வியாழன், 17 டிசம்பர், 2009

கற்றது தமிழ், பலன் ??? தற்கொலை !!!

தமிழ் படித்து அறிவை வளர்த்துக் கொண்டவன்தான் தமிழ்நாட்டில், வேலை யில்
சேர முடியும் என்ற நிலை எப்போதும் இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை,
இருக்கப் போவதுமில்லை.

தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்கள் தமிழைப் படித்துவிட்டு வேலை
கிடைக்காமல் முதிர்ந்து கொண்டிருக்கிறார் கள். இவர்கள் என்ன செய்யப்
போகிறார்கள்?

பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட தமிழ்ப் பட்டதாரிகள் பட்டிமன்றம், வழக்காடு
மன்றம், தலைமைக் கழகங்களின் பேச்சாளர்களாவதற்கு முயற்சி செய்யலாம். உடல்
வலுவுள்ள தமிழ்ப் பட்டதாரிகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் குளைக்கால்
வெட்டப் போகலாம். மற்றவர்கள்?

தமிழில் எம்.எல்., எம்.பில்., பி.எட்., பி.எச்.டி., படித்து விட்டு 35
வயது வரை வேலைக்காக முயன்று தோற்ற பூமிநாதன் என்ற தலித் முதிர் இளைஞன்,
தமிழைப் படித்த தவறை உணர்ந்து 10.12.09 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரத்தில் ஒருவர் காலி!

தஞ்சை மாவட்டம் அணைக்கரை அருகி லுள்ள வடபாதி கிராமத்தில், பூமிநாதனைப்
பெற்ற சின்னாச்சியைச் சந்திக்க சென்றோம்.

""என் மூணு பசங்களில் பூமிநாதன் நடு வுலவன். நல்லா படிச்சான். நெறையப்
படிச்சான். வேலை கெடைச்சாத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு தேடுனான்
தேடுனான்... அன்னக்கிக் கூட என்னமோ அப்ளிகேஷன் வாங் கோணும் தஞ்சாவூர்
போகணும்னு கேட் டான். நெஜமாவே நீ வேலை தேடுறியா இல்லை இந்த வயசான
காலத்தில தெனக் கூலிக்கு போய் வர்ற எங்க காசை வாங் கிட்டுப் போயி ஊர்
சுத்துறியாடானு திட்டுனேன். திட்டிப்பிட்டு காசைக் குடுத்தேன். இப்படி
வெஷத்தை வாங்கிக் குடிச்சிட்டுச் சாவான்னு நெனைச்சுக் கொடப் பாக்கலியே
சாமீய்!'' தரையில் முட்டிக் கொண்டு கதறினார் அந்தத் தாய்.

தற்கொலை செய்து கொண்ட பூமி நாதனின் நண்பர் புலவர் சந்திரசேகரைச் சந்தித்தோம்.

""போன மாதம் நடந்த ஆசிரியர்கள் நியமனத்தில் 1588 பேர், அதில் தமிழ்
படித்தோர் 210 பேருக்கு நியமனம். அதிலும் பூமிநாதனுக்கு கிடைக்கவில்லை.
இப்ப டி.ஆர்.பி. கால்ஃபர் பண்ணியிருக்காங்களே... அதுக்காக ஒருவாரம் அலையோ
அலைனு அலைஞ்சு அப்ளிகேஷனை வாங்கிப் பார்த்தால்... அதில் தமிழ் ஆசிரியர்
18 பேர்தான். அந்த 18-ல் ஒண்ணுகூட எஸ்.சி.க்கு கிடையாது. எப்படியாவது
டி.ஆர்.பி.யில் பாஸ் பண்ணணும்னு கஷ்டப்பட்டு படிச்சான். கிடைக்காதுனு
தெரிஞ்சதும் நொறுங்கிப் போனான். விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு
செத்துட்டான். அவன் செத்துட்டான்... இன்னக்கி ரெண்டாம் நாள்... நாளைக்கு
மறந்து விடுவோம். பூமிநாதன் மாதிரிதான் நாங்களும்... எங்க கதி?''
கண்களில் திரண்ட ஈரத்தைத் துடைத்துக் கொண்டார் புலவர் சந்திரசேகர்.

தமிழ்மொழி செம்மொழி. ஆனாலும் சொந்த நாட்டின் நீதிமன்றத்திலும் பாராளு
மன்றத்திலும் நுழையும் தகுதி தமிழுக்கு கிடை யாது. தமிழ் மக்களுக்கு
வருமானத்தை தரும் தகுதியும் தமிழுக்குத் தரப்படவில்லை. பூமிநாதன் களின்
புதைகுழியில் கூடி நின்று கோஷம் போடலாம் ""தமிழ் வாழ்க!''.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்

சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படியே குறித்த தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எனினும் அரசாங்கம் மே 18 ஆம் திகதி மோதல் ஒன்றின் போது நடேசன்,புலிதேவன் மற்றும் ரமேஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெல்லமுள்ளிவாய்க்காலில் 100க்கு 100 மீற்றர் பிரதேசத்திற்குள் அகப்பட்டிருந்தபோதே இடம்பெற்றது என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக இராணுவத்தளபதி கருத்து கூற மறுத்துள்ளார்

சரத் பொன்சேகாவின் இந்த தகவல் தொடர்பில், 58 வது படையணித்தளபதி சவேந்திர சில்வாவும், இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரியவும் தமது கருத்தை தெரிவிக்க மறுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

எனினும் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், தமக்கு கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் சரணடையப் போகும் விருப்பத்தை தொலைபேசி மூலம் அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்

அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள், சரணடையப் போவதாக நோர்வே தரப்பு தமக்கு அறிவித்ததாக இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். எனினும் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதி நாட்களில் உரியவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளராக இருந்தவரும் தற்போது ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதருமான பாலித கோஹன, செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கையில், நடேசனிடம் இருந்தும் புலிதேவனிடம் இருந்தும் பல செய்திகளை பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, சமபவத்தின் போது, 58 வது படையணி தளபதி சவேந்திர சில்வாவுடன் இருந்த ஊடகவியலாளர்களே தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற விடயத்தை கூறியதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரே சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக அந்த ஊடகவியலாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவும் மறுப்பு

சரத் பொன்சேகாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, தாம் நோர்வே தரப்பிடம் இருந்து புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெற்றிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று தலைவர்கள் சரணடையப்போவதான தகவலை அறிந்திருக்கவில்லையா என பசில் ராஜபக்சவிடம் கேட்டபோது, இல்லை. தாம் அவ்வாறு கூறவில்லை.ஆனால் நோர்வே தரப்பினர் தம்முடன் தொடர்புக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இது தொடர்பான செய்தி எதனையும் நீங்கள் வழங்கவில்லையா? என அவரிடம் கேட்டபோது நோர்வே தம்முடன் தொடர்புகொள்ளாத முதல் விடயம் நடக்காத போது, இரண்டாவது விடயமும் நடந்திருக்க வாய்ப்பில்லை என பதிலளித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் செய்திகள் தொடர்பாக இலங்கையின் ஆங்கில ஊடகம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.