புதன், 30 செப்டம்பர், 2009

பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.

இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சனி, 19 செப்டம்பர், 2009

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை : இந்திய அரசைக் கண்டித்து மதுரையில் (30.09.09) அன்று ஆர்ப்பாட்டம் : பெ.மணியரசன் அறிக்கை

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட

ஒப்புதல் அளித்த இந்திய அரசைக் கண்டித்து

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் ஆர்ப்பாட்டம்
 
தஞ்சை, 15.09.09.

 

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிதாக அணை கட்ட கேரள அரசுக்கு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழகத்தின் சட்டப்படியான உரிமையை சட்டத்திற்குப் புறம்பான வழியில் பறிப்பதாகும். இந்திய அரசின் இச்செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

2006-ம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இப்பொழுதுள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது; முதற்கட்டமாக 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் வலுப்படுத்தும் பணிகள் சிலவற்றைச் செய்தபின் முழு அளவான 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்த கேரள அரசு முரட்டுத்தனமாக மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த இந்திய அரசு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை.

 

இப்பொழுதுள்ள அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்குத் தடை கோரித் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

 

இந்நிலையில், கேரள அரசு முல்லைப்பெரியாற்றில் புதிய அணைகட்ட வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம் என இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ஆட்சியாளர்களே இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் உடைப்பதாக உள்ளது.

 

நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். நடுவண் அரசின் முக்கியத்துறைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தமிழக உரிமைகளுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

 

காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர், ஈழத்தமிழர் உள்ளிட்ட எல்லாச் சிக்கல்களிலும் இந்திய ஆட்சியாளர்களும், இந்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு  வருகிறார்கள் என்பதைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்.

 

இந்தியாவுக்குள் உள்ள ஒரு மாநில மக்களை எதிரிகள் போல் இந்திய ஆட்சியாளர்களும், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 

செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணைகட்டுவது என்பது, முற்றிலுமாக முல்லைப்பெரியாறு உரிமையைத் தமிழகத்திற்கு இலல் hமல் செய்வதற்கான சூழ்ச்சித் திட்டம் தவிர வேறு அல்ல.

 

வெள்ளையர் ஆட்சியில் 999 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் தமிழகத்திற்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்காகவே புதிய அணை என்று கேரள அரசு வலை விரிக்கிறது.

 

பழைய அணையை இடித்தபின், 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பழைய அணைக்குத்தானே தவிர புதிய அணைக்கு இல்லை என்று கேரள அரசு கைவிரித்துவிடும். புதிய அணையும் உடனடியாகக் கட்டாது.

 

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குப் பாசன நீர் இல்லாமல் போகும் குடிநீரே இல்லாமல் போகும். தண்ணீர் வரத்தின்றி வைகை அணை முற்றிலும் வற்றி விடும்.

 

எனவே இந்திய அரசு உடனடியாக, கேரளத்திற்குக் கொடுத்துள்ள ஒப்புதலை இரத்துச்செய்து, செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்க ஆணை இடவேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும்.

 

முல்லைப்பெரியாற்றில் இப்பொழுதுள்ள அணையை இடிக்க வகை செய்யும் சூழ்ச்சித்திட்டமான புதிய அணைகட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த இந்திய அரசை எதிர்த்து மதுரையில் 30.09.2009 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 




--
Thanks and Regards...
                           K.ANAND B.Sc(Agri).,
                           145,Aravindar street,
                           pondicherry- 605001.
                           +91 9940800358
                      anand_1028@yahoo.co.in

இலங்கையின் சதிவலை! – தினமணி ஆசிரியர் தலையங்கம்

கடந்த புதன்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கிளம்பிய 543 மீன்பிடிக்கும் விசைப் படகுகளில் 538-தான் வியாழனன்று ராமேஸ்வரம் திரும்பி இருக்கிறது. ஐந்து படகுகளை இலங்கையில் கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததுடன் நில்லாமல் அதிலிருந்த மீனவர்களையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். 

