ஊதிய உயர்வு : இந்தியச் சந்தையை
சேவைத்துறை சார்ந்ததாக மாற்றுகிறது
உற்பத்தித் துறை உழைக்கும் மக்கள்
தங்களுக்குரியப் பங்கைப் பெற போராட வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை
நடுவண் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், படைத்துறையினர் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான பரிந்துரையை நீதிபதி பி.என். ஸ்ரீ கிருஸ்ணா குழு அளித்துள்ளது. அப்பரிந்துரையை நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இப்பரிந்துரைகளைப் பார்க்கும் போது இது ஊதிய உயர்வு சார்ந்த அறிக்கை மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் சார்புத் தன்மையை மாற்றியமைக்கும் ஓர் ஏவுகணை என்று தெரிகிறது.
இப்பரிந்துரை அளித்த நீதிபதி ஸ்ரீ.கிருஸ்ணா, நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உலகமயம் என்ற ஒரே படகில் தாராளமாகப் பயணம் செய்பவர்கள் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியச் சந்தை, உற்பத்தித் துறையைச் சார்ந்திருப்பதற்கு மாறாக, சேவைத்துறையை சார்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கம் இதில் வெளிப்படுகிறது. இதனால் தான், அமைச்சரவைச் செயலர், தலைமை தளபதி போன்ற அதிகாரிகளுக்கு தற்போதுள்ள 30,000 ரூபாய் மாதச்சம்பளத்தை மும்மடங்காக மாற்றி ரூ.90,000 என்று உயர்த்துகிறது பரிந்துரை. இதே போல இனி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றோர்க்கும் சம்பள உயர்வு வரும். தலைமை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி அடுத்தநிலை அதிகாரிகளுக்கும் பெரிய அளவு ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே பாணியிலான ஊதிய உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கும் தர வேண்டும். இவையனைத்தும் சேவைத்துறை சார்ந்தவை. ஆனால் உற்பத்தி சார்ந்த, தொழில் துறை மற்றும் வேளாண் துறை ஆகிய இரண்டிலும் உழைக்கும் மக்கள் ஊதியமும் வருவாயும் மிக மேசாமாக வெவ்வேறு வடிவங்களில் வெட்டிக் குறைக்கப்படுகின்றன. தொழில் துறையில் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கையை மிகவும் குறைவாக வைத்துக் கொண்டு குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களை பெருவாரியாக அமர்த்தி வேலை வாங்கும் முறை மேலோங்கிவருகிறது. தொழிலாளி வர்க்கத்தைக் கொல்லைப்புற வழியாக நுழைந்து சுரண்டும் இப்போக்கை அரசுத்துறை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது. தனியார் துறையில் நிலவும் ஒப்பந்த கூலிமுறை சொல்லும் தரமன்று. மாதம் 20,000 ரூபாய் சம்பளம் பெற வேண்டிய திறன் மிக்க தொழிலாளியை வெறும ரூ.4,000 அல்லது 5,000 ரூபாய்க்கு ஒப்பந்தக் கூலியாக வைத்துக் கொள்கிறார்கள. பணம் காய்க்கும் மரம் என்று வர்ணிக்கப்படும் தகவல் தொழில்நுட்பத்துறையிலேயே 'அமர்த்து பிறகு துரத்து' (Hire and fire) என்ற வகையில் திறன்மிக்க ஊழியர்களுக்கு குறைந்த கூலி தருகிறார்கள். வேலை நிரந்தரம் செய்யவும் மறுக்கிறார்கள்.
வேளாண் துறையில் நெல், கோதுமை, கரும்பு, வாழை, பருத்தி, பயறு, நிலக்கடலை, எள், உளுந்து, காய்கறி, போன்ற உற்பத்தி பொருட்களுக்கு லாப விலை வழங்கியதே கிடையாது. கட்டுபடியான விலை கூட அளித்ததில்லை. இப்பொழுது வரவுள்ள ஊதிய உயர்வும், பங்குச்சந்தை சூதாட்டமும் சந்தைத் திறனை சேவைத்துறை சார்ந்ததாக மாற்றி விடும். அதை எதிர்கொள்ளும் ஆற்றல், உற்பத்தி துறையில் உழைக்கும் மக்களுக்கு இல்லாமல் போய்விடும்.
எடுத்துக்காட்டாக, இப்பொழுது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு விகிதத்திற்கு ஏற்ற விலையை நிர்ணயப்பிது என்றால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2500/- தர வேண்டும். அவ்வாறு தந்தால் தான் அந்நெல்லை உற்பத்தி செய்த உழவர் சந்தையை எதிர் கொண்டு வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க முடியும். அதே போல் அந்நெல்லை உற்பத்தி செய்யப் பாடுபட்ட உழவுத் தொழிலாளியின் நாள் சம்பளம் இன்றுள்ளதை போல் இருமடங்கு உயர வேண்டும். பிரமிடு வடிவிலான பொருளாதாரம் மேலும் வளர்ந்து, பலர் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய அல்லாடும் நிலையும் சிலர் சமூக உற்பத்தியின் பெரும் பகுதியைக் கவர்ந்து கொள்ளும் உச்சி வாழ்வும் பெறுவர்.
விலைவாசி உயர்வு பன்மடங்காகும். அதன் பலன் அப்பண்டங்களை உற்பத்தி செய்தவர்களுக்குப் போய்ச் சேராது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊக பேர பெரு வணிகர்களுக்கும் மட்டுமே விலைவாசி உயர்வால் வரும் பெரு நிதியம் போய்ச் சேரும். பண வீக்கம், வீக்கம் என்ற நிலையைத் தாண்டி பூதமாகப் பெருக்கும். சேவைத்துறை சார்ந்த இந்த ஊதியப் பெருக்கம் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பெறும் இலஞ்சத் தொகையின் அளவையும் பன்மடங்காக்கும். ஊழியர்களின் மனதையும் பண்பையும் கறைப்படுத்தும். எனவே, இப்பொழுது உற்பத்தித் துறை சார்ந்த உழைப்பாளிகள் குரல் கொடுக்க வேண்டியது,
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வைக் குறைக்க வேண்டும் என்பதற்கல்ல. மாறாக வேளாண் துறை உற்பத்தி பொருட்களுக்கு சந்தை நிலவரப்படியான இலாப விலை, உழவுத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, ஆலைத் தொழிலாளிகளுக்கு - நிரந்தர தொழிலாளர்களாக இருந்தாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தாலும் புதிய சந்தையை எதிர் கொள்ளும் அளவிற்குச் சம்பள உயர்வு ஆகியவற்றைக் கோரிப் போராடுவதே இன்றைய உடனடித் தேவை. ஒவ்வொரு துறை சார்ந்த உழைக்கும் மக்களும் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான விலை, உழைப்பிற்கான சம்பளம் ஆகியவற்றைப் புதிதாக நிர்ணயம் செய்து தாங்களே அறிவிக்க வேண்டும். அவ்வாறு நிர்ணயம் செய்து கொள்ள அந்தந்தப் பிரிவு உழைக்கும் மக்களும் தங்களுக்கான வல்லுநர் குழுவை அமைத்து மூன்று மாதஙகளுக்குள் முடிவு செய்து விலை உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான பட்டியலை வெளியிட்டு அதை அடைவதற்காகப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். இப்போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் பங்கெடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.