சோதிடம், மந்திரம்
என்பவையெலாம் மோசடியே!
`மந்திரத்தால் மாங்காய் விழுமா?' என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இதன் பொருள் அவ்வாறெல்லாம் நடக்காது என்பதுதான். ஆனாலும் நடைமுறையில் மக்களிடம் இருக்கும் பேராசையும், பயமும் இவற்றை யெல்லாம் நம்பும்படிச் செய்கின்றன.
ஒரே ஒரு நிமிடம் இந்த நம்பிக்கையாளர்கள் சிந்தித் தாலே மாந்திரீகத்தின் பித்தலாட்டம் தோலுரிந்து போய்விடும்.
மாந்திரிகம் செய்கிறேன் என்று சொல்லி மார்தட்டும் அந்தப் பேர்வழிகள் அதற்காக ஏராள பணம் கேட்பது ஏன்? அந்த மாந்திரிகத்தால் தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில்தானே பணம் கேட்கிறார்கள்?
ஆசை வெட்கம் அறியாது - அச்சம் அறிவைத் தேடாது என்கிற முறையில்தான் மக்கள் நடந்து கொள்கிறார்கள். இதில் படித்தவர்கள் பாமரர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.
தங்கள் சரகத்தில் கொலைகள் அதிகம் நடக்கின்றன என்று சொல்லி காவல் நிலையத்திலேயே மந்திரவாதிகளை அழைத்து சடங்குகளைச் செய்யும் பரிதாபம் நிகழும்போது, பொதுமக்களைப் பற்றிச் சொல்வானேன்?
மதம் - அது விளைவித்த கேடுகள் ஒன்றல்ல இரண்டல்ல! பக்தி என்ற பெயரால் புத்தியை முதலாவதாக நாசப்படுத்துகிறது - காலத்தைக் கரியாக்குகிறது - பொருளை வீணடிக்கிறது. இந்த மூன்றும் மனிதனுக்கு எவ்வளவு அவசியமானவை? இவற்றைப் பறிமுதல் செய்கிறது சோதிடமும், மந்திரமும் என்றால், ஒரு மக்கள் நல அரசாங்கம் இதற்குக் காரணமானவர்களை என்ன செய்ய வேண்டும்? கொலைக் குற்றத்தினும் கொடிய குற்றமாகக் கருதி தண்டிக்க வேண்டாமா?
அரசமைப்புச் சட்டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அடிப்படைக் கடமையாகச் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? இதற்கு மாறான நடவடிக்கைகளைத் தண்டிக்க வேண்டாமா?
நான்கு நாள்களாக ஒரு செய்தி அடிபடுகிறதே! நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியைச் சேர்ந்த பெண் மந்திரவாதியான பத்மினி என்பவர் மந்திரத்தின் மூலம் தொழில் வளம் பெறும், செல்வம் கொழிக்கும். கெட்டது அழியும் - இந்தந்த வகையில் காளி பூஜை செய்யவேண்டும் என்று கதைவிட்டு, ஏராளமான அளவுக்குச் சொத்துகள் குவித்தார் என்றும், வங்கிகளில் கோடிக் கோடியாக பணம் இருக்கிறது என்றும் பத்தி பத்தியாகச் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. நாடெங்கும் முகவர்களை ஏற்பாடு செய்து மந்திரம் என்பதை ஒரு தொழில் முறையாக நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்ற முறையிலே அந்தப் பெண் மந்திரவாதியின்மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
இதற்குமுன் மயிலாடுதுறையை அடுத்த வைத்தீ°வரன் கோயில் என்ற ஊரில் நாடி சோதிடம் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றமும், வீடுமாக அலைந்து கொண்டு இருக்கிறார். இவற்றிற்கெல்லாம் பிறகாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டாமா?
சோதிடமும், மாந்திரிகமும் உண்மையானால் இவர்கள் ஏன் சட்டத்திற்குள் சிக்குகிறார்கள். சிறைச் சாலைக்குள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?
சாயிபாபா கதையே நாறுகிறதே! மாயாஜாலம் பெயரில் பிரதமர் நரசிம்மராவுக்குக் கொடுத்த தங்க சங்கிலி, வீடியோவில் பதிவாகி, அதன் குட்டு அம்பலமாகி விடவில்லையா? அவரிடம் ஆசி பெற்றுச் சென்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர் டெண்டுல்கரின் இப்போதைய நிலை என்ன? உலகக் கோப்பைக்கான போட்டியில் முகம் வீங்கி வெளிறிப் போய் வெளியேறியதுதானே மிச்சம்?
பொது மக்கள் இத்தகு படிப்பினைகளுக்குப் பிறகாவது கொஞ்சம் சிந்திப்பார்களாக
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------