கூட வேற சாதி பொண்ணு லவ் பண்ணி ஓடி போயிடுச்சின்னு அந்தப் பொண்ணைப் பிடிச்சிக் கொண்டுவந்து, பொண்ணோட நாக்குல பிளஸ் குறி போல சூடு போட்டுத் தீட்டுக் கழிச்சிருக்காங்க. இது இன்னைக்கு வரைக்கும் வழக்கத்துல இருந்துகிட்டுதான் இருக்கு. தலித் மக்களைப் பண்ணை அடிமைகளாக வச்சிக்கிட்டு வேலை வாங்கிட்டு இருக்கிற பழக்கம் பல கிராமங்கள்ல இன்னும் இருக்கு. அவுங்களுக்கு வருசத்துக்கே சம்பளமா நாலாயிரம்தான் கொடுக்கிறாங்க. ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டா சம்பளத்துல நூறு ரூவா புடிச்சிக்குவாங்க. நாங்க இப்படி ஒரு சர்வே எடுக்கிற விஷயம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிஞ்சி போச்சி. உடனே ஒவ்வொரு கிராமத்துக்கா அதிகாரிகள் போய் எதையும் வெளியே சொல்லக்கூடாதுன்னு மிரட்டிட்டும் வந்திருக்காங்க.
தீண்டாமை இல்லைனு சொல்ற அதிகாரி யாரா இருந்தாலும் என்கூட நேரா வரச் சொல்லுங்க. நானே ஸ்பாட்டுக்குக் கூட் டிட்டுப் போறேன். இந்த சர்வேயோட மொத்த ரிப்போர்ட் டையும் தொகுத்து மாவட்ட ஆட்சியர் கிட்ட கொடுக்கப் போறோம். அவரு நடவடிக்கை எடுக்கலன்னா, அதுக்கு மேலதான் எங்க கச்சேரியே இருக்கு. நாங்க சொல்ற கிராமங்களில் உள்ள தலித் மக்கள் மீது நடக்கும் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கிற வரைக்கும் எங்க போராட்டம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கும்.
கொளத்தூர் ஒன்றியத்துல தொடங்கி இருக்கும் இந்த சர்வேயை, அடுத்த கட்டமா சேலம் மாவட்டம் முழுக்க பண்ண போறோம். எந்த ஊருல நாங்க சர்வே பண்ண போறோம்னு முன்கூட்டியே தெரிஞ்சிட்டா அதிகாரிகளும், மத்த சாதிக்காரங்களும் போய் தலித்களை மிரட்டி வச்சிடுறாங்க. அதனால நாங்க எங்கே சர்வே எடுக்கிறோம், எப்படி எடுக்கிறோம்ங்குறதை ரொம்பவும் ரகசியமா வச்சிக்குவோம்'' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து முடித்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தக் கொடுமைகளை வெளியே சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியினர்.
சேலம் மாவட்ட கலெக்டர் மதிவாணனிடம் இது தொடர்பாகப் பேசினோம். நாம் சொன்ன விஷயங் களைக் கேட்டுத் திடுக்கிட்டவர், ''கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்னும் எனக்கு எந்த விவரமும் சொல்லலை. அப்படி அவுங்க ரிப்போர்ட் கொடுத்ததும் உடனடியா அவுங்க சொல்ற இடங்களுக்கெல்லாம் அதிகாரி களை அனுப்பி, விசாரிக்கச் சொல்றேன். தீண்டாமைக் கொடுமை இருந்தா கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்படும். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்றார்.
எத்தனை மகாத்மாக்கள் வந்தாலும் தீண்டாமைக்கு மட்டும் மரணமே இல்லை போலிருக்கிறது!
- கே.ராஜாதிருவேங்கடம்
ஜூ.வி - Issue Date: 08-04-07
--
அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!
தொண்டன்,
கருப்பு சதீஷ்.
http://karuppupaiyan.blogspot.com