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களைத் தாக்குவதும், தங்களது எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறிக் கைது செய்வதும் இலங்கைக் கடற்படையினருக்குப் புதிய விஷயமொன்றும் அல்ல. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் நான்கு பேர் மட்டுமே மன்னாரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 17 பேரின் கதி என்ன என்பது ராஜபட்ச அரசுக்குத்தான் வெளிச்சம்.  இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து மீன்பிடிப்பதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதிதான் மீண்டும் கடலுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களது 22 நாள் போராட்டம் இலங்கை அரசு தந்த உறுதிமொழியைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் முடிவுக்கு வந்தது. நான்கே நாள்களில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

தூத்துக்குடி பகுதிகளில் மீனவர்கள் அநேகமாகத் தங்களது தொழிலை நிரந்தரமாக விட்டுவிட்ட நிலைமை. ராமேஸ்வரத்திலோ, நித்திய கண்டம் பூரண ஆயுசாகக் கடலுக்குள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இந்த மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும், இவர்களைப் பிடித்து வைப்பதும் விடுதலைப்புலிகள்தான் என்று குற்றம்சாட்டித் தப்பித்து வந்தது இலங்கை அரசு. தங்கள்மீது பழி போடுவதற்காக மீனவர்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்த நிகழ்வுகள் ஏராளம், ஏராளம்.  போதாக்குறைக்கு, இந்திய அரசும் இந்த அப்பாவி மீனவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி செய்கிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருள்களைக் கடத்திச் சென்று கொடுக்கிறார்கள் என்றும் சந்தேகப்பட்டது.

இப்போதுதான், இலங்கையில் அமைதி ஏற்பட்டு விட்டது என்று பெருமை பாராட்டிக் கொள்கிறார்களே… விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று எக்காளமிடுகிறார்களே… அப்படியானால், இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? வேண்டுமென்றே இம்சிக்கப்படுகிறார்கள்?

""மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணிஅணியாக வந்துள்ளனர். இதைக் கண்டு அச்சமுற்ற தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை அவசர அவசரமாகக் கரைக்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.  அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசியுள்ளனர். மீனவர்களைத் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச் சம்பவம் அல்ல இது. இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன~இது தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பு. அதாவது, அரசே ஒத்துக்கொண்டிருக்கும் விஷயம்.

தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இந்தியக் கடற்கரை ஓரமாக மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலைமை. ஆழ்கடலில் நள்ளிரவில், இது எங்கள் எல்லைக்கு உள்பட்டது என்று இலங்கைக் கடற்படை கூறும்போது அப்பாவி மீனவர்கள் என்னதான் செய்ய முடியும்? கச்சத்தீவில் வலைகளை உலர்த்தும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருக்குமானால், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும் உண்டு என்பதுதானே பொருள்?  இலங்கைக் கடற்படையின் உண்மையான நோக்கம் மீனவர்களைத் தாக்குவது அல்ல.

இந்த மீனவர்களைத் தாக்கும்போது, தமிழகம் கோபத்தில் கொந்தளிக்க வேண்டும். அப்போது மத்திய அரசு, அண்டை நாடான இலங்கையைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டும் காணாமலும் இருந்து தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். இதில் இலங்கை அரசுக்கு ஒரு குரூர சந்தோஷம்.  "உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதை நிறுத்திவிட்டு, கச்சத்தீவை மீட்டெடுக்க, நமது மீனவர்களின் உரிமையை நிலைநிறுத்த, எல்லாவற்றிற்கும் மேலாக, இந்து மகா சமுத்திரப் பகுதிகளில் இந்தியாவின் மேலாண்மையை நிலைநாட்டக் குரல் எழுப்ப வேண்டிய நேரமல்லவா இது?  இது மீன்பிடிப்பதற்குப் போடப்படும் தடை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசால் வீசப்படும் சதி வலை!

நன்றி: தினமணி